Published:Updated:

ஜெயலலிதாவின் பயோபிக் என்றால் சர்ச்சைகள் இருக்கக்கூடாதா? `தலைவி' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

தலைவி

16 வயது நடிகை ஜெயலலிதா முதல் 1991-ல் முதல்வர் ஜெயலலிதா வரையிலான வாழ்க்கைப் பயணம்தான் 'தலைவி'.

ஜெயலலிதாவின் பயோபிக் என்றால் சர்ச்சைகள் இருக்கக்கூடாதா? `தலைவி' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

16 வயது நடிகை ஜெயலலிதா முதல் 1991-ல் முதல்வர் ஜெயலலிதா வரையிலான வாழ்க்கைப் பயணம்தான் 'தலைவி'.

Published:Updated:
தலைவி
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பேசும் படமாக வெளியாகியிருக்கிறது 'தலைவி'. கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, நாசர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இங்கே...

சட்டசபையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்படும் காட்சியில் தொடங்குகிறது படம். முதலமைச்சரான பின்னர்தான் மீண்டும் இங்கே கால் வைப்பேன் எனச் சபதமிட்டுக் கிளம்புகிறார் ஜெயா. ஃப்ளாஷ்பேக்கில் அவரின் 16 வயதிலிருந்து தொடங்குகிறது கதை. அவரின் சினிமா கரியர், ஆர்.எம்.வீரப்பனுடனான பகை, எம்.ஜி.ஆருடனான காதல் முதல் 91-ல் முதல்வராவதற்கு அவர் கடந்து வந்த தடைகள் வரை பல விஷயங்களைப் பேசுகிறது 'தலைவி'.

தலைவி
தலைவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயாவாக கங்கனா ரணாவத். தேசிய விருது பெற்ற ஒரு நடிகை, அசத்தல் பர்ஃபாமர் என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான். இருந்தாலும், அவருக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்து மறைந்த ஒரு பெண் அரசியல்வாதியைப் பற்றிய கதை எனும்போது கங்கனா அதை எப்படிக் கையாள்வர் என்கிற சந்தேகம் இருக்கவே செய்தது. ஆனால், அதற்கான உழைப்பைச் சரியாகக் கொடுத்திருக்கிறார் கங்கனா. அதற்கு ஏதுவாக சட்டசபை சபதம், நடிகையாக இருக்கும்போது அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் மலரும் காதல், அரசியலில் இறங்க முடிவெடுத்தவுடன் அவர் செய்யும் சத்துணவு புரட்சி, டெல்லி விசிட், நாடாளுமன்ற ஆங்கில உரை என ஒரு நாயகி பிம்ப சினிமாவுக்குத் தேவையான நிகழ்வுகளை அடுக்கியிருக்கிறது திரைக்கதை. ஒவ்வொன்றிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருக்கிறார் கங்கனா ரணாவத்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
குறிப்பாக, யார் சிறந்த நடிகர் எம்.ஜி.ஆரா, சிவாஜியா எனும் கேள்வியை அவர் முன்வைக்கும்போது, 'சிறந்த நடிகர் ஜெயலலிதாதான்' எனும் சொல்லும் இடமாகட்டும், கிளைமாக்ஸ் காட்சியில் கட்சி ஆள்களின் ஆணாதிக்க மனோபாவத்தை மாஸாக உடைப்பதாகட்டும்... அனைத்தும் பக்கா ஜெ. மொமன்ட்ஸ்! அதிலும் அந்தக் கடைசி காட்சி ஜாலியான சமகால அரசியல் பகடி.
தலைவி
தலைவி

ஆனால், கங்கனா ரணாவத் பேசும் ஆங்கில வசனங்கள் தவிர்த்து பெரும்பாலான காட்சிகளில் தமிழ் வசனங்களுக்கு ஏற்ற லிப் சிங்க் எங்குமே இல்லை. மூன்று மொழிகளில் உருவான படம் எனும்போது கங்கனா தொடர்பான காட்சிகளைத் தமிழில் எடுக்கவே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

எம்.ஜி.ஆராக அரவிந்த சாமி. தாடை அமைப்பு, ஹேர்ஸ்டைல் எனப் பல விஷயங்களில் புரட்சித் தலைவராகவே வந்து நிற்கிறார். முதல் பாதியில் நடன அசைவுகளிலும், இயல்பான உடல்மொழியிலும் எம்.ஜி.ஆரைப் பிரதியெடுக்க சிரத்தையான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இருந்தும் நம்மை ஈர்ப்பது என்னவோ, அரசியல் என்ட்ரிக்குப் பிறகான எம்.ஜி.ஆர்தான். அதில் அரவிந்த் சாமி எனும் நடிகன் மறைந்து எம்.ஜி.ஆர் மட்டுமே வெளிப்படுகிறார்.

தலைவி
தலைவி
படத்தில் கங்கனாவுக்குப் பிறகு ஸ்கோர் செய்வது ஆர்.எம்.வீரப்பனாக வரும் சமுத்திரக்கனி. அமைதி பூங்காவாக முகத்தை வைத்துக்கொண்டு 'கேடயமாக' அவர் செய்யும் வேலைகள் பக்கா வில்லன் ஸ்கெட்ச். ஒரு நடிகராகவும் சமுத்திரக்கனியின் வேறொரு பரிணாமத்தை இதில் பார்க்க முடிந்தது. வெல்டன் சமுத்திரக்கனி!

காட்சிகள் குறைவென்றாலும் கருணாநிதியாக நாசர் பொருந்திப் போயிருக்கிறார். ஜானகி ராமசந்திரனாக மதுபாலா, மாதவன் நாயராக தம்பி ராமைய்யா, சசிகலாவாக பூர்ணா தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரே படத்தில் சைலன்ட்டாகிவிட, கதையை பெரும்பாலும் நகர்த்திக்கொண்டு போவதே இந்த ஜெயா vs ஆர்.எம்.வி சண்டைதான். இருவருக்குமான ஈகோ யுத்தத்தைத் திரைக்கதைப் படுத்திய விதத்தில் ஸ்கோர் செய்கிறார்கள் இயக்குநர் விஜய்யும் 'பாகுபலி' புகழ் விஜயேந்திர பிரசாத்தும். மதன் கார்க்கியின் தமிழ் வசனங்கள் ஓரிரு இடங்களில் ஈர்த்தாலும் 'பாகுபலி'யில் இருந்த அந்த உணர்வுகள் இதில் ரொம்பவே மிஸ்ஸிங். பாடல்களிலும் அதே ஃபீல்தான்!

தலைவி
தலைவி

படத்தின் பெரும்பலம் அதன் பிரமாண்டம். பிரியட் ஃபிலிம் எனும்போது பட்ஜெட் எகிறும் என்றாலும், சட்டசபை தொடங்கித் தேர்தல் கூட்டம் வரை அதன் பிரமாண்டத்தை எந்தவித சமரசமும் இன்றி பதிவு செய்திருக்கிறார்கள். அத்தகைய காட்சிகளுக்கு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது.

எழுத்தாளர் அஜயன் பாலா ஜெயலலிதா குறித்து எழுதிய 'தலைவி' புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட கதை, புனைவு என்றெல்லாம் கார்டுகள் போட்டாலும், பயோபிக் என்றான பின் எம்.ஜி.ஆரை எம்.ஜெ.ஆர், ஆர்.எம்.வி-யை ஆர்.என்.வி, ஜெயலலிதாவை ஜெயா, கருணாநிதியைக் கருணா என்றெல்லாம் மாற்றி அல்லது சுருக்கி அழைப்பது அபத்தமாகவே படுகிறது. இதற்கு முன்னர் ஜெயலலிதாவின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 'குயின்' வெப்சீரிஸிலும் இத்தகைய பெயர் மாற்றங்களைச் செய்திருப்பார்கள். ஆனால், முறைப்படி ஜெயலலிதாவின் கதை என விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படத்திலும் இத்தகைய பெயர் மாற்றங்கள் அவசியமா?

தலைவி
தலைவி
புனைவு கலந்த கதை என்று சொல்லிவிடுவதால், படத்தில் இருக்கும் வரலாற்றுப் பிழைகளை எப்படி எடுத்துக்கொள்வது என்பதும் புரியவில்லை.

அதேபோல், ஜெயலலிதா முதல்வரான பிறகான கதையைக் காட்டவேண்டுமென்றால் பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்னைகளையும் பேசவேண்டும் என்பதாலோ என்னவோ கதையை 1991-லேயே படத்தை முடித்திருக்கிறார்கள். பயோபிக் என்றாலே நாயகனையோ நாயகியோ அப்பழுக்கற்றவராகவே சித்திரிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லையே! இரண்டு பக்கங்களையும் பேசி அவர் ஏன் இப்படியான முடிவுகளை எடுத்தார் என்பதையும் தெளிவாகக் காட்சிப்படுத்தினால்தான் அது ஒரு முழுமையான பயோபிக்காக, ஒரு வரலாற்றுச் சான்றாக அமையும்.

தலைவி
தலைவி
கங்கனாவின் டப்பிங்கில் கவனம் செலுத்தி, கொஞ்சம் செயற்கைத் தனங்களைக் குறைத்து, சமநிலையாகவும் கதையை நகர்த்தியிருந்தால் முக்கியமானதொரு அரசியல் படைப்பாக 'தலைவி' அரியணை ஏறியிருக்கும்.