Published:Updated:

100 kmph... துவம்சம் செய்யும் லாரி... டாப் கியருக்கு முன்..?! - கைதி +/- ரிப்போர்ட்

போலீஸைத் துரத்தும் வில்லன் கும்பல், வில்லன்களிடமிருந்து போலீஸைக் காப்பாற்றும் ஒரு கைதி. வித்தியாசமான களத்தில் முடிந்த அளவுக்கு லாஜிக் மீறல்கள் இருக்கக்கூடாது என மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

* பல கோடி மதிப்புள்ள போதைப்பொருளை வில்லன் கும்பலிடமிருந்து கைப்பற்றுகிறார் போலீஸ் அதிகாரி நரேன். போலீஸ் கைப்பற்றிய போதைப் பொருளை மீட்க வேண்டும், ஐந்து போலீஸின் தலையைத் துண்டிக்க வேண்டும் எனக் கிளம்புகிறது, வில்லன் கூட்டம். வில்லன் கும்பலால் கட்டுப்படுத்தப்பட்ட போலீஸ் கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒரு பக்கம், போதைப் பொருள் நகரத்தில் ஊடுறுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கம் மறுபக்கம் என உடைந்த கையோடு திண்டாடுகிறார் நரேன். 10 வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகு விடுதலையாகி, மகளைப் பார்க்கப் போய்க்கொண்டிருக்கும் கார்த்தி, நரேனுக்குக் கரம் கொடுக்கிறார். ஓர் இரவு. அந்த ஒரே இரவில் அத்தனை களேபரங்கள் நடக்கின்றன. வில்லன் கும்பல் அழிந்தார்களா, போதைப் பொருள் என்ன ஆனது, கார்த்தி மகளைப் பார்த்தாரா... இருளில் தொடங்கி வெளிச்சத்தில் விடிகிறது 'கைதி'யின் களம்.

‘கோச்.... கோச்சுக்காதீங்க  கோச்ச்ச்ச்ச்ச்...!’ - பிகில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

* பாடல் இல்லை, கதாநாயகி இல்லை... ஆனால், பரபரப்புக்குப் பஞ்சமில்லாத எழுத்தால், திரைக்கதையால் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல் பாதியில் விர்ரெனப் பறக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மைலேஜ் குறைந்து தடுமாறுகிறது. குறிப்பாக, கார்த்தி ஏகே 47 எடுத்துச் சுடும் காட்சி, பப்ஜி ஃபீலிங்!

கைதி விமர்சனம்
கைதி விமர்சனம்

* 'டில்லி'யாக, கார்த்தி. 10 வருட சிறைவாசத்தின் வலியைப் பார்வையிலேயே கடத்துகிறார். வாட்ஸ்அப்பில் மகளைப் பார்த்து உருகுகிறார், வில்லன்கள் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும்போது, சிவன் பாடல் பாடுகிறார், 'என்ன பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனேன்னு கேட்கலையே' எனப் பன்ச் பேசிவிட்டு, வேட்டியை மடித்துக் கட்டி வில்லன்களை வெளுத்து வாங்குகிறார். ஆனால், அத்தனை முறை அடித்துப்போட்டாலும் எழுந்து நடப்பதும், கத்துக்குத்துக்கு சரக்கை ஊற்றிக்கொண்டு சரிசெய்துகொள்வதும்தான்... முடியல!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* போலீஸ் அதிகாரி 'பிஜோய்' கதாபாத்திரத்தில் நரேன். நல்ல தேர்வு. முதல் காட்சியில் போட்ட கைக்கட்டு கடைசிவரை தொடர்ந்தாலும், உடல்மொழியால் கவனம் ஈர்க்கிறார்.

kaithi review
kaithi review

* கமிஷனர் அலுவலம், பங்களா, காடு... மூன்றே லொக்கேஷன்கள்! அத்தனை இடத்துக்கும் நாமும் சுற்றி வருவதுபோன்ற உணர்வைக் கொடுத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகளிலும், கமிஷனர் அலுவலகத்தில் நடக்கும் களேபரங்களிலும் அவருடைய உழைப்பு அபாரம்!

* போலீஸைத் துரத்தும் வில்லன் கும்பல், வில்லன்களிடமிருந்து போலீஸைக் காப்பாற்றும் ஒரு கைதி. வித்தியாசமான களத்தில் முடிந்த அளவுக்கு லாஜிக் மீறல்கள் இருக்கக் கூடாது என மெனக்கெட்டிருக்கிறார்கள். திறக்கப்படாமல் இருக்கும் புதிய கட்டடம், பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய பில்டிங்கில் இருக்கும் சுரங்கம், கதைக்களமான திருச்சி, ரயில்வே டிராக்கில் ஸ்பீக்கர் போட்டு பாட்டுகேட்டு மாட்டிய கல்லூரி மாணவர்கள்; பிறகு அந்த ஸ்பீக்கர் பயன்படும் இடம், புதிதாக வேலைக்கு வந்த கான்ஸ்டபிளின் சாதுர்யம், வில்லன் கேங்கில் இருக்கும் போலீஸ், போலீஸ் கேங்கில் இருக்கும் வில்லன்... என ஒரு பாதியில் நல்ல டீடெய்லிங். ஆனால், இரண்டாம் பாதியில் இது முழுக்கவே மிஸ்ஸிங்!

kaithi movie review
kaithi movie review

* 'ஒரு கைதிதான் காப்பாத்துனான்னு நீங்க சொல்லவா போறீங்க', 'ஜெயிலென்ன செவ்வாய் கிரகத்துலயா இருக்கு; உங்களுக்கும் எனக்கும் சுத்தி இருக்கிற செவருதான் வித்தியாசம்', 'சாகுறதா இருந்தாலும், சண்டை போட்டுட்டுதான் சாகணும்' போன்ற வசனங்கள் படத்தோடு இணைந்து பயணிக்கிறது. பாடல்கள் இல்லை என்பதால், பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார், சாம் சி.எஸ். ஆக்‌ஷன் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள், சேஸிங்... அத்தனை ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார்.

* அத்தனை போலீஸும் சொல்லி வைத்தது மாதிரி பந்திக்கு ஆஜராவதும், மயக்கமடைவதுமான காட்சிகள், பொறுப்பாக இருந்து கவனிக்க காவல் துறையினர் கமிஷனர் அலுவலகத்தை கோயில் நடையைச் சாத்திவிட்டுக் கிளம்பும் பூசாரி கணக்காகப் போட்டு ஓடுவதில் இருக்கும் உறுத்தல், க்ளைமாக்ஸில் அத்தனை வில்லன்களையும் பழிவாங்க மினிகன் M134 துப்பாக்கியை எடுத்துப் போட்டுத் தாக்கும் கார்த்தி... இவையெல்லாம் படத்தின் பாசிட்டிவ் ஏரியாவைப் பதம் பார்க்கின்றன.

ஸ்பைடர்மேன், அவெஞ்சர்களுக்கு சவால்விடும் சீனாவின்  `வெறித்தன' சூப்பர் ஹீரோ... யார் இந்த நேஷா? #Nezha

* கமிஷனர் அலுவலகத்தில் மாட்டிக்கொள்ளும் கல்லூரி மாணவர்கள், புது கான்ஸ்டபிள் ஜார்ஜ், கார்த்தியின் மகளாக நடித்திருக்கும் பேபி மோனிகா... எனப் பலரும் சில காட்சிகளே வந்தாலும், மனதில் பதிகிறார்கள். குறிப்பாக, லாரி ஓனராகப் படம் முழுக்கப் பயணிக்கும் விஜய் டிவி தீனா. உடைந்த லாரிக்காக அழுவது, 'துப்பாக்கி என்னப்பா ஆளையே ஒரு பக்கமா இழுக்குது' எனப் பேசுவதுமாய்... காமெடி ஏரியாவையும் சேர்த்து கவனித்துக் கொள்கிறார்.

* விடுதலையாகி வெளியே வரும் கார்த்தி மகளைப் பார்க்க வேண்டும் என்ற பரிதவிப்பில் இருப்பது சரி. அதற்காகப் படம் முழுக்க, கார்த்தி சரிந்து விழும்போதெல்லாம் மகள் சென்டிமென்ட்டால் எழுந்து நின்று அடிப்பதெல்லாம்... ரொம்பப் பழசு! தவிர, இடைவேளைக்குப் பிறகு, என்ன செய்தாலும் கார்த்தி அடித்துத் துவைத்துவிடுவார் என்பது போன்ற மனநிலை உருவாகிவிடுவதால், 'கார்த்தி இருக்காருல்ல... பார்த்துக்குவார்' என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

kaithi movie still
kaithi movie still

* போலீஸ் - வில்லன்கள் அறிமுகம், டைட்டில், கார்த்தியின் அறிமுகம்... எனப் படம் தொடங்கி 30, 40, 50 கிமீ வேகமேற்றிப் பறக்கும் திரைக்கதை, இடைவேளையில் 100 கி.மீ வேகத்தில் வந்து நிற்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு வேகம் சடாரெனக் குறைந்து பல ஹீரோயிஸ படங்களில் பார்த்த வழக்கமான காட்சிகளோடு கடந்துபோகிறது. இரண்டாம் பாதியில் சென்ட்டிமென்ட் கதைகளைக் குறைத்து திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருந்தால் 'கைதி' பிரமாண்ட தீபாவளி கொண்டாடியிருப்பான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு