Published:Updated:

``கப்புள் கோல்ஸுக்கு அடையாளமா சிரஞ்சீவி - மேக்னாவைத்தான் சொல்லுவோம்... ஆனா!'' - கலங்கும் கன்னட சினிமா

அர்ஜுன், சிரஞ்சீவி, மேக்னா
அர்ஜுன், சிரஞ்சீவி, மேக்னா

பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவின் திடீர் மரணம் கன்னடத் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜுனின் அக்கா மகன்.

சிரஞ்சீவியின் சகோதரர் துருவ சர்ஜாவும் நடிகர். நடிகர் சிரஞ்சீவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் சிரஞ்சீவி சர்ஜா.

Chiranjeevi Sarja, Meghana Raj
Chiranjeevi Sarja, Meghana Raj

39 வயதான சிரஞ்சிவி சர்ஜா 2009-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்துவந்தார். இவரின் மனைவி மேக்னா ராஜ் தமிழில் `காதல் சொல்ல வந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானர்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் போல சிரஞ்சீவியும் ஆக்‌ஷன் படங்களில் ஆர்வம் கொண்டவர். இந்த லாக்டெளனில் சிரஞ்சீவி- மேக்னா இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவுகள் வெளியிட்டபடி ஆக்டிவாக இருந்தார்கள். இந்நிலையில்தான் திடீர் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

சிரஞ்சீவியின் மனைவி மேக்னாராஜுடன் மலையாள படமொன்றில் நடித்தவர் நடிகர் முரளி கிருஷ்ணன். சிரஞ்சீவி - மேக்னாவுக்கு நெருங்கிய நண்பர். இவர் தமிழில் வெளியாகி நல்ல ஹிட் அடித்த `அதே கண்கள்' படத்தில் வில்லியாக நடித்த ஷிவதாவின் கணவர். சிரஞ்சீவியும் `அதே கண்கள்' படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Murali Krishnan, Meghana Raj
Murali Krishnan, Meghana Raj

``மலையாளத்தில் என்னோட முதல் படம் `ரகுவின்டே ஸ்வந்தம் ராஸியா'. இந்தப் படத்தோட ஹீரோயின் மேக்னா ராஜ். 2011-ல இந்தப்படம் ரிலீஸ் ஆச்சு. அப்போதில் இருந்தே மேக்னா ராஜை நல்லா தெரியும். இந்தப் படத்துல இவங்க கமிட்டானப்போ, ஏற்கெனவே நாலு படத்துல ஹீரோயினா நடிச்சு முடிச்சிருந்தாங்க. அதுமட்டுமல்லாமல், இவங்க குடும்பமே பெரிய சினிமா பின்னணி கொண்ட குடும்பம். இருந்தும், கொஞ்சம்கூட பந்தாவே இல்லாம பழகுவாங்க. படத்தோட ஷூட்டிங் போயிட்டிருந்தப்போ ஒரு பையனை காதலிக்கிறதா சொன்னாங்க. படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு புரொமோஷன் வேலைகள் இருந்தப்போ மேக்னா எப்பவும் அவங்க பாய்ஃபிரண்ட் பத்திதான் பேசிக்கிட்டே இருப்பாங்க. அப்போதான் கன்னட சினிமால பெரிய நடிகரா இருக்குற சிரஞ்சீவி சர்ஜா இவங்களோட பாய் ஃபிரண்டுனு தெரியும். படத்தோட ரிலீஸூக்கு முன்னாடிநாள், `உங்களோட முதல் படம் நாளைக்கு ரிலீஸாகப் போகுது, நல்லதே நடக்கும்'னு வாழ்த்துகள் சொன்னார் சிரஞ்சீவி.

எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. 10 வருஷத்துக்கு மேல காதலிச்சு 2018-ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அடிக்கடி போன்ல நட்பு ரீதியா பேசிக்கிட்டிருப்போம். அப்போ சிரஞ்சீவி, `ஷிவதாவோட நீங்க நிச்சயம் எங்க வீட்டுக்கு வரணும்'னு கூப்பிடுவார். ஒவ்வொரு முறையும் சொந்த சகோதரர்கிட்ட பேசுற மாதிரி பேசுவார். அவர் இறந்துட்டார்ங்கிறதை நம்பவே முடியல. மேக்னா மூணு மாசம் கர்ப்பமா இருக்குறதா கேள்விப்பட்டேன். ரொம்பவே கஷ்டமா இருக்கு. மேக்னாவுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனுகூட தெரியல. சீக்கிரமே அவங்க மன உறுதியோட திரும்ப வரணும்'' என்றார் முரளிகிருஷ்ணன்.

Chiranjeevi, Meghana Raj
Chiranjeevi, Meghana Raj

சிரஞ்சீவிக்கும் அர்ஜுன் குடும்பத்துக்கும் நெருக்கமானவர்களிடம் பேசினோம். ``திருமணத்துக்குப் பிறகு இருவருமே நடிப்பில் பிஸியாக இருந்ததால் இந்த லாக்டெளனில்தான் அதிக நேரம் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக இருப்பதாகச் சொன்னார்கள். தினமும் வீடியோக்கள் போடுவது, ஒன்றாக சமைப்பது என ஆக்டிவாக இருந்தார்கள். 10 வருஷமாகக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். எப்பவும் அவ்வளவு க்ளோஸாக இருப்பார்கள். `இப்படிப்பட்ட ஜோடியாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும். கப்புள் கோல்ஸுக்கு அடையாளம் இவர்கள்' என்றெல்லாம் எங்கள் வீடுகளில் உள்ளவர்களிடம் சொல்லுவோம். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இந்தத் திடீர் மாரடைப்பு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு