Published:Updated:

நான்கு கெட்டப்பில் கங்கனா; ஹாலிவுட் கலைஞர் மேக்அப்! - `தலைவி' அப்டேட்ஸ்

தார்மிக் லீ

விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம், `தலைவி'. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான் இது.

கங்கனா ரனாவத் - ஜெயலலிதா
கங்கனா ரனாவத் - ஜெயலலிதா ( தலைவி )

`தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா, படத்தில் நான்கு கெட்டப்களில் வருவார் எனப் படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க பல்வேறு இயக்குநர்கள் முனைப்புடன் வேலைபார்த்தனர். இறுதியாக, இயக்குநர் விஜய் இப்படத்தை இயக்குவதாகத் தகவல் வெளியானதோடு, படத்தின் பணிகளும் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது. முதலில், ஜெயலலிதாவாக வித்யா பாலன் நடிப்பதாக இருந்தது. பின், அவருக்கு கால்ஷீட் பிரச்னைகள் இருந்ததால், கங்கனா ரனாவத் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது, படக்குழு.

தலைவி
தலைவி

இது தொடர்பாக தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி, ``#தலைவிஅப்டேட் : கங்கனா, இப்படத்தில் நான்கு கெட்டப்பில் வெவ்வேறு வயது பரிமாணத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் ஒப்பனையாளரான ஜேஸன் கோலின்ஸ் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, படத்தின் ப்ரீ புரொடக்‌ஷனுக்கான வேலைகள், மைசூரில் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் கமிட்டாகியுள்ள ஒப்பனையாளர் ஜேம்ஸ் கோலின்ஸ், ஹாலிவுட்டின் பல முக்கியப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். `கேப்டன் மார்வெல்', `ப்ளேடு ரன்னர்', `இன்ஸீடியஸ் 2', `ஹாஸ்டைல்ஸ்' உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் கேம்அப் ஆர்ட்டிஸ்ட்டாகப் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.