Published:Updated:

`எவனென்று நினைத்தாய்'... சைலன்ட் ரஜினி... லோகேஷுடன் களத்தில் கமல்! #VikatanExclusive

கமல், லோகேஷ் | எவனென்று நினைத்தாய்
கமல், லோகேஷ் | எவனென்று நினைத்தாய்

"என்னுடைய அடுத்தப்பட அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்" என லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியதில் இருந்தே செம பரபரப்பில் இருக்கிறது சினிமா உலகம்.

லோகேஷ் மீண்டும் விஜய் படமே இயக்கப்போகிறார் என ஒரு தரப்பும், சூர்யாவுக்குப் படம் இயக்கப்போகிறார் என இன்னொரு தரப்பும், தெலுங்குப்படம் இயக்கப்போகிறார் என மற்றொரு தரப்பும் சொல்லிக்கொண்டிருந்தது. உண்மையில் லோகேஷ் யாருடன் இணைகிறார்? உலக நாயகன் கமல்ஹாசனை இயக்கத் தயாராகிவிட்டார் லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' என இதுவரை மூன்று படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர். விஜய்யை வைத்து இவர் இயக்கியிருக்கும் 'மாஸ்டர்' படம் தியேட்டர்கள் திறந்ததும் விரைவில் ரிலீஸாகயிருக்கிறது.

"விரைவில் மாஸ்டர் ரிலீஸ்... எங்கே, எப்போது?"- விவரம் சொல்லும் விஜய் டீம்!

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே கமல்ஹாசனை வைத்துப்படம் இயக்க ராஜ்கமல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போட்டிருந்தார் லோகேஷ். முதலில் கமல் நடிப்பதற்காகத்தான் கதையைச் சொல்லியிருந்தார். ஆனால், இதில் ரஜினி நடித்து இன்னொரு கேரக்டரில் கமல் நடிக்கலாம் என கமலின் நண்பர்கள் சிலர் சொல்ல ரஜினிக்கு கதை சொல்லப்பட்டது. ரஜினியும் கதையைக் கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டார். 'அண்ணாத்த' படத்தை முடித்ததும் இந்த ஆண்டு ஜூலைவாக்கில் ஷூட்டிங் போகலாம் என திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில்தான் மார்ச் மாதம் கொரோனா வந்து எல்லா திட்டமிடல்களையும் கலைத்துப்போட்டுவிட்டது.

Kamal, Rajini
Kamal, Rajini

இதற்கிடையே சினிமா ஷூட்டிங்குகளை நடத்த செப்டம்பரில் அனுமதி கிடைத்தவிடும் என்கிற தகவல் வந்ததுமே ராஜ்கமல் தரப்பில் இருந்து ரஜினியிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், ரஜினி தொடர்ந்து அமைதியாகவே இருக்க, கமல்ஹாசனே நடிப்பது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இது முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் கதை. தென் தமிழ்நாட்டில்தான் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அக்டோபர் 15-க்கு மேல் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லாமே லோகேஷ்தான். கமல் இதில் வெறும் நடிகராக மட்டும்தான் இருப்பார் என்கிறார்கள். படத்துக்கான டைட்டில் 'எவனென்று நினைத்தாய்' என்பதாக இருக்கலாம்.

Kamal Haasan
Kamal Haasan

'இந்தியன் -2' படத்தை தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்பதுதான் கமல்ஹாசனின் திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது 'இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருப்பதால் 'எவனென்று நினைத்தாய்' புராஜெக்ட்டை முதலில் முடித்து ஏப்ரலுக்குள் ரிலீஸ் செய்யவேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்கள். 'மாஸ்டர்' படத்துக்கு நடந்ததுபோல ஷூட்டிங் நடக்கும்போதே போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடக்கும் என்கிறார்கள்.

கமலும், லோகேஷும் தொடர்ந்து ஸூம் வழியே மட்டுமே பேசிவருகிறார்கள். இன்னும் மற்ற நடிகர்கள், நடிகைகள் யார் என்பது இன்னும் இறுதிசெய்யப்படாமல் இருக்கிறது. ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில் கமலுக்கு ஒரு சிறு கேரக்டர் இருந்தது. இப்போது ரஜினி கேரக்டரில் கமலே நடிப்பதால், கமல் கேரக்டரில் யார் நடிக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய சஸ்பென்ஸாக இருக்கும் என்கிறார்கள். அது விஜய் சேதுபதியாகவும் இருக்கலாம்.

#KamalHaasan232
#KamalHaasan232
களத்தில் இறங்கிவிட்டார் கமல். 'பிக்பாஸ்', 'எவனென்று நினைத்தாய்' என இன்னும் சில மாதங்களுக்கு உலக நாயகன் ட்ரெண்டிங் நாயகனாக இருப்பார்!
அடுத்த கட்டுரைக்கு