Published:Updated:

`` `பரோட்டாவுக்காக விஷத்தைக் குடிக்கப் பார்த்தியேடீ'னு திட்டினாங்க!" - தீபாவின் `டாக்டர்' கதை

சிவகார்த்திகேயனுடன் தீபா

`கடைக்குட்டி சிங்கம்' தீபா, விஜய் டிவி-யின் நட்சத்திர முகமாகவும் மாறிவிட்டார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகும் `டாக்டர்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த அனுபவம் குறித்து தீபாவிடம் பேசினோம்.

`` `பரோட்டாவுக்காக விஷத்தைக் குடிக்கப் பார்த்தியேடீ'னு திட்டினாங்க!" - தீபாவின் `டாக்டர்' கதை

`கடைக்குட்டி சிங்கம்' தீபா, விஜய் டிவி-யின் நட்சத்திர முகமாகவும் மாறிவிட்டார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகும் `டாக்டர்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த அனுபவம் குறித்து தீபாவிடம் பேசினோம்.

Published:Updated:
சிவகார்த்திகேயனுடன் தீபா

சினிமா, சின்னத்திரை என கலந்துகட்டி திறமையை வெளிப்படுத்திவருகிறார் `கடைக்குட்டி சிங்கம்' தீபா. வயது வித்தியாசமின்றி எல்லோருக்குமே `தீபா அக்கா'வாகப் பரிச்சயமாகியிருப்பவர், விஜய் டிவி-யின் நட்சத்திர முகமாகவும் மாறிவிட்டார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகும் `டாக்டர்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். தனது சினிமா வளர்ச்சிக்கு இந்தப் படம் பெரிதும் கைகொடுக்கும் எனப் பெரும் ஆவலுடன் காத்திருப்பவரிடம், `டாக்டர்' பட அனுபவம் குறித்துப் பேசினோம்.

தீபா
தீபா

``ரெண்டு வருஷத்துக்கு முன்பு, சிவகார்த்திகேயன் தம்பியோட புரொடக்‌ஷன் கம்பெனியிலேருந்து அழைப்பு வந்துச்சு. அங்க டைரக்டர் நெல்சன் சார் இருந்தார். `வெகுளித்தனமான காமெடி கேரக்டர் ஒண்ணு இருக்கு. நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்னு நினைக்குறோம்'னு சொல்லி சில வசனங்களைப் பேசிக்காட்டச் சொன்னார். அங்கிருந்தவங்க சொன்ன மாதிரியே நடிச்சுக் காட்டினேன். உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. அப்புறமா ஷூட்டிங் போனப்போதான், முதன்முறையா சிவகார்த்திகேயனைச் சந்திச்சேன். அந்த முதல் சந்திப்பின்போது, `திடுக்'னு எழுந்திரிச்சு அவருக்கு வணக்கம் சொன்னேன். `இயல்பா என்கிட்ட பேசுங்கக்கா. ஸ்பெஷல் மரியாதையெல்லாம் வேண்டாம்'னு அடக்கமா சொன்னார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`டாக்டர்' படத்துல கிட்டத்தட்ட ஒரு மாச காலம் நடிச்சேன். இதுவரைக்கும் வேற எந்தப் படத்துலயும் இத்தனை நாள்களும், அதிகமான சீன்ஸ்ல வர்ற மாதிரியான முக்கியமான ரோல்லயும் நான் நடிக்கல. ஹீரோயின் வீட்டுப் பணியாளர் ரோல்ல நடிச்சிருக்கேன். படம் முழுக்கவே சிவாவுடன் நானும் டிராவல் பண்ணுவேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எந்தப் பாகுபாடும் இல்லாம எல்லோருமே ஒண்ணா உட்கார்ந்து அரட்டை அடிப்போம். கேரவனை அதிகம் பயன்படுத்தாம, எல்லார்கிட்டயும் ஜாலியா பேசி சிரிச்சுகிட்டிருப்பார் சிவகார்த்திகேயன். அவரை ஒரு நடிகர் மாதிரியெல்லாம் ஒருநாள்கூட நான் உணரல.

'டாக்டர்' டீம்
'டாக்டர்' டீம்

நம்மள்ல ஒருத்தர் மாதிரிதான் எல்லோர்கிட்டயும் ரொம்பவே இயல்பா பழகினார். அவர் செஞ்ச ஒரு விஷயத்தை இப்பவரைக்கும் என்னால மறக்க முடியல. படத்துல முக்கியமான சில காட்சிகளை கோவாவுல ஷூட் பண்ணாங்க. அப்போ படக்குழுவுல சிலர் ஒண்ணா சேர்ந்து சில நாள்கள் அவுட்டிங் போனோம். ஓர் இடத்துல ஐஸ் வாங்கிச் சாப்பிட்டோம். நான் சாப்ட்டுகிட்டிருந்த ஐஸ்ஸை வாங்கி கூச்சம் பார்க்காம சாப்பிட்டார் சிவா. அதிர்ச்சியாகி, `என்ன தம்பி... நீங்க பிரபலமான ஹீரோ. என்கிட்டேருந்து வாங்கிச் சாப்பிடுறீங்க?'ன்னு அவர்கிட்ட கேட்டேன். `என் அக்காகிட்டேருந்து வாங்கிச் சாப்பிட எதுக்குக் கூச்சப்படணும்'னு கேட்டார். அப்போ உண்டான வியப்பு, இப்போவரை எனக்கு அகலவேயில்ல" என்று தனக்கே உரிய வெள்ளந்தியான இயல்புடன் கூறிச் சிரிக்கிறார் தீபா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் பலரையும் வயிறுமுட்ட சிரிக்க வைத்திருக்கும் தீபா, சிவாவின் மனைவி ஆர்த்தியின் அன்பையும் பெற்றிருக்கிறார். அதுகுறித்துப் பேசுபவர், ``சிவா தம்பியோட மனைவி ஆர்த்தி, நான் நடிச்ச சில சீரியல்களையும், என்னோட சில பேட்டிகளையும் பார்த்திருப்பாங்கபோல. என் பேச்சும் குணமும் அவங்களுக்கு என்மேல பிரியத்தை ஏற்படுத்தியிருக்கு. கோவாவுல ஷூட்டிங் நடந்தப்போ சிவாவுக்குப் பிறந்தநாள் வந்துச்சு. அப்போ ஆர்த்தியும் அங்க வந்தாங்க.

Deepa with Doctor team
Deepa with Doctor team

கூடப்பிறந்த தங்கச்சி மாதிரி என்கிட்ட ரொம்பவே பாசமா பழகின ஆர்த்தி, பக்கத்துல உட்கார்ந்து வாஞ்சையா எனக்குச் சாப்பாடு பரிமாறி உபசரிச்சாங்க. `இனி உங்களுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்'ன்னு நம்பிக்கையாவும் பேசினாங்க. ஆர்த்தி தங்கச்சி வெளிப்படுத்தின அன்புக்கு, அப்படி என்ன நான் செஞ்சுட்டேன்னு எனக்கு ஆச்சர்யம் தாங்கல." - படப்பிடிப்பில் நடந்த சென்டிமென்ட் நிகழ்வை நெகிழ்ச்சியாகக் கூறும் தீபா, அடுத்துப் பகிர்ந்தது, `என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா!' ரக காமெடி.

``என் வாழ்க்கையே காமெடிதான். அதுல நடந்த பல விஷயங்களும் ஏன், எதுக்கு, எப்படி நடந்துச்சுன்னு காரணம் தெரியாம புலம்புவேன். அதுல சில விஷயங்களை, `டாக்டர்' பட ஷூட்டிங்ல எல்லோர்கிட்டயும் பகிர்ந்துகிட்டேன். நான் பருவத்துக்கு வந்து ரெண்டாவது நாள். அம்மாவும் அப்பாவும் வழக்கம்போல அன்னிக்கும் வேலைக்குப் போயிட்டாங்க. சின்ன வயசுலேருந்தே நான் சாப்பாட்டுப் பிரியை. அன்னிக்குன்னு பார்த்து எனக்கு பரோட்டா சாப்பிடணும்னு ஆசை வரவே, என்னோட அண்ணன்கிட்ட வாங்கித் தரச்சொல்லிக் கேட்டேன்.

'கடைக்குட்டி சிங்கம்' தீபா
'கடைக்குட்டி சிங்கம்' தீபா

பாத்ரூம் கழுவுற கெமிக்கல் மருந்து பக்கத்துல இருந்துச்சு. `இதை எடுத்துக்குடி. வாங்கித் தர்றேன்'ன்னு விளையாட்டா அவன் சொன்னான். கொஞ்சம்கூட யோசிக்காம அந்த கெமிக்கல் மருந்தை எடுத்து `படக்'னு மொத்தத்தையும் குடிச்சுட்டேன். உசுருக்கு ஆபத்தான நிலையில ஆஸ்பத்திரியில ட்ரீட்மென்ட் எடுக்குற அளவுக்கு வினையாகிடுச்சு. `ஏதாச்சும் காதல் தோல்வியா? பரீட்சையில ஃபெயில் ஆகிட்டியா?'ன்னு டாக்டர் கேட்க, பரோட்டாவுக்காக இப்படிப் பண்ணிட்டேன்னு சொன்னேன்.

சுத்தியிருந்த எல்லாருமே விழுந்து விழுந்து சிரிச்சாங்க. `பரோட்டாவுக்காக விஷத்தைக் குடிக்கப் பார்த்தியேடீ. உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு'ன்னு வீட்டுல பயங்கரமா திட்டினாங்க. இந்த விஷயத்தை நான் சொல்லி முடிச்சதும், சிவா தம்பி உட்பட படக்குழுவினர் எல்லாருமே கண்ணுல நீர் முட்ட சிரிச்சுகிட்டே இருந்தாங்க" என்பவருக்கு, `அண்ணாத்த' பட வாய்ப்பைத் தவறவிட்டதில் பெரிய வருத்தம்.

தீபா
தீபா

`` `டாக்டர்' படத்துல நடிச்சுகிட்டிருக்கும்போதுதான் `அண்ணாத்த' படத்துல நடிக்குற வாய்ப்பு எனக்கு வந்துச்சு. இதைப் பத்தி அந்தப் படக்குழுவினர் சிலர்கிட்ட சொன்னேன். ஆனா, கால்ஷீட் பிரச்னை வரும்னு அவங்க சொன்னாங்க. அதனால, `அண்ணாத்த' படத்துல என்னால நடிக்க முடியல. ஒருமுறை இந்த விஷயத்தைப் பத்தி நெல்சன் சார்கிட்ட சொன்னேன். `தலைவர் பட வாய்ப்பு வந்திருக்கு. இதை ஏன் என்கிட்ட நீங்க சொல்லல? எனக்குத் தெரிஞ்சிருந்தா, `அண்ணாத்த' படத்துல உங்களை நடிச்சுட்டு வரச் சொல்லியிருப்பேன்'னு சொன்னார்.

அவரும்கூட செம ஜாலி டைப்தான். எல்லா ஆர்ட்டிஸ்டுகளையும் அவரவர் போக்குல நடிக்க விட்டுடுவார். அதுல ஏதாச்சும் கரெக்‌ஷன் இருந்தா மட்டும்தான் மாத்திக்கச் சொல்லுவார். ரயில்ல போகுற ஒரு சீன்ல, போலீஸா நடிச்சிருக்கும் ஒரு தம்பியோட மடியில நான் உட்காரணும். அப்போ நான் சிரிப்பு காட்டிட்டேன். புரையேறுற அளவுக்கு சிரிச்சார் நெல்சன் சார். சில சீன்ஸ்ல கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செஞ்சுடுவேன். அதைத் தன்மையா என்கிட்ட சொல்லி, அவர் எதிர்பார்க்குற விதத்துல என்னை நடிக்க வெச்சார். பெரிய படத்துல நடிச்ச சந்தோஷத்துடன், நல்ல குழுவினருடன் வேலை செஞ்ச நிறைவும் எனக்குக் கிடைச்சது" என்று பெருமிதமாகக் கூறுபவர், வாராவாரம் பன்முகத்தன்மை காட்டும் சின்னத்திரை அனுபவம் குறித்துப் பேசினார்.

'மிஸ்டர் அண்டு மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் கணவருடன் தீபா...
'மிஸ்டர் அண்டு மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் கணவருடன் தீபா...

``என்னையெல்லாம் டிவி-யில காட்ட மாட்டாகளானு ஏங்கித் தவிச்ச நான், இப்போ அடிக்கடி டிவி-யில வர்றது ஆச்சர்யமா இருக்கு. `மிஸ்டர் அண்டு மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியிலயும், `காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியிலயும் போட்டியாளரா தேர்வானப்போ, `திறமையான போட்டியாளர்கள் பலர் இருக்காங்க. இவங்க எல்லோருக்கும் ஈடுகொடுத்து, நம்மால நிகழ்ச்சியில பாதியளவுக்காவது போக முடியுமா?'ன்னு சின்னத் தயக்கத்துடனும் பயத்துடனும் இருந்தேன்.

அந்த நிகழ்ச்சிகளின் இயக்குநர்களும், சக போட்டியாளர்களும் சப்போர்ட்டிவ்வா இருக்காங்க. அதனாலதான், மாசக்கணக்காகியும் போட்டியாளரா இன்னும் தொடர முடியுது. எல்லோருக்கும் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்போம்" என்கிறார் தன்னடக்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism