Published:Updated:

`தள்ளிப்போகும் இளையராஜா இசை நிகழ்ச்சி?’ - கமல்ஹாசனின் `உங்கள் நான்' அப்டேட்ஸ்

கமல் ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் நவம்பர் 9-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி 17-ம் தேதிக்குத் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

கமல்
கமல்

1959-ல் `களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கமல் ஹாசன். இந்த ஆண்டோடு அவர் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக்கொண்டாடும் விதமாக 'உங்கள் நான்' என்கிற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

கமல் ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதிதான் அவரது தந்தை சீனிவாசனின் நினைவுநாள். தந்தைக்கு மரியாதை செலுத்தும்விதமாக அன்று பரமக்குடியில் தந்தைக்குச் சிலை திறக்கிறார் கமல். அடுத்தநாளான நவம்பர் 8-ம் தேதி திரையுலக குருவான இயக்குநர் கே.பாலசந்தரின் சிலையை சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் திறக்கிறார். அன்று மாலை சத்யம் திரையரங்கில் 'ஹேராம்' சிறப்புக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டிய கலந்துரையாடலில் கமல் ஹாசன் கலந்துகொள்கிறார்.

கமல்
கமல்

'கமல் 60' கொண்டாட்டத்தின் உச்சமாக நவம்பர் 9-ம் தேதி இசைஞானி இளையராஜாவின் இசைவிழா நடைபெறுவதாகவும், இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொள்வதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விழா நந்தனத்தில் உள்ள YMCA வெளிவளாகத்தில் நடைபெற இருந்தது. ஆனால், நவம்பர் 9-ம் தேதி சென்னையில் மழை பெய்யலாம் என்பதால் நவம்பர் 17 நேரு உள் விளையாட்டரங்கில் விழாவை நடத்த தற்போது திட்டமிடப்பட்டுவருகிறது. இதற்காக தமிழக அரசிடம் அனுமதி வாங்கும் வேலைகள் தீவிரமாக நடந்துவருகின்றன.