சினிமா
Published:Updated:

“திரைக்கதைக்கு ஒரு வருடம்... டைரக்‌ஷனுக்கு 32 நாள்கள்தான்!”

 ராஜ்.பி.ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜ்.பி.ஷெட்டி

யதார்த்த கேங்ஸ்டர் சினிமாக்களை ஆரம்பித்து வைத்த ராம் கோபால் வர்மா ட்வீட் பண்ணி வாழ்த்தியிருந்தார். அனுராக் காஷ்யப் போனில் தொடர்புகொண்டு பாராட்டினார்

சாண்டல் வுட் எனும் கன்னட சினிமாவின் முகம் இப்போது ரொம்பவே மாறிவிட்டது. முடி கொட்டிப் போய் ஒடிசலான தேகம் கொண்ட ராஜ்.பி.ஷெட்டி, தன்னையே ஹீரோவாக்கிக் கதை சொன்ன ‘ஒண்டு மொட்டைய கதே’ 2017-ல் கன்னட சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. ராஜ். பி. ஷெட்டியின் இரண்டாவது படம் ‘கருட காமனா ரிஷப வாகனா’ அண்மையில் ரிலீஸாகி ‘வித்தியாசமான கேங்ஸ்டர் படம்’ என்று இந்திய சினிமா அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டே படங்களின் மூலம் கன்னட சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷனாகிப்போன ராஜ். பி. ஷெட்டியிடம் பேசினேன்.

“திரைக்கதைக்கு ஒரு வருடம்... டைரக்‌ஷனுக்கு 32 நாள்கள்தான்!”

``முதலில் வாழ்த்துகள். தமிழில் ‘சுப்ரமணியபுரம்’, பாலிவுட்டில் ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படங்களைப் போல ‘கருட காமனா ரிஷப வாகனா’ படம் வன்முறையை வித்தியாசமாகக் காட்சிப்படுத்தியிருந்தது. உங்கள் இயக்கமும் நடிப்பும் மெய்சிலிர்க்க வைத்தன. இந்தப் படத்தை உருவாக்க எது காரணமாக இருந்தது?’’

“நன்றி. முதல் படம் ‘ஒண்டு மொட்டைய கதே’ ரொமாண்டிக் காமெடியாக அமைந்தது. முடிகொட்டிப்போன மொட்டைத்தலைதான் கதைக்கரு என்பதால் அதையே ரசித்தார்கள். என்னை அங்கீகரித்த ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையை இரண்டாவது படமாகச் சொல்ல ஆசை. நீங்கள் சொன்ன இரண்டு படங்களுமே என்னை ரொம்ப பாதித்த சினிமாக்கள். கன்னட சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும், ஓரளவு உண்மைக்கு அருகில் ஒரு படத்தைத் தர வேண்டும் என நினைத்தேன். அதற்கு எனக்கு கோஸ்டல் கர்நாடகா மங்களூரின் சூழல் கதைக்களமாக உதவியது. இரண்டு நண்பர்களைப் பற்றிய சிம்பிளான கதை. வன்முறைப் பாதையை அவர்கள் தேர்ந்தெடுக்காமலே, அவர்களை வன்முறை தேர்ந்தெடுத்திருக்கும். படம் நெடுக வன்முறை இருந்தாலும் அதற்குக் காரணம் அவர்களின் சூழலாகத்தான் இருக்கும். ஒரு கேங்ஸ்டர் தானாக உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறான் என்பதே கதை. மக்கள் ரசிப்பார்கள் என்று தெரியும். ஆனால், எல்லா மொழிகளிலிருந்தும் பாராட்டுகள் குவிவது எனக்கே அவ்வளவு பெருமையாக இருக்கிறது.”

“திரைக்கதைக்கு ஒரு வருடம்... டைரக்‌ஷனுக்கு 32 நாள்கள்தான்!”

``பாலிவுட் இயக்குநர்கள் ராம் கோபால் வர்மாவும் அனுராக் காஷ்யப்பும் உங்கள் திரைமொழியைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்களே...’’

