Published:Updated:

கண்ணதாசன் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

Kannadasan - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Kannadasan - A Reporter's Diary

“தனிமையிலே இவருக்குச் சிந்தனை பிறக்கும்”.. கண்ணதாசன் Introvert போல?!

கண்ணதாசன் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

“தனிமையிலே இவருக்குச் சிந்தனை பிறக்கும்”.. கண்ணதாசன் Introvert போல?!

Published:Updated:
Kannadasan - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Kannadasan - A Reporter's Diary

கண்ணதாசன் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து...

விகடன் குழந்தைகள் மலரில் நேருவைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என எங்கள் ஆசிரியர் விரும்பினார். கவிஞரின் வீட்டிற்கு போன் செய்து கேட்டேன்.

‘அவர் ஒரு திருமணத்திற்காகக் காரைக்குடி போயிருக்கிறார்’ எனப் பதில் வந்தது. காரைக்குடிக்குப் போனேன். ``கல்யாண வீட்டில் கவிஞரைப் பார்த்து எப்படிக் கவிதை வாங்கி வருவது?" என் தலைக்கு மேல் ஒரு பெரிய கேள்விக்குறி பயமுறுத்திக் கொண்டேயிருந்தது.

முகூர்த்தத்துக்குப் போகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் கவிஞர். அவர் முன் சென்று "வணக்கம்!" என்றேன். "என்ன விசேஷம்?” - சிரித்த முகத்துடன் கேட்டார்.

"குழந்தைகள் மலருக்கு ஆசிரியர் உங்களிடமிருந்து நேருவைப் பற்றி ஒரு கவிதை வாங்கி வரச் சொன்னார் என்றேன். இந்த நேரத்தில் ஒருவர் வந்து, “முகூர்த்தத்திற்கு நேரமாகிவிட்டதே” என்று கவிஞரிடம் கூறினார்.``இதோ வந்துட்டேன்..!

Kannadasan - A Reporter's Diary
Kannadasan - A Reporter's Diary

கண்ணப்பா!” என்று தன் உதவியாளரை அழைத்தார் கவிஞர்: ``பேப்பர் பேனா எடுத்துக்க... விகடனுக்கு - ஒரு பாட்டு எழுதிக்கொடுத்துடலாம்” என்று சொல்விக் கொண்டே அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். 

கிடுகிடுவென்று கவிஞர் கவிதையைச் சொல்ல, கண்ணப்பன் எழுத, தொடர்ந்து சுத்தமான ‘பிரதி’ ஒன்று எனக்கு எடுத்துக் கொடுக்க, அதைக் கவிஞர் எழுத்துப் பிழை பார்க்க - இத்தனையும் பத்துப் பன்னிரண்டுநிமிடங்களுக்குள் முடிந்து முகூர்த்தத்திற்குப் புறப்பட்டுவிட்டார் கவிஞர்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் கவிதை சொல்லும் அவர் திறமையைக் கண்டு நான் சிலையானேன்.

`கவலையில்லாத மனிதன்’ படத்தை சங்கர் அவர்கள் டைரக்ட் செய்யும் போது அவரது உதவியாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். படம் முடிந்து சென்ஸாருக்குப் போயிற்று. 

‘மது. . . இது...மாது... மிதம் இது மீதம்’ என்ற கவிஞரின் பாட்டுக்கு எம். ஆர். ராதா அவர்கள் வாயசைத்துப் படமெடுக்கப்பட்டிருந்தது. சென்ஸார் அதிகாரிகள் கவிஞரின் அந்தப் பாட்டின் பல்லவியையே எடுத்து விடவேண்டும் என்றார்கள்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பிக் கொண்டிருந்தபோது கவிஞர் வந்தார். தான் எழுதிய பல்லவியைக் கேட்டார்.

உடனே, “அதனால் என்ன? அந்தப் பல்லவியை மட்டும் ‘மனம் இது மாறும் அனுதினம் சுகம் தேடும்’ என்று மாற்றிவிடலாம்” என்று கூறி எல்லோருடைய கலக்கத்தையும் சில நிமிடங்களில் தீர்த்து வைத்தார். 

இப்படி, பிரச்னை என்று வந்துவிட்டால் கவிஞரின் திறமை விஸ்வரூபம் எடுத்துச் செயல்படும். மேடையில் பேசும் போதும் கவிஞர் சுலபமாகக் கேட்பவர்களைக் கவர்ந்து விடுவார்.புரசை வெள்ளாளத் தெருவில் ஒரு கூட்டம்.

கவிஞர் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. மற்றவர்களும் அந்தச் சலசலப்பு எழுந்த பக்கத்தைப் பார்க்கத் துவங்கினர். உடனே கவிஞர், “அங்கு பாதை கேட்கிறார்கள். யாரும் உபாதைப் படவேண்டாம்!' என்றார். 

சீரியஸ்னெஸ் காமெடியாக விட்டது - நொடியில்! கவிஞர் தீவிர