Published:Updated:

` புதிய கல்விக்கொள்கை குறித்து ரஜினி பேசியிருந்தால், மோடி கேட்டிருப்பார்!’ - பாடலாசிரியர் கபிலன்

உ. சுதர்சன் காந்தி.
கலிலுல்லா.ச

நடிகர் சூர்யாவின் புதியக்கல்விக்கொள்கை தொடர்பான பேச்சு விவாதமாக மாறியுள்ள நிலையில், அவரது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடலாசியர் கபிலன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

காப்பான் இசை வெளியீட்டு விழா
காப்பான் இசை வெளியீட்டு விழா

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் மூன்றாவது படம் காப்பான். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். அதுமட்டுமின்றி, ஆர்யா, மோகன்லால், சைகல், இரானி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வைரமுத்து படத்துக்கு பாடல் எழுதியுள்ளார். இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இசைவெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சூர்யா - ரஜினி
சூர்யா - ரஜினி

இசைவெளியீட்டு விழாவின் போது பேசிய வைரமுத்து,`` இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல.. தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர். சினிமாத் துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காது, எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறினார். `காப்பான்’ படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன் பேசுகையில்,`` புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியதை, நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தால், அதை பிரதமர் மோடி கேட்டிருப்பார்” என்று விழாவில் ரஜினிக்கு முன்பாகவே தனது கருத்தைப் பதிவு செய்தார்.