Published:Updated:

தந்தைக்கு சிலை... சென்னையில் பிரமாண்ட விழா.. ரஜினி வருகை..! கமல் பிறந்த நாள் ஸ்பெஷல்

கடந்த1959-ல் 5 வயது சிறுவனாகத் திரையுலகில் `களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல். அதனால் திரையுலகில் அவருக்கு இது 60-வது வருடம்.

KamalHaasan
KamalHaasan

கமல்ஹாசன். இந்திய சினிமா வரலாற்றில் இவருக்குப் பெரும் பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது தீவிர அரசியலில் இறங்கி தமிழக அரசியல் வரலாற்றிலும் இடம் பிடித்துவிட்டார். இந்த நிலையில்தான், வரும் நவம்பர் 7-ம் தேதி தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் கமல்ஹாசன்.

Kamalhaasan
Kamalhaasan

வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்க்கும் கமல், இந்த முறை பெரும் விழாவுக்கு திட்டமிடுகிறாராம். அதற்குக் காரணம் அவரின் தந்தை என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள். 1908-ம் ஆண்டு பிறந்த கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகன் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மேடைகளில் நிறையவே பேசியிருக்கிறார் கமல். தன் தந்தையே தனது கலையுலகுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தார் எனவும் தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன் பிறந்த அதே நவம்பர் 7-ம் தேதிதான் அவரின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகனின் நினைவுநாளும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம். அதனால் இந்தப் பிறந்தநாளை தன் தந்தையை நினைவுகூரும் விதமாக பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளாராம் கமல். கடந்த 1959-ல் ஐந்து வயது சிறுவனாக திரையுலகில் `களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல். அதனால் திரையுலகில் அவருக்கு இது 60-வது வருடம்.

Rajini - kamal
Rajini - kamal

இது எல்லாவற்றையும் சேர்த்து சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் நினைவாக அவரது சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது. பின்னர் அந்தச் சிலை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நிறுவப்படவுள்ளது. அதோடு, பரமக்குடியில் இளஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட இருக்கிறது. அது தற்காலிகமாக இல்லாமல், தொடர்ந்து கிராமப்புற இளைஞர்களுக்குப் பயன் அளிக்கக் கூடியதாக இருக்குமாம். இதன்மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் திறன் சார்ந்தும் உடல் சார்ந்தும் வழங்கப்பட இருக்கிறது.

`முதல்முறை கலாமை சந்தித்த போது...!’ - மாணவர்கள் முன்னிலையில் நெகிழ்ந்த கமல்ஹாசன்

சென்னையில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். கமல், தன்னுடன் இத்தனை ஆண்டுக்காலம் பயணித்த அனைத்து முக்கிய நபர்களையும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளாராம். கமல், தனது பிறந்த நாளை அவரின் தந்தையின் நினைவாக நடத்தும் விழா, நெகிழ்ச்சி பிரவாகமாக இருக்கலாம்.

அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்!