“யதார்த்த கேங்ஸ்டர் சினிமாக்களை ஆரம்பித்து வைத்த ராம் கோபால் வர்மா ட்வீட் பண்ணி வாழ்த்தியிருந்தார். அனுராக் காஷ்யப் போனில் தொடர்புகொண்டு பாராட்டினார். அவருடைய ‘தேவ் டி’, ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படங்களைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனவன் நான். என்னுடைய ‘கருட காமனா ரிஷப வாகனா’ படம் அவரை ரொம்ப ஆச்சர்யப்படுத்தியதாம். ‘வெறும் 32 நாள்களில் எப்படி இப்படி ஒரு படத்தை இயக்கி நடிக்க முடிந்தது? உன் சினிமா பாணியைத் தெரிந்துகொள்ள வேண்டும். உன்னைப் பார்க்க வேண்டும். மும்பைக்கு வா!’ என்று உரிமையோடு அழைத்தார். இதைவிட என்ன பாராட்டு ஒரு இயக்குநருக்குக் கிடைத்துவிடப்போகிறது?”

“திரைக்கதைக்கு ஒரு வருடம்... டைரக்‌ஷனுக்கு 32 நாள்கள்தான்!”

`` ‘கருட காமனா ரிஷப வாகனா’ படத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா எனக் கடவுள் பெயர்களை வைத்துக் கதை சொல்லியிருந்தீர்கள். அந்த யோசனை எப்படி உதித்தது?’’

“ `யக்‌ஷகானா’ என்ற கடவுளர்களைப் பற்றிய வீதி நாடகத்தைச் சிறுவயதில் ஊர்த்திருவிழாவில் பார்த்தேன். சிவா-விஷ்ணு-பிரம்மா என்ற மும்மூர்த்திகளுக்குள் சண்டை நடந்தது என்று அந்தக் கதையில் சொல்லப்பட்டபோது, கடவுள்களுக்குள் சண்டை நடக்குமா என வியந்தேன். அந்த ஐடியா அப்படியே மனதில் வேராக வளர்ந்துவிட்டது. கன்னட இலக்கியப் பிதாமகன் குவெம்புவின் தீவிர வாசகன் நான். அவருடைய கதைகளில் வரும் கடவுளர்களின் அம்சம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்பதை நம்புகிறேன். காத்தல் - அழித்தல் - படைத்தல் என்ற மூன்று வேலைகளின் விகிதாச்சாரம் வேண்டுமானால் ஒவ்வொருவருக்குள்ளும் மாறலாம். ஆனால், இந்த மூன்று விஷயங்களும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு. என் மூன்று பிரதான கேரக்டர்களான சிவா, ஹரி, பிரம்மையா பாத்திரங்களை அப்படித்தான் நான் எழுதினேன். சிவாவும் ஹரியும் எப்படி நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறினார்கள். பயந்த சுபாவம் கொண்ட பிரம்மையா என்ற போலீஸ் எப்படி கேங்ஸ்டர்களை அழிக்கிறான் என மிகைப்படுத்தல் இல்லாமல் நான் ஸ்கிரிப்ட்டில் எழுதியதைத்தான் காட்சிப்படுத்தியிருந்தேன். இந்தக் கதைக்கான திரைக்கதை எழுதத்தான் ஒரு வருடம் ஆனது. ஆனால் இதை இயக்க 32 நாள்கள் போதுமானதாக இருந்தது!”

“திரைக்கதைக்கு ஒரு வருடம்... டைரக்‌ஷனுக்கு 32 நாள்கள்தான்!”

``இந்தப் படத்தில் மங்களூரு நகரின் மங்கள தேவி பகுதியும் கிரிக்கெட் விளையாட்டும் கதையில் ஒரு கேரக்டராகவே வருகிறது. நீங்கள் வளர்ந்த பகுதியா அது?’’

“படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டரான பிரவீன் அந்த ஊர்க்காரர். நானும் மற்றும் சில சினிமா நண்பர்களும் ஷிமோகா மாவட்டத்தின் பத்ராவதியைச் சேர்ந்தவர்கள். பள்ளிக் காலங்களில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மங்களூரு போயிருந்த அனுபவம் அப்படியே நெஞ்சில் இன்னும் இருக்கிறது. நாங்கள் சினிமா பற்றி அதிகம் தெரியாமல்தான் வளர்ந்தோம். 2014-ல் குறும்படங்கள் இயக்கினோம். ஆனால், ரொம்பவே சுமாரான படங்கள் அவை. விளம்பரப்பட இயக்குநராக லோக்கலில் ஐந்தாயிரம், பத்தாயிரம் பட்ஜெட்டில் விளம்பரப்படங்கள் எடுத்ததுதான் எங்கள் சினிமாவுக்கான என்ட்ரி. இப்படி லோ பட்ஜெட்டில் வேலை செய்த அனுபவத்தால்தான் ‘ஒண்டு மொட்டைய கதே’ படத்தை வெறும் 25 லட்ச ரூபாயில் எடுக்க முடிந்தது. மங்களூரைக் காட்சிப்படுத்த கிரிக்கெட்டும் உதவியது. ஒரு கேங்ஸ்டர் என்றால் எப்போதும் சுமோவில் ஆட்கள் புடை சூழப் பறக்க வேண்டுமா என்ன? அதனால்தான் RX100-ல் அழுக்குக் கைலி சட்டையில் போகும் ஒருவனை கேங்ஸ்டராகக் காட்டியிருந்தேன். அவன் பிறப்பால் குற்றவாளி அல்ல. ஆனால் பிறக்கும்போதே குற்றத்தோடு பிறந்தவன். அதனால்தான் அவன் கிரிக்கெட் விளையாடுவதாகக் காட்சிப்படுத்தியிருந்தேன். அவன் விளையாடும் அதே கிரிக்கெட், படத்தின் க்ளைமாக்ஸுக்கும் உதவிகரமாக இருந்தது!”

“திரைக்கதைக்கு ஒரு வருடம்... டைரக்‌ஷனுக்கு 32 நாள்கள்தான்!”

``படத்தில் உங்கள் கேரக்டர் இவ்வளவு பேசப்படும் என எதிர்பார்த்தீர்களா?’’

“எல்லா கேரக்டரைப் போலத்தான் என் சிவா கேரக்டரை ரசித்து எழுதியிருந்தேன். ரொம்பவே அப்பாவி அவன். கொலைகள் செய்வதைப் பற்றிய அச்சமோ, கவலையோ அவனிடம் இருக்காது. அடிப்படையில் குழந்தை மனம் கொண்டவன். ஆனால், கோபக்காரன். அதற்கான சூழல் அவன் பிறப்பிலே இருக்கிறது. அவன் கோபத்தை ஏன் தனக்கான கேடயமாக மாற்றிக்கொண்டான் என்பதைக் கதையில் சொல்லியிருந்தேன். நடிக்கும்போது, அந்தக் கோபக்காரனை என் உடல்மொழியில் காட்ட வேண்டி கடுமையான கோபத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டினேன். படம் முடியும்வரை கேமராமேன் தவிர யூனிட்டில் எல்லோரும் என்னிடம் பேசவே பயப்பட்டார்கள். அப்படி ஒரு மூடு கிரியேட் பண்ணித்தான் சிவா கேரக்டரில் நடித்தேன். இல்லையென்றால் படமாக்க சிரமமாகியிருக்கும்! படத்தில் கொலை செய்துவிட்டு மழையில் நான் நடனமாடும் ஒரு காட்சி ஆன் தி ஸ்பாட் வந்த யோசனை. சிவ தாண்டவமாக அது மாறியதை நானே முன்பு உணரவில்லை. இப்போது சிவா கேரக்டரை எல்லோரும் பாராட்டுவது என் பாக்கியம்! அதேபோல கேங்ஸ்டர் படம் என்றாலே வழக்கமாக இருக்கும் பெண் கேரக்டர்கள் இந்தப் படத்தில் இல்லாமலிருந்ததும் யதேச்சையாக அமைந்தது. அதையும் எல்லோரும் குறிப்பிட்டுப் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது! ‘கருட காமனா ரிஷப வாகனா’ வெற்றியை, மறைந்த புனித் ராஜ்குமார் சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!”

“திரைக்கதைக்கு ஒரு வருடம்... டைரக்‌ஷனுக்கு 32 நாள்கள்தான்!”
“திரைக்கதைக்கு ஒரு வருடம்... டைரக்‌ஷனுக்கு 32 நாள்கள்தான்!”

``அடுத்து என்ன மாதிரியான படம் பண்ணப் போகிறீர்கள்?’’

“இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் நிச்சயமாக கேங்ஸ்டர் மூவி இல்லை. சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். முற்றிலும் வேறு ஜானராகப் பண்ண வேண்டும். முதலில் எழுத வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் பழகி, வாழ்ந்து எழுத வேண்டும். அப்படி கேரக்டர்களோடு வாழ்ந்து ஒரு கதையை எழுதிவிட்டால் எனக்கு ஒரு மாசம் போதும்.