Published:Updated:

“கமலுக்கும் தனுஷுக்கும் ரசிகன் நான்!”

சிவராஜ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சிவராஜ்குமார்

இத்தனை வருஷமா மக்கள் என்னை விரும்பிப் பார்க்கிறாங்க. அதற்காக உடம்பை நல்லா வெச்சிக்கிறேன்.

“கமலுக்கும் தனுஷுக்கும் ரசிகன் நான்!”

இத்தனை வருஷமா மக்கள் என்னை விரும்பிப் பார்க்கிறாங்க. அதற்காக உடம்பை நல்லா வெச்சிக்கிறேன்.

Published:Updated:
சிவராஜ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சிவராஜ்குமார்

துள்ளலையும் துடிப்பையும் கூடவே வைத்துக் கொண்டு இருக்கிறார் சிவராஜ்குமார். கன்னட சினிமா உலகமே அவர் சொல்பேச்சு கேட்கிறது. ‘சிவண்ணா’ எனச் செல்லம் கொஞ்சுகிறது கன்னட உலகம். நடிக்கத் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகின்றன. சாக்லேட் ஹீரோ, கோபக்கார இளைஞன், ஆக்‌ஷன் அவதாரம் என அடுத்தடுத்து பரபரக்கிறார். கர்நாடகாவிற்கே பிடிக்கும் வசீகர நட்சத்திரம். “விகடனா, எனக்குப் பிடிக்குமே... பார்த்திருக்கேன். சென்னை கல்யாணி ஹாஸ்பிடலில்தான் பொறந்தேன். புதுக் கல்லூரியில்தான் படிச்சேன். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம்தான் நம்ம ஏரியா...” கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ சாதாரணமாகப் பேச ஆரம்பிக்கிறார். நம்மூர் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் ‘பைராகி’ படப்பிடிப்பு. குறும்பு, ஆக்‌ஷன், வீரம், தியாகம் என உணர்வுகளின் குவியலைக் கொட்டித் தீர்த்ததைப் பார்த்தேன்.

“கமலுக்கும் தனுஷுக்கும் ரசிகன் நான்!”

``35 வருடங்களாக நிலைத்து நிற்கிறீர்கள். எப்படி உணர்றீங்க?’’

“இத்தனை வருஷமா மக்கள் என்னை விரும்பிப் பார்க்கிறாங்க. அதற்காக உடம்பை நல்லா வெச்சிக்கிறேன். மக்கள் அன்பை எப்பவும் நினைச்சுக்குவேன். நானும் ஒரு வேலை செய்யணும்ங்கறதுக்காக நடிக்க வரலை. பணத்திற்காகவோ, யாருக்கும் கட்டுப்பட்டோ செய்யல. இது உண்மையிலேயே அருமையான வேலைன்னு நினைப்பதால் செய்கிறேன். ஒவ்வொரு படத்திற்கும் அந்தக் கதைக்குத் தேவைப்படுவதைவிட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கு. இது வெகுஜன சந்தை. மக்களுக்குப் பிடிச்சதை கவனமாகச் செய்ய வேண்டியிருக்கு. ஒண்ணும் தெரியாம ஒருத்தரால் 35 ஆண்டுகளாக சீராக வளர்ச்சி பெற முடியாது. நான் இன்னும் உழைக்கணும். என்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிறேன். இது நடிகனுக்கு சாதாரண வேலையில்லை. ஒவ்வொரு கேரக்டரையும் செய்ய முடியும்னு நம்பிக்கை வரணும். ஒரு புது உலகத்துக்குள்ளே புகுந்து அதில் உங்களை நம்ப வைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா பிரதர்!”

“கமலுக்கும் தனுஷுக்கும் ரசிகன் நான்!”

``சூப்பர் ஸ்டாராக இருந்துக்கிட்டு உங்ககிட்ட இவ்வளவு எளிமையா..?!’’

“நான் சென்னையில்தான் பிறந்தேன். படிச்சு வந்ததெல்லாம் அங்கேதான். அப்பாவும் அம்மாவும் என்னைப் பணக்கார வீட்டுப் பையனாவே வளர்க்கலை. பஸ்ஸில்தான் போவேன். ‘அப்பதாண்டா வாழ்க்கை தெரியும்’னு அப்பா சொல்லுவார். ராஜ்குமார் பையன்னு எனக்கு ஒரு சலுகையும் கிடையாது. அதனால் வந்த மனப்பக்குவம்தான். நான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தூங்குற மாதிரியே குடிசையிலும் தூங்குவேன். இந்த எளிமைதான் என்னை இவ்வளவு உயரத்திற்குக் கொண்டு வந்திருக்கும்னு நினைக்கிறேன். அப்பா பெயரைக் காப்பாத்தணும். கொஞ்சம் பிசகினாலும் பிரச்னை. ஒரு ராஜ்குமார், ஒரு சிவாஜி, ஒரு எம்ஜிஆர், ஒரு அமிதாப், ஒரு ரஜினி, ஒரு கமல் இனிமேல் தோன்ற முடியுமான்னு தெரியலை. ரொம்ப அபூர்வமாகத்தான் அப்படி ஆக முடியும்.”

