விரும்பாத இடத்தில் தவறான நேரத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞன் தப்பிக்க எடுக்கும் முடிவுகளே 'கடைசீல பிரியாணி. '
பாண்டியா சகோதரர்களில் கடைக்குட்டி சிக்குப்பாண்டி. முரட்டுச் சண்டைக்காரர்களும், முன்கோபிகளும் நிறைந்த வீட்டில், சிக்குப்பாண்டியை மட்டுமாவது அப்பாவியாய் வளர்க்க விரும்பி, வீட்டை விட்டு சிக்குவுடன் வெளியேறிவிடுகிறார் தந்தை. சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பது அவ்வளவு சாதாரணம் அல்லவே. சோதனைகள் துரத்துகின்றன. பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் எனக் கிளம்புகிறார்கள் பாண்டியா சகோதரர்கள். யாரைப் பழி தீர்க்கிறார்கள், அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான முறையில் அணுகி, புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது படக்குழு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிக்குப் பாண்டியாக விஜய் ராம். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் காஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். ஜோன் கரியாவாக ஹக்கிம் ஷாஜஹான். நாயாட்டு, கூடே போன்ற மலையாள படங்களில் நடித்திருப்பவர். இந்த இருவரைத் தவிர படத்தில் பல புதிய முகங்கள். பெரிய பாண்டியாக வரும் வசந்த் செல்வம் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். தனக்கு இருக்கும் அந்த வெறி ஏன் தம்பிகளிடம் இல்லை என மூர்க்கத்தோடு அணுகும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். அவர் போடும் ஸ்கெட்சுகளும் வேற லெவல். மிகவும் கேசுவலான வில்லனாக வந்து அசத்துகிறார் ஹக்கிம். இவ்வளவு கூலாக ஒரு எதிர்மறை கதாபாத்திரம் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அதிலும் சீரியஸான காட்சிகளில் அவரின் குரூர நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. அதிலும் அந்த டீசர்ட் ஜோக், செம ரகளை! படத்தின் கதை சொல்லும் நாயகனாக வருகிறார் விஜய் சேதுபதி.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅந்த ஊரிலிருக்கும் எதிர் கோஷ்டிக்கு வித்தியாசமான (?) பெயர்கள் வைப்பதில் தொடங்கி, டைட்டில் கார்டை ரெட்ரோ 80'ஸ் டிசைனில் கொண்டுவந்தது வரை அறிமுக இயக்குநராக அட சொல்ல வைக்கிறார் நிஷாந்த் களிதிண்டி. ஒரு திரைப்படத்தில் கதையும் கதை சொல்லும் விதமும்தான் பிரதானம். அதன்பின்தான் நடிகர்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது 'கடைசீல பிரியாணி'. எடுத்துக்கொண்ட பழிதீர்க்கும் கதையுடன் டார்க் காமெடியும் நன்றாக வந்திருக்கிறது. ஒரு காடு அதைச் சுற்றி நடக்கும் கதை. எந்தத் துறுத்தலும் இல்லாமல் வரும் அந்தக் காடும் காடு சார்ந்த வீடுமே ஒரு தனிக்கதை சொல்கிறது. அந்தச் சூழலிலிருக்கும் ஒலிகளை வைத்தே பின்னணி இசை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் புதியதொரு அனுபவத்தைத் தந்திருக்கிறார் பின்னணி இசை அமைத்திருக்கும் வினோத் தணிகாசலம். கதை செல்லும் போக்கில் அதை வித்தியாசமான கோணங்களில் படமாக்கியிக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஹெஸ்டின் ஜோசபும், அஜீம் மொஹமதும்.

படத்தின் பட்ஜெட் போதாமைகள் சில இடங்களில் தெரிகின்றன. அதேபோல், துருத்திக்கொண்டு தெரியும் கடைசி காட்சியும் படத்தை ஒருபடி கீழிறக்கிவிடுகிறது. மற்றபடி எடுத்துக்கொண்ட கதைக்கு, நேர்மையாக ஒரு புதிய குழு அட்டகாசமாக உழைத்திருக்கிறது. அதை சிறந்த திரை அனுபவமாகவும் மாற்றி வெற்றி கண்டிருக்கிறது.
சினிமா விரும்பிகள் பார்க்க வேண்டிய படம் இந்த 'கடைசீல பிரியாணி' . Don't miss.