Published:Updated:

திரைத்துறையில் 50-ம் ஆண்டு... தலைவரான கலைப்புலி தாணு!

கலைப்புலி எஸ்.தாணு
கலைப்புலி எஸ்.தாணு

திரைத்துறையில் 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார், கலைப்புலி எஸ்.தாணு.

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் கலைப்புலி எஸ்.தாணு முதன்மையானவர். 1971-ம் ஆண்டு சினிமாத்துறையில் விநியோகஸ்தராக தனது பயணத்தைத் தொடங்கிய தாணு, தன்னுடைய வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களைத் தயாரித்திருக்கிறார்.

தற்போது, இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார், தாணு. தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர்களான எஸ்.எஸ்.வாசன், நாகி ரெட்டி ஆகியோர் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். அந்த வரிசையில் ஜனவரி 1, 2021 அன்று இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்க உள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு - தனுஷ்
கலைப்புலி எஸ்.தாணு - தனுஷ்

1985-ம் ஆண்டு வெளியான 'யார்?' படம்தான், தாணு தயாரித்த முதல் படம். அதில் ஆரம்பித்து கடந்த ஆண்டு வெளியான 'அசுரன்' வரை மொத்தம் 33 படங்களைத் தயாரித்திருக்கிறார். தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்', வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்', செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' என நான்கு பெரிய படங்கள் இவர் தயாரிப்பில் உருவாகி வருகின்றன.

சினிமாத்துறைக்கு வந்து 50 ஆண்டுகளாகியும் இன்னும் இளம் தயாரிப்பாளர்களைப் போல பரபரப்பாகவே இயங்கும் தாணுவுக்கு வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு