`விரைவில் திருமணம்?!'- இன்ஸ்டாகிராமில் சூசகமாக சொன்ன காஜல் அகர்வால்! மணமகன் யார் தெரியுமா?

நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்!
2007ல் 'லக்ஷ்மி கல்யாணம்' எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வாலுக்கு தற்போது 34 வயது. தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'பொம்மலாட்டம்'தான் முதல் படம். ஆனால், முதலில் வெளியான படம் 'பழனி'. தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ்... தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், மகேஷ்பாபு, ராம் சரண், அல்லு அர்ஜுன்... என அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்துவிட்டார். இந்தியிலும் 'சிங்ஹம்', 'ஸ்பெஷல் 26' என இவர் நடித்த படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. இந்தியைக் காட்டிலும் கோலிவுட், டோலிவுட்தான் காஜலின் ஃபேவரைட்.

தற்போது கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2', சிரஞ்சீவியுடன் 'ஆச்சர்யா', துல்கர் சல்மானுடன் 'ஹே சினாமிகா', தெலுங்கு - ஆங்கிலம் பைலிங்குவல் படமான 'மொசகுல்லா' ஆகிய படங்கள் இவர் வசமுள்ளன. 'எப்போது திருமணம்?' என்ற கேள்வியை முன்னணி நாயகிகள் அனைவரும் சந்தித்திருப்பார்கள். காஜல் மட்டும் விதிவிலக்கா என்ன?
'தொழிலதிபரை மணக்கிறார் காஜல்' என்ற தகவல் வெளியாகும்போதெல்லாம் 'இது வதந்தி. எனக்கு பிடித்த நபரை நான் கண்டுவிட்டால் எல்லோருக்கு என் திருமண செய்தியை நானே அறிவிப்பேன்' என்பது காஜல் அகர்வாலிடம் வரும் பதிலாக இருக்கும். அந்த நாள் வந்துவிட்டது.
ஆம்! விரைவில் தனது திருமண செய்தியை அறிவிக்கவிருக்கிறார், காஜல். கெளதம் கிச்லு எனும் தொழிலதிபரைதான் மணக்கவிருக்கிறார். டிசர்ன் லிவிங் (Discern Living) என்ற இன்டீரியர் டிசைனிங் கம்பெனியை வைத்திருக்கிறார். இவரைத்தான் காஜல் திருணம் செய்யவிருக்கிறார் என்ற தகவல் வெளியான சில மணி நேரங்களில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்டின் பதிவிட்டு தன்னுடைய திருமணத்தை சூசகமாக அறிவித்திருக்கிறார். தவிர, கெளதம் கிச்லுவை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் ஒரே திரை பிரபலம் காஜல்தான். விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.