Published:Updated:

காத்துவாக்குல ரெண்டு காதல் - சினிமா விமர்சனம்

நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா

சிக்கலான கதையைத் தூக்கித் தாங்குவது அனிருத்தின் இசையே!

காத்துவாக்குல ரெண்டு காதல் - சினிமா விமர்சனம்

சிக்கலான கதையைத் தூக்கித் தாங்குவது அனிருத்தின் இசையே!

Published:Updated:
நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா

சதா துரதிர்ஷ்டம் துரத்தும் ஒரு சாமானியனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு காதல்கள் வாய்க்கப்பெற்றால்... அதுதான் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்.’

ஊரில் விஜய் சேதுபதியின் குடும்பத்திற்கென ஒரு ராசியுண்டு. ஒன்று குடும்பத்தில் யாருக்கும் திருமணம் நடக்காது. அப்படியே திருமணமானாலும் அது நெடுநாள்கள் நிலைக்காது. இப்படியான குடும்பத்தில் பிறந்த விஜய்சேதுபதி சிறுவயதிலிருந்தே ‘ராசியல்லாதவன்’ எனப் பெயர் வாங்குகிறார். ஒருகட்டத்தில் அதை நம்பத் தொடங்கும் அவர், தன் ராசியால் அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என ஊரை விட்டே ஓடிப்போய்விடுகிறார். ஆண்டுகள் உருண்டோடினாலும் வி.சே-யின் ‘அதிர்ஷ்டம்’ மட்டும் மாறவே இல்லை. இந்த நிலையில் ஒரேநாளில் நயன்தாரா, சமந்தா இருவருமே வி.சே-யிடம் ப்ரபோஸ் செய்ய, இத்தனை நாள்களாய் வாராமலிருந்த நல்லநேரம் வந்துவிட்டதாய் எண்ணி இரண்டுபேரையும் காதலிக்கிறார். அதன்பின் மூவருக்குள்ளும் நிகழும் ஊடலும் கூடலும் மோதலும்தான் கதை.

காத்துவாக்குல ரெண்டு காதல் -  சினிமா விமர்சனம்

விஜய்சேதுபதிக்கு இது முன்னரே அவர் சிக்ஸர்கள் அடித்துப் பழகிய பிட்ச் என்பதால் அசால்ட்டாய் ஸ்கோர் செய்கிறார். கண்களில் குறும்பும் உடல்மொழியில் நெகிழ்வுமாய் அவரைப் பார்க்க நன்றாக இருக்கிறது. நயன்தாரா - தோற்றத்திலும் நடிப்பிலும் பார்ப்பவர்களின் கண்மணியாகவே மாறிப்போகிறார். கலகலப்பும் காதலுமாய் வளைய வரும் சமந்தா இந்தப் படத்தின் எனர்ஜி பேக்கேஜ். இவர்களின் கெமிஸ்ட்ரியே படத்தின் பெரும்பலம். அந்தப்பக்கம் காமெடியில் பாஸ்மார்க் வாங்குவது மாறன் மட்டுமே.

சிக்கலான கதையைத் தூக்கித் தாங்குவது அனிருத்தின் இசையே! பாடல்காட்சிகளில், பின்னணி இசைக்கோப்பில் என எங்கும் எதிலும் அனிருத் முத்திரை.

எஸ்.ஆர். கதிர், விஜய் கார்த்திக் கண்ணன் இருவரின் ஒளிப்பதிவும் படத்தை இளமைத் துள்ளலோடு நம் கண்முன் நிறுத்துகிறது. அனுவர்தன், தினேஷ் மனோகரன், ப்ரீத்தம் ஜுகல்கர் கூட்டணியின் ஆடை வடிவமைப்பும் இதற்குப் பக்கபலம். ஒருபடமே பார்ட் 1, பார்ட் 2 ரேஞ்சுக்கு அயர்ச்சியூட்டுவதால் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நக்கலும் நையாண்டியும்தான் விக்னேஷ்சிவன் ஸ்பெஷல். அது முதல்பாதியில் நன்றாகவே எடுபடுகிறது. ஆனால் இரண்டாம்பாதிக் காட்சியமைப்புகள் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை ஒரேமாதிரி பேசுவதால் சலிப்பு தட்டிவிடுகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் -  சினிமா விமர்சனம்

கதையை யார் கோணத்தில் நகர்த்துவது என்பது இயக்குநரின் விருப்பமே. ஆனால் முக்கோணக் காதல் கதையில் முழுக்க முழுக்க ஆணாதிக்கப் பார்வையில் படம் நகர்வதுதான் சிக்கல். ஒரு காதலியிடம் மற்றொரு காதலியை மறைத்து சமாளிக்கும் வி.சே-யிடம் அதுபற்றிய குறைந்தபட்ச குற்றவுணர்வுகூட இல்லாதது அவரின் கதாபாத்திர வரைவையே மோசமான பிம்பமாக்குகிறது. போக, கண்மணி, கதீஜா இருவரின் உணர்ச்சிகளும் காமெடியாய் டீல் செய்யப்பட்டிருப்பதும் உறுத்தல்.

மூன்று பேருக்குமிடையே சமமாய் இருப்பதாய்ச் சொல்லப்படும் காதலை உண்மையிலேயே சமமாய் அணுகியிருந்தால் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ கவர்ந்திருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism