Published:Updated:

``என் மகனிடம் பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன்!" - கமலின் தந்தை பரமக்குடி சீனிவாசன் #VikatanVintage

கமல்

சினிமாத்துறையிலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறதுக்காக அவனுக்கு எல்லா விதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, 'நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலையே'னு அடிக்கடி வருத்தப்படுவான்

``என் மகனிடம் பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன்!" - கமலின் தந்தை பரமக்குடி சீனிவாசன் #VikatanVintage

சினிமாத்துறையிலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறதுக்காக அவனுக்கு எல்லா விதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, 'நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலையே'னு அடிக்கடி வருத்தப்படுவான்

Published:Updated:
கமல்

சினிமாத்தன பரபரப்புக்கும் தனக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்பதை அடக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தது, அமைதியை அணிந்திருந்த அந்த வீடு.

''மகனுக்குத் தேசிய அவார்டு ('மூன்றாம் பிறை') கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!''

''சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?'' பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் டி.சீனிவாசன்.

''உங்க மகன் இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரா வருவார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?''

''நிச்சயமா! நேத்துகூட 'Oh my boy, you deserve oscar'னுதான் அவனுக்குத் தந்தி அடிச்சேன்!''

''இந்தப் பெருமையில், கமலை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பங்கு பற்றி...''

''கமல்கிட்டே அளவுக்கதிகமான திறமை இருக்கு. முன்னுக்கு வந்துட்டான். அவ்வளவுதான். மத்தபடி, பெரிசா சொல்லிக்கொள்ற அளவுக்கு நான் ஒண்ணும் செஞ்சிடலை!''

கமல்
கமல்

''சரி, சிறுசா சொல்லிக்கொள்ற அளவுக்காவது இருந்திருக்கணும்லே..?''

''சினிமாத்துறையிலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறதுக்காக அவனுக்கு எல்லா விதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, 'நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலையே'னு அடிக்கடி வருத்தப்படுவான். அப்போதெல்லாம் அவன் மனச் சோர்வுக்கு டானிக் கொடுத்து, உற்சாகம் ஊட்டுவேன். 'நான் தேய்ந்து அழிவனேயன்றி, துருப்பிடித்து அழியமாட்டேன்' என்கிற வாசகத்தைக் திருப்பித் திருப்பி நினைவுபடுத்துவேன். அவனோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னைவிட அதிகமா அவனுக்கு ஆதரவு கொடுத்த என் மனைவிக்குதான் இந்த வெற்றியில் பெரும் பங்கு உண்டு!''

''கமல் வளர்ச்சியில் உங்க மனைவிக்குப் பெரும்பங்கு உண்டுனு சொல்றீங்க! ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வர முடியுமா?''

''எங்க குடும்ப நண்பராக நெருங்கிப் போயிருந்த டி.கே.சண்முகத்தின் நாடகத்துல அவன் நடிச்சிட்டிருந்த நேரம்; ஹாஸ்பிடலில் ஆபத்தான கட்டத்தில் இருந்த என் மனைவி என்னைக் கூப்பிட்டு, 'நான் சாகறதுக்கு முன்னால டி.கே.சண்முகத்திடம் கொஞ்சம் பேசணும்'னு கெஞ்சினா. ஒரு டாக்ஸியில் கொண்டு போய் அவர் வீட்டில் விட்டேன்.

'அய்யா! நாங்க பணக்காரங்கதான். ஆனாலும், உங்க நாடகக் குழுவுல இருக்கிற ஏழைகளோட ஒரு ஏழையா என் மகனையும் சேத்துக்குங்க! நீங்க சரின்னு சொல்லிட்டா, நான் நிம்மதியா உயிர் விடுவேன்'னு சண்முகத்திடம் சொன்னாள் என் மனைவி.

உடனே அவர், 'கவலைப்படாதீங்கம்மா! உங்க பையன் இனி என் நாடகக் குழுவுல மட்டுமல்ல; என் குடும்பத்திலேயும் ஒருவன். என் பிள்ளைகளுக்கு என் சொத்துல எவ்வளவு கெடைக்குமோ அதே அளவு அவனுக்கும் உண்டு'ன்னு உருக்கமாகச் சொன்னார்.''

சினி ஃபீல்டுல நுழையறப்போ 'மது, புகையிலை, மாது... இந்த மூணுக்கும் இடம் கொடுக்கமாட்டேன்'னு பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன்

'' 'அவார்ட் கெடைச்சதுல கமல் அப்பாவை விட அதிகமா நான் சந்தோஷப்படறேன்'னு கே.பாலசந்தர் சொல்லியிருந்தாரே... படிச்சீங்களா?''