`` ‘கர்நாடக சக்கரவர்த்தி’ன்னு உங்களுக்குப் பெயர் இருக்கே?’’

“மக்களே கொடுக்கும்போது மறுக்கிற மனசு இல்லை. ஆனால் இந்த ஃபீல்டுக்கு உண்மையாக இருக்கேன். உண்மையை மட்டுமே பேசுவேன். என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது. தீமைக்கு ஒருநாளும் அடிபணிய மாட்டேன். கருணை தேவைப்படுகிற இடத்தில் அதற்குப் பஞ்சம் வைக்க மாட்டேன். யாரைப் பத்தியும் புறம் பேச மாட்டேன். பொறாமைப்படுறது என்னோட அகராதியிலே கிடையாது. இந்த சிவண்ணா அப்படித்தான்.”

“கமலுக்கும் தனுஷுக்கும் ரசிகன் நான்!”

``இந்த ‘பைராகி’ படத்தில் என்ன விசேஷம்?’’

“விஜய் மில்டன் கதை சொல்லும்போது அதில் எமோஷன்ஸ் அளவா இருக்கு. எல்லோருக்கும் சரியான இடங்கள் தந்திருக்கார். கேமரா, டைரக்‌ஷன்ல நல்ல வேகம். அதே நேரத்தில் கவனம். அவர்கிட்டே எனக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு. வாழ்க்கையில் விஜய் கஷ்டப்பட்டு வந்ததால், சினிமாவிற்கான அம்சங்கள் அனுபவமாக வந்து நிற்கிறது.”

``தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீர்களா?’’

“என்ன இப்படிக் கேட்டுட்டீங்க... விடாம பார்க்கிறேன். நல்ல ஸ்க்ரிப்ட், நல்ல காம்பினேஷன் கிடைச்சா நானே தமிழில் நடிப்பேன். கமலுக்குப் பெரும் ரசிகன் நான். முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன். சிவாஜி சார் ஃபேமிலி எல்லாம் எங்க அப்பாவுக்கு ரொம்ப நெருக்கம். சிவகுமார் சார், ரஜினி சார் எப்பவும் தொடர்பில் இருப்பாங்க. தனுஷ் ரொம்பப் பிடிக்கும். அவர் நடிப்புக்கு நான் முதல் ரசிகன். ‘நம்ம ஆளுடா’ன்னு சொல்ற மாதிரி அவர் இருக்கார். எல்லா கேரக்டர்களிலும் மனுஷன் அப்படியே பின்னி எடுக்கிறார். அவர் என்ன செஞ்சாலும் எனக்குப் பிடிக்கும். தனுஷுக்குன்னு அவ்வளவு அழகா கேரக்டர்கள் அமையுது. தனுஷ் 100% நடிகன்.”

“கமலுக்கும் தனுஷுக்கும் ரசிகன் நான்!”

``உங்களுக்கு இருக்கிற புகழுக்கு ஏன் இன்னும் அரசியலுக்கு வரலை?’’

“சார்... அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். அது என் Cup of soup இல்லை. எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். ‘சிவண்ணா... சிவண்ணா’ன்னு கொண்டாடும்போது என்னால ஒரு சைடு எடுக்கவே முடியாது. எவ்வளவோ அழைப்பு வந்தது. ஸாரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”

“கமலுக்கும் தனுஷுக்கும் ரசிகன் நான்!”

``அங்கே, இங்கேன்னு அரசியலைக் கவனிப்பீங்களா?’’

“நாமளும் வெகுஜனத்தில் சேர்த்திதானே. கவனிச்சுட்டு வரணும். அங்கேகூட ஸ்டாலின் சார் வந்திருக்கார். நல்ல ஆட்சி செய்யட்டும். அவருக்கு வாழ்த்துகள்.”

“கமலுக்கும் தனுஷுக்கும் ரசிகன் நான்!”

``வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணும்?’’

“மக்கள் என்னை எப்போதும் பார்க்கவும் பேசவும் விரும்புறாங்க. அதுக்கு இடம் கொடுத்து வந்திருக்கேன். மக்களை அதிக மகிழ்ச்சி அடைய வைக்கணும்னு நினைச்சு அது நடந்திருக்கு. சின்சியரா, காலம் தவறாம, உண்மையாக இருந்தா எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்னு நம்புகிறேன். வலி இல்லாமல் வாழ்க்கை இல்லைன்னு தோணுது. நான் எதையும் expect பண்றவன் இல்லை; accept பண்றவன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism