சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

‘தனுஷ், விஜய் சேதுபதியைக் கடத்திடவா?’

பவண் குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
பவண் குமார்

நான் நடிக்கத்தான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஃபீல்டுக்கு வந்தேன். ஒரு வகையில நான் வாழைப்பழ சோம்பேறி

பவண் குமார்... சாண்டல்வுட் எனப்படும் கன்னட சினிமாவின் புதிய அலை இயக்குநர்களில் முக்கியமானவர். தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், நடிகர் எனப் பல அவதாரம் எடுத்தவர். 2013-ல் `க்ரௌட் ஃபண்டிங்’ எனப்படும் மக்களிடம் வசூல் செய்து எடுக்கப்பட்ட முதல் கமர்ஷியல் சினிமா ‘லூசியா’ தான் இந்திய சினிமாவில் பலரையும் சாண்டல்வுட் சினிமாவை உற்றுப் பார்க்க வைத்தது. அடுத்த படம் U turn. அதற்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின் ‘‘நல்ல கதையம்சத்தோடு தமிழுக்கு வருவேன்” எனச் சொல்லியிருந்தார். இப்போது ஓடிடி தளங்களில் செம பிஸியாக இருக்கிறார். ஓர் ஊரடங்கு நாளின் அந்திப்பொழுதில் அவரிடம் பேசினேன்.

 ‘தனுஷ், விஜய் சேதுபதியைக் கடத்திடவா?’

“கன்னட சினிமாவில் இப்போது நல்ல படைப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. உங்கள் வருகையால்தான் இது சாத்தியமானது எனச் சொல்லலாமா?”

“கன்னட சினிமா தமிழ், தெலுங்கு இண்டஸ்ட்ரி போல இல்லாமல் வேறொரு பாதையில் உச்சத்தில்தான் இருந்தது. ராஜ்குமார் சார் செய்த சாதனைகளெல்லாம் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது. என் குரு யோக்ராஜ் பட் இயக்கிய `முங்காரு மலே’ படம்தான் இன்றைய தேதி வரைக்கும் கன்னட சினிமாவில் அதிகம் வசூல் செய்த சினிமா. கிரிஷ் காசரவல்லி, புட்டண்ணா கனகல், சுனில் குமார் தேசாய், உபேந்திரா என்று பலர் கட்டிய கோட்டை சாண்டல்வுட். இப்போது நிறைய இளைஞர்கள் புதுப்புதுக் கதையம்சங்களோடு படங்களைத் தருகிறார்கள். அந்த வகையில் நான் சீக்கிரம் வந்துவிட்டேன். அவ்வளவுதான்!’’

``உங்கள் வாழ்க்கையை லூசியாவுக்கு முன், லூசியாவுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்லியிருந்தீர்களே?’’

``நான் நடிக்கத்தான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஃபீல்டுக்கு வந்தேன். ஒரு வகையில நான் வாழைப்பழ சோம்பேறி. இயக்குநர் யோக்ராஜ் பட்டின் அறிமுகம் கிடைத்தது. எந்த ஈகோவும் இல்லாமல் மணிக்கணக்காக என்னுடன் பேசுவார். ‘யாருடா நீ... செமையா யோசிக்குறே! நீ ஏன் கதை எழுதக்கூடாது’ன்னு கேட்டார். `அதெல்லாம் மிகப்பெரிய வேலை’ன்னு சொன்னேன். ‘நீ யோசிக்கிறத முதல்ல ஃப்ரீயா எழுது. அதுதான் முக்கியம்’னு சொல்லி எழுத வெச்சார். கதை, திரைக்கதைன்னு அவருடன் `மனசாரே’, ‘பஞ்சராங்கி’ என இரண்டு படங்கள் ஒர்க் பண்ணினேன். எழுத்துக்காக விருதுகள் கிடைச்சது. இயக்கத்தையும் கத்துக்கிட்டதால முதல் படமான ‘லைஃபு இஷ்டானே’வை இயக்கினேன். காதல், பிரேக்-அப் பற்றி ஜாலியா கதை சொன்ன விஷயம் ஆடியன்ஸுக்குப் பிடிச்சிருந்தது. அடுத்து அதோட சீக்வெல் ‘ஒய்ஃபு இஷ்டானே’ பண்ண முடிவெடுத்திருந்தேன். திருமணத்துக்குப் பிறகு ஹீரோ திகந்த் படும் பாட்டை ஜாலியா யோசிச்சு எழுதி வெச்சிருந்தேன். ஒருவகையில கல்யாணம் ஆகி ஹனிமூன் பீரியடெலாம் முடிஞ்ச பிறகு திட்டு வாங்கும் கணவன்மார்களுக்குப் படம் சமர்ப்பணமா இருக்கும்னு யோசிச்சேன். ஆனா, தயாரிப்பாளர் கிடைக்கலை. சினிமாவைவிட்டே போகலாம்னு நினைச்சப்போதான் நாம `அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிக்கலாமே’ன்னு முடிவெடுத்தேன். அப்போ ஒருநாள் ரஜினிகாந்த் பேட்டி ஒண்ணு படிச்சேன். ‘என்னால சென்னையில ரோட்டுல சாதாரணமா நடந்துபோக முடியலை’ன்னு வருத்தமா சொல்லியிருந்தார். எல்லோரும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார்னு மட்டும்தான் பார்க்குறாங்க. அவருக்குள்ள இருக்குற ஏக்கங்கள் வேறயா இருந்தது ஆச்சர்யமா தோணுச்சு. இந்த எதிரெதிர் விஷயங்களை வெச்சுதான் அந்த ஒன்லைன், ‘நாம சாபம்னு நினைக்கிற வாழ்க்கை இன்னொருத்தரோட பெருங்கனவு’ என்பதை எழுதினேன். என் முதல் படத்துல கேரக்டர் ரோல் பண்ணின நண்பன் சதீஷை ஹீரோவாக்கி முழுத் திரைக்கதையும் எழுதி முடிச்சேன். ஒரு வெப்சைட் ஆரம்பிச்சு, என்னைப் பற்றி என் ப்ளாக்ல டீட்டெய்ல் எழுதி கிரௌட் ஃபண்டிங்குக்கு அழைப்பு கொடுத்தேன். நிறைய பேர் ஆரம்பத்தில் கிண்டலடித்தார்கள். நம்பவும் இல்லை. ஃபேஸ்புக் மூலமா அதிகம் பேருக்கு விஷயம் போக, பத்து நாளில் 110 பேர் தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்து மொத்தமாக 50 லட்சம் வசூலாகியிருந்தது. இருந்த கைக்காசையும் போட்டு ‘ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ்’, ‘ஹோம் டாக்கீஸ்’ என கம்பெனி பெயரோடு படத்தை ஆரம்பித்தேன். (அனைவரின் பெயரையும் டைட்டில் கார்டில் போட்டேன்.) என்மீது நம்பிக்கை வைத்து ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸில் வேலை பார்த்த சித்தார்த்தா நூனி கேமரா மேனாகக் கிடைத்தார். நண்பர்களின் பங்களாக்கள், ஸ்டார் ஓட்டல் ரூம்கள் எனக் கிடைத்த இடங்களில் கேண்டிட், கொரில்லா மேக்கிங்கில் படத்தை எடுத்து முடித்தேன். படத்தை தியேட்டருக்குக் கொண்டு வரும் முன் நிறைய ஆளுமைகள் புகழ்ந்தார்கள். ‘இதுதான் கன்னட புதிய அலை சினிமா’ என்று மீடியாக்கள் எழுதின. ’’

 ‘தனுஷ், விஜய் சேதுபதியைக் கடத்திடவா?’

‘‘2013-ல் லூசியா ஹிட், 2016 கன்னட யூ-டர்ன் ஹிட், 2018 யூ-டர்ன் தமிழ் தெலுங்கு இரண்டிலும் ஹிட். ஆனா, ஏன் அடுத்த படத்துக்கு இவ்வளவு தாமதம்?’’

``யூ டர்னுக்குப் பிறகு பவண்குமார் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தேன். ‘ஒன்டு மொட்டைய கதா’ படத்தின் கதையோடு ராஜ் ஷெட்டி வந்தார். அதைத் தயாரித்தேன். நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரீஸ் 2019-ல் ‘லெய்லா’ பண்ணும் வாய்ப்பு கிடைத்ததும் அதைப் பயன்படுத்திக்கொண்டேன். தீபா மேத்தா போன்ற பெரிய இயக்குநருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அது தந்த விசிட்டிங் கார்டால் பத்துக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் வந்தன. நான் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டேன். கொரோனா முதல் அலையில் நிறைய படங்கள் பார்த்தேன், புத்தகங்கள் படித்தேன். அவசரப்படாமல் தற்போது தெலுங்கில் அமலா பாலை வைத்து சை-ஃபை வெப் சீரிஸ் பண்ணிக்கொண்டிருக்கிறேன். விரைவில் ‘ஆஹா’ பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகிறது. அதில் கொஞ்சம் கம்ஃபோர்ட் ஜோனைத் தாண்டி ஒரு பாத்திரத்தில் நடித்துமிருக்கிறேன். விஷயம் கேள்விப்பட்டு என் குரு யோக்ராஜ் பட் அவருடைய ‘காலி பட்டா-2’வில் நடிக்க அழைத்தார். அதிலும் செம ரகளையான ரோல் பண்ணியிருக்கிறேன். இப்படி நடிப்பும் இயக்கமும் பிஸியான நேரத்தில்தான் கொரோனா இரண்டாம் அலையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்.’’

 ‘தனுஷ், விஜய் சேதுபதியைக் கடத்திடவா?’

‘‘கன்னட மாஸ் ஹீரோ புனீத் ராஜ்குமாரோடு படம் பண்றீங்களாமே?’’

``ஸ்கிரிப்ட் ஒர்க் போய்க்கொண்டிருக்கிறது. புனீத் சார் ‘லூசியா’ பார்த்துவிட்டு கால் செய்திருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லியிருந்தார். தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டோம். கொரோனா அலை முடிந்ததும் ஷூட்டிங் போகிறோம்!’’

‘‘நிக்கோடின்னு ஒரு கனவுப்படம் பண்றதா சொல்லியிருந்தீங்களே?’’

``C10 H14 N2... அதான் படத்தோட டைட்டில். சொல்லப்போனா என் முதல் படமே அதுதான். கொஞ்சம் பட்ஜெட் தேவைப்பட்ட கதை. முதல் கனவுப்படம் அது. ரொம்ப ஷாக்கிங்கான ஒரு விஷயத்தை அந்தப் படம் பேசும். அதுக்கு மேல சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்!’’

 ‘தனுஷ், விஜய் சேதுபதியைக் கடத்திடவா?’

‘‘தமிழ் சினிமா பார்க்குறீங்களா?’’

``என்ன இப்பிடி கேட்குறீங்க? தமிழ் சினிமா என் கனவு தேசம். முன்பு ஒருமுறை உங்ககிட்ட பேசுறப்போ சொல்லியிருக்கேன். மணிரத்னம் என்னோட ஃபேவரைட் டைரக்டர். ரீசன்ட்டா பிரமாதப்படுத்தியிருக்கும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ வரை தமிழ்ப் படங்களை மிஸ் பண்ணியதே இல்லை. தனுஷ் - விஜய் சேதுபதியைக் கன்னட சினிமாவுக்குக் கடத்திட்டு வந்திடலாம்னுகூடப் பார்க்குறேன். ஒரு பை-லிங்குவல் பண்ண யோசனை இருக்கு. காலம் ஒத்துழைத்தால் நடக்கும் மை ஃப்ரெண்ட்!’’