Published:Updated:

``இவர்கிட்ட இருந்துதான் விளம்பர யுக்திகளைக் கத்துக்கிட்டோம்!'' - விநியோகஸ்தர் `சிந்தாமணி' முருகேசன் நினைவுகள்

"முதன்முதலாக விநியோகஸ்தர்களுக்கு என்று தனியாக ஒரு சங்கத்தை உருவாக்கிய அவருக்கு 'விநியோகஸ்தர்களின் விடிவெள்ளி' என்கிற பட்டத்தை நான்தான் கொடுத்து மகிழ்ந்தேன்." - 'கலைப்புலி' எஸ்.தாணு

'சிந்தாமணி' முருகேசன்
'சிந்தாமணி' முருகேசன்

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்கள் சங்கத்தை நிறுவிய 'சிந்தாமணி' முருகேசன் சில தினங்களுக்கு முன்பு மறைந்தார். 80 வயதான அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். முருகேசன் நினைவுகள் குறித்து அவரோடு சினிமாவில் பயணித்த தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணுவிடம் பேசினோம்.

'சிந்தாமணி' முருகேசன்
'சிந்தாமணி' முருகேசன்

"தமிழ் திரைப்பட உலகிற்கு மறுமலர்ச்சியை உண்டாக்கியது, மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். பெரும்பாலும் மாடர்ன் தயாரிப்பு படங்களையே வாங்கி வெளியிடுவது, ஐயா முருகேசனின் வழக்கம். முக்கியமாக, '1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' படத்தை அவர் வாங்கி விநியோகம் செய்தார்.

1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

அந்தப் படம் அமோக வெற்றியைப் பெற்றது. அதில் கிடைத்த லாபத்தில், சென்னை மீரான் சாகீப் தெருவில் உள்ள 3-ஆம் நம்பர் வீட்டை விலைக்கு வாங்கினார். அன்று முதல் 'சிந்தாமணி' முருகேசன் என்று அழைக்கப்பட்டார். சினிமா விளம்பரங்களில் புரட்சி செய்தவர் அவர். முருகேசன் ஐயாவைப் பார்த்துதான் நாங்கள் கற்றுக்கொண்டோம்.

எங்களுக்கு எல்லாம் விளம்பர யுக்தியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 500-க்கும் அதிகமான படங்களை வாங்கி விநியோகம் செய்தவர். அவர் வாங்கி வெளியிட்ட அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
`கலைப்புலி' எஸ்.தாணு

முதன்முதலாக விநியோகஸ்தர்களுக்கு என்று தனியாக ஒரு சங்கத்தை உருவாக்கிய அவருக்கு, 'விநியோகஸ்தர்களின் விடிவெள்ளி' என்கிற பட்டத்தை நான்தான் கொடுத்து மகிழ்ந்தேன். அவரோடு சேர்ந்து நானும், 'வேட்டைக்காரன்', 'அடிமைப்பெண்' போன்ற படங்களை வாங்கி விநியோகம் செய்தேன். சினிமா வியாபாரத்தில் குறிப்பாக, பண விஷயத்தில் ரொம்ப சுத்தமானவர். கணக்கு வழக்குகளில் நேர்மையானவர்.

Kalaipuli S Thanu
Kalaipuli S Thanu

ஆரம்பத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் அவரது வீடு இருந்தது. அங்கே ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் முதல் மகனைப் பறிகொடுத்தார். உடம்பெல்லாம் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார், முருகேசன். அந்த சமயம் சிவாஜி நடித்த 'தங்கை' படத்தை செகண்ட் ரிலீஸ் செய்தார். அதற்கு, 'தீயிலே கருகினேன். தீயவர்களிடம் இருந்து விலகினேன். பாவிகளிடம் இருந்து தப்பித்துக்கொண்டேன். பாசத்துக்காக ஏங்குகிறேன்!' என தன்னுடைய துயரத்தையும், மகனுடைய இழப்பையும் சிவாஜி சொல்வதுபோல் அவர் செய்த விளம்பரம் வித்தியாசமாகப் பேசப்பட்டது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அவருக்குப் பாரதிராஜா பாராட்டு விழா நடத்தினார். அப்போது விநியோகஸ்தர் சங்கத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சிந்தாமணி ஐயா சங்கத்தின் சார்பாக ஒரு சந்தனப் பேழையில் 1,63,000 ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்கினார். பிறகு, முருகேசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'தமிழுக்கென்று தனிச்சங்கம் ஒன்றை உருவாக்கிட வேண்டுகிறேன்!' எனக் குறிப்பிட்டு எழுதி, கையெழுத்து போட்டுப் பெருமைப்படுத்தினார்.

ரஜினி படத்தின் விநியோக உரிமை கிடைத்தாலே ஜாக்பாட் என்று எல்லோருக்கும் தெரியும். முருகேசன் ஐயாவின் உழைப்பைப் பார்த்து ரஜினி சார் 'படையப்பா' படத்துக்கான செங்கல்பட்டு ஏரியா உரிமையை சொற்ப விலைக்குக் கொடுத்தார்.
`கலைப்புலி' எஸ்.தாணு

அந்தப் படத்தில் கிடைத்த லாபத்தை வைத்து, சென்னை மீரான் சாகீப் தெருவில் 13-ஆம் நம்பரில் உள்ள ஐந்தடுக்கு வீட்டை விலைக்கு வாங்கினார். சிந்தாமணி ஐயா இறப்பதற்கு முன்பு அவரை வீட்டில் சந்தித்தேன். அவரால் முன்புபோல் இயல்பாகப் பேசமுடியவில்லை. அதனால், ஒரு வெள்ளைத் தாளில் எழுதிக் காட்டினார். ஒரு காலத்தில் தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் மத்தியில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த சிந்தாமணி முருகேசன் ஐயாவின் இறப்பு, பேரிழப்பு!" என்றார், கலைப்புலி தாணு.