
அஸீம் முகமது - ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப்பின் கேமரா கேரள நிலப்பரப்பின் அழகை அள்ளிவந்திருப்பதுடன் கதை முடிச்சுகளைப்போன்ற மலைச்சரிவுகளில் அலுக்காமல் பயணித்திருக்கிறது
பழிவாங்கும் வன்முறை மனம், பரம்பரை மானத்தைக் காப்பாற்றத் துடிக்கும் குணம் - இவை எதுவுமில்லாமல் ‘சாதா வாழ்க்கை’ வாழ நினைக்கும் ஒருவனின் வேட்கையே ‘கடைசீல பிரியாணி.’
பெரிய பாண்டி, இள பாண்டி, சிக்கு பாண்டி மூவரும் சகோதரர்கள். பரம்பரை பரம்பரையாக அடிதடி சண்டையும் ஆயுதங்களும் ரத்தமுமாக வாழும் குடும்பத்தில், பாண்டியின் அப்பா மட்டும் இவற்றிலிருந்து விலகி அமைதியாக கேரள எல்லையில் தொழில் செய்கிறார். ஆனால் அவரை அரசியல் செல்வாக்குள்ள ஒரு பெரிய மனிதர் கொலை செய்துவிட, பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று பெரிய பாண்டி, இள பாண்டி, அவர்களின் அம்மா ஆகியோர் துடிக்கிறார்கள். ஆனால் ‘இது எல்லாம் வேண்டாம்’ என்று ஒதுங்கிநிற்கும் சிக்கு பாண்டியையும் இழுத்துக்கொண்டு கொலைசெய்யச் செல்கிறார்கள் பாண்டி சகோதரர்கள். பழிவாங்கல் நிகழ்ந்ததா, அது என்னென்ன விபரீதங்களையெல்லாம் கூடவே அழைத்துவந்தது என்பதைப் புதியவகைக் கதைசொல்லலில் விருந்தாய்ப் படைத்து மணக்கிறது இந்த பிரியாணி.

ஒரு ட்வீட்டுக்குள் அடங்கிவிடக்கூடிய எளிதான கதைதான். ஆனால் அதைச் சொன்னவிதத்தில்தான் இந்தப் படம் தனித்துநிற்கிறது. எந்தச் சிக்கலுக்குள்ளும் மாட்டாத சராசரி வாழ்க்கை சுலபமானது என்று நினைக்கிறோம். ஆனால் சிலருக்கு அது எளிதில் அமைந்துவிடுவதில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கை என்பது எப்படி தன்னளவிலேயே நாம் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட சுவாரஸ்யமானது என்பதையும், சின்னச்சின்ன அபத்தங்கள் பெரிய முடிவுகளுக்கு எப்படிக் கொண்டுபோய் விடுகிறது என்பதையும் விவரிக்கும் கதைசொல்லல் இந்தப் படத்தின் பலம். எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு பகடி, மேகத்தின் நிழல்போல் தொடர்வது இனிது. அதிலும் ‘அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்குதல்’ என்ற அலுத்துப்போன இந்திய சினிமா ஃபார்முலாவைச் சில விநாடிகளில் பகடிக்குரிய பொருளாக மாற்றிவிடுவது இந்தப் படத்தின் தனித்துவம்.
பிளாக் ஹியூமர் படங்களுக்கே உரிய கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களுக்கான உடல்மொழியைச் செதுக்கியதிலும், மிகச்சிறிய கதாபாத்திரங்கள் மூலம் சுவாரஸ்யமான கதையைச் சொன்னவிதத்திலும் கவர்கிறார் அறிமுக இயக்குநர் நிஷாந்த் களிதிண்டி. படத்தில் மிகச்சில பெண் பாத்திரங்கள்தான். அதிலும் இரு பெண்கள் அலைபேசிக்குரல்கள் வழியில்தான் நமக்கு அறிமுகமாகிறார்கள். பாண்டி சகோதரர்களின் அம்மா, பழிவாங்கி சபதம் நிறைவேற்றுவதில் குறியாக இருக்கிறார். பிரசவத்துக்குக் காத்திருக்கும் பெரிய பாண்டியின் மனைவியோ ‘எந்தப் பழிவாங்கலும் வன்முறையும் வேண்டாம்’ என்று மன்றாடுகிறார். இப்படி ஒவ்வொரு பாத்திரத்துக்குமான தனித்துவத்தில் கவனம் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் ஒவ்வொரு நடிகருமே மனதில் நிற்கும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒருபுறம் வன்முறை ரத்தத்தில் ஊறிப்போன மூர்க்கம், இன்னொருபுறம் தன் தம்பியைச் சீண்டிக் கிண்டலடிக்கும் எகத்தாளம் என்று பெரிய பாண்டியாக வசந்த் செல்வம், எப்போதும் எதையாவது ஒன்றைத் தவறவிட்டுவிட்டுத் தவிக்கும் இள பாண்டியாக தினேஷ் மணி அசத்தியிருக்கிறார்கள். ‘சீக்குக்கோழி’யாக சிக்குபாண்டி கேரக்டரில் முதலிலிருந்து கடைசிவரை பாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார் விஜய் ராம். ஊரையே அச்சத்தில் நடுங்கவைக்கும் சைக்கோ கொலைகாரனாக ஹக்கிம் ஷாஜகான். அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுவது, தனக்கே உரிய தனித்துவத்துடன் கொலைகள் செய்வது, எந்த முடிவையும் எளிதாக எடுப்பது, எல்லோரையும் அலட்சியத்துடன் கையாள்வது என ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். லாரி டிரைவராக வரும் ரிஷப், அவரின் மகனான அகஸ்டின் ஆர்.கெவின் சில காட்சிகளே வந்தாலும் நிறைவான நடிப்பைத் தந்திருக்கி றார்கள். விஜய்சேதுபதியும் முக்கியமான இரண்டு பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்.
அஸீம் முகமது - ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப்பின் கேமரா கேரள நிலப்பரப்பின் அழகை அள்ளிவந்திருப்பதுடன் கதை முடிச்சுகளைப்போன்ற மலைச்சரிவுகளில் அலுக்காமல் பயணித்திருக்கிறது. வினோத் தணிகாசலத்தின் பின்னணி இசையும் ஜூடா பால் - நெய்ல் செபாஸ்டின் இணையின் அடிஷனல் ஸ்கோரும் படம் முழுக்க மூச்சிரைக்க ஓடியிருக்கிறது. கொஞ்சம் முன்பின்னாகப் பயணிக்கும் கதையைக் கச்சிதமாகத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் இக்னேஷியஸ் அஸ்வின். துல்லியமான ஒலி வடிவமைப்பால் அந்நிலப்பரப்புகளின் இயல்பைக் கடத்துகிறார்கள் வினோத் தணிகாசலமும் ஜிதின் மோனியும்!

அருவருப்பான பெயர்களில் பட்டப்பெயர் வைப்பது, மிகமிகத் தாமதமாக லெமன்சோடா போடும் பாட்டி, சவப்பெட்டியில் உறங்கும் மனிதன் என்று சின்னச்சின்ன சுவாரஸ்யங்களே படத்தை முழுமையாக்கிவிடுவதால் அழுத்தமான கதையைத் தேடும் பார்வையாளர்கள் ஏமாற்றமடையலாம். தமிழர்களை மலையாள சினிமாக்களில் ‘பாண்டிக்காரர்களாக’ மட்டம் தட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ‘பாண்டிகள்’ கேரக்டரைச் சித்திரித்த விதம் வலுச்சேர்க்கிறதோ என்ற சந்தேகமும் எழ வாய்ப்பிருக்கிறது. என்னதான் அரசியல் செல்வாக்கு இருந்தாலும் ஒருவர் தன் விருப்பத்துக்குக் கொலைகளைச் செய்து கொண்டே போய்விட முடியுமா, அதுவும் எதிர்க் கட்சித்தலைவரின் துணையுடன் என்று தர்க்கரீதியாகக் கேள்வி எழுகிறது.
ஆனாலும், வித்தியாச மான பட உருவாக்கத்தால் முதலில் இருந்து கடைசிவரை சுவையூட்டுகிறது இந்த பிரியாணி.