பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம் - கைதி

karthi
பிரீமியம் ஸ்டோரி
News
karthi

சிறையிலிருந்து வந்து மகளை முதல்முறை பார்க்கச் செல்லும் தந்தைக்கு காவல்துறை மூலம் ஒரு அசைன்மென்ட்.

தைத் தோட்டாக்களும், ரத்தமும் சொட்ட அதிரடி, ஆக்ஷன் கதையாய்ச் சொல்கிறான் இந்தக் `கைதி.’

திருச்சி நகரின் ஒரு மூளையில் லாரி நிறைய போதைப்பொருளைப் பிடிக்கிறது போலீஸ். மற்றொருபுறம் போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் மதுவில் போதை மருந்தைச் செலுத்தி மயக்கமடையச் செய்துவிடுகிறார்கள் சிலர். இதற்கிடையே காவல் ஆணையர் அலுவலகத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் சில மாணவர்கள். இவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், இவர்களை இணைக்கும் புள்ளிகள் எனக் கைதியின் களம் பெரிது. அதை இன்ஜின் சூடு தகிக்க லாரிப் பயணமாய்க் கொடுத்திருக்கிறார்கள்.

kaithi
kaithi

பத்துப் பேரைத் தூக்கிப்போட்டுப் பந்தாடும் ஆஜானுபாகு உடல், திருநீற்று நெற்றியுடன் சுற்றித் திரியும் சிவபக்தர் என டில்லியாய் கார்த்தி. மகளின் குரலைக் கேட்க, புகைப்படத்தைப் பார்க்க அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகள் ரசிக்க வைக்கின்றன. ஸ்பெஷல் டாஸ்க் போலீஸ் அதிகாரி பிஜாயாக படம் முழுக்கப் பயணம் செய்கிறார் நரேன். கத்தி, அரிவாள், நெருப்பு என ஆக்ஷன் அத்தியாயங்களுக்கு நடுவே புது கான்ஸ்டபிள் ஜார்ஜ் மரியம், ஆசிரமத்தில் காத்திருக்கும் மகள் பேபி மோனிகா, லாரி ஓனர் தீனா, அடியாள் ரமணா போன்றோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

நான்கு மணி நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. பாடல், கதாநாயகி என எதுவும் இல்லை. இலக்கை நெருங்க நெருங்கக் காத்திருக்கும் புதிய சவால்கள், வெளிப்படும் கறுப்பு ஆடுகள் என ஒரு ஆக்ஷன் மூவிக்கான கதையைப் பரபரப்புடன் திரைக்கதையாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். படம் முழுக்கச் சண்டைதான். ஆனால் எல்லாமே வேற வேற மாதிரி என வெரைட்டி விருந்து காட்டியிருக்கிறார் அன்பறிவ். லாரியின் மற்றொரு பாகமாய்ப் பயணித்து அந்த அடர் இருள் காட்டு வழிப்பாதையில் அதகளப்படுத்தியிருக்கிறது சத்யன் சூரியனின் கேமரா. சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும், பிலோமின் ராஜின் ஷார்ப் படத்தொகுப்பும் கூடுதல் பலம் சேர்க்கின்றன.

சினிமா விமர்சனம் - கைதி

“ஜெயிலென்ன செவ்வாய் கிரகத்துலயா இருக்கு; உங்களுக்கும் எனக்கும் ஒரு செவருதான் வித்தியாசம்”, “நீங்க என்ன, ஒரு கைதிதான் போலீஸ காப்பாத்தினான்னு சொல்லவா போறீங்க’’ என பொன் பார்த்திபன் - லோகேஷின் வசனங்களில் சிரிப்பும் யதார்த்தமும் கலந்தே இருக்கின்றன.

முதல் பாதியில் விறுவிறுவெனச் செல்லும் லாரி, இரண்டாம் பாதியில் திணறுகிறது. விலகிச் செல்ல வாய்ப்புகள் வந்தாலும், ‘ஹீரோ’ கதையின் இறுதிவரை இருக்க வேண்டுமே என, கார்த்தி ஏதாவது காரணம் சொல்லித் தொடர்வது; வலிந்து திணிக்கப்படும் மகள் சென்ட்டிமென்ட் போன்றவை கதையோடு ஒட்டாமல் இருக்கின்றன. ஹை டெசிபலில் கத்தும் வில்லன், ‘ஏம்ப்பா இவரெல்லாம் வில்லனா’ போலிருக்கும் வில்லனின் அண்ணன் போன்ற சில கதாபாத்திரங்கள் இந்தப் பயணத்துக்கு இடையே வரும் ரோடு பிளாக்குகள். பர பர ஆக்ஷன் த்ரில்லரில் லாஜிக்குக்கு லீவு கொடுக்கலாம் என்றாலும், கார்த்தி இப்படி M134 மினிகன்னை எல்லாம் எடுத்து தீபாவளித் துப்பாக்கியாக்குவது காமெடி.

ஒரு பக்கா மாஸ் மசாலா படத்தின் திரைக்கதையை இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால் டபுள் அப்ளாஸ் அள்ளியிருப்பான் இந்தக் கைதி.