''படிச்சேன்! உடனே கே.பிக்கு ஒரு லெட்டர் எழுதிப் போட்டேன். 'நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். என்னை விட நீங்க அதிகம் சந்தோஷப்படுவதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது'ன்னு எழுதினேன்.

ஆரம்ப காலத்துல கே.பி.யின் நாடகத்துல அவனை நுழைக்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினோம். முடியாமல் போயிடுச்சு. ஜெமினிதான் அவரிடம் திருப்பித் திருப்பி பிரஸ் பண்ணி அரங்கேற்றத்துல சான்ஸ் வாங்கிக் கொடுத்தாரு!''

தன் மகனின் இந்த வளர்ச்சியில், கே.பியின் ரோலைப் பற்றி குதூகலத்துடன் நிறையவே பேசுகிறார் டி.எஸ்.

''கமல் சின்ன வயசுல புத்திசாலித்தனமான குறும்புச் சேட்டைகள் அதிகம் பண்ணியிருப்பாரே?''

''ஆமாம். எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களின் ஆக்டிவிட்டீஸை உன்னிப்பா கவனிப்பான். அவங்க போன பிறகு, அதே மாதிரி செய்து காட்டுவான். போரடிக்கிற நேரம், நானும் என் மனைவியும் அவனைப் பக்கத்தில் இருத்தி, 'மிமிக்ரி' செய்யச் சொல்லி ரசிப்போம்!

இங்குள்ள என் நண்பரின் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஊழியரிடம் போய், 'நான் எம்.ஜி.ஆராக்கும். என்னை உள்ளே விடறியா? இல்லாட்டி டிஷூம்... டிஷூம்தான்'னு கையக் கால உதைப்பான்.''

''நடிகைகளைக் கிண்டல் பண்ணுவதில் கில்லாடின்னு பேர் வாங்கியிருக்கிறாரே! உங்ககிட்டே அப்படி எப்போதாவது...''

''ஸ்டாரா ஆனதுக்கப்புறம் என்னை நேருக்கு நேர் சந்திக்கிறதைக் கூடிய மட்டும் அவாய்ட் பண்ணுவான்.''

''உங்ககிட்டே அவ்வளவு பயமா?''

''அப்படித்தான்னு நினைக்கிறேன்.''

''கமல்கிட்டே உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எது?''

''சினி ஃபீல்டுல நுழையறப்போ 'மது, புகையிலை, மாது... இந்த மூணுக்கும் இடம் கொடுக்கமாட்டேன்'னு பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன். முதல் ரெண்டுக்குதான் சம்மதிச்சான். ஆனாலும், அன்னிக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்னும் காப்பாத்திட்டு வர்றதை நெனச்சு சந்தோஷப்படறேன்!''

''திறமையான கலைஞனை உருவாக்கியிருக்கிற இன்டெலக்சுவல் ஃபாதர் என்ற முறையில் கேட்கிறேன். ஸைக்கலாஜிக்கலி, குழந்தைகளை எப்படி வளர்க்கணும்?''

கமல்
கமல்

''குழந்தை கருத்தரித்த நிலையிலேயே வளர்ப்புப் பணியை ஆரம்பிச்சிடணும்கிறதுதான் என் கருத்து. கர்ப்பமாயிருக்கின்ற காலத்தில் தாயின் உள்ளுணர்வுகளைப் பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சி அமைகிறது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் டேஸ்ட் என்ன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, இப்படித்தான் இவனை உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டு நம்பிக்கையோடு வளர்த்தால், நாட்டில் ஜீனியஸ் பஞ்சத்தைப் போக்கிடலாம்.''

வழக்கறிஞர் குழு ஒன்று ஆளுநர் குரானாவைச் சந்தித்தபோது, ''ஐயம் சீனிவாசன்! அட்வகேட் அட் பரமக்குடி''ன்னு சொன்னாராம் இவர். பக்கத்தில் இருந்தவர், 'கமலஹாசன் ஃபாதர்' என்று கிசுகிசுத்தவுடன், கவர்னர் ''ஓ..! யூ ஆர் கமல்ஸ் ஃபாதர்?!'' என்று உற்சாகத்தோடு கேட்டாராம். உடனே, ''நோ! மை சன் ஈஸ் கமல்!'' என்று கூறி, அங்கு இருந்த எல்லோரையும் அசர வைத்திருக்கிறார் சீனிவாசன்.

''நீங்க கமல் அப்பா இல்லை; உங்க மகன்தான் கமல்னு இந்த இரண்டு மணி நேர உரையாடல்ல நிரூபிச்சிட்டீங்க'' என்று சொல்லி, விடைபெறுகிறோம். மழலையாய்ச் சிரித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கிறார்.

- நெல்லை குரலோன்

| ஆனந்த விகடன் 25.5.1983 இதழில் இருந்து |

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க... > http://bit.ly/2MuIi5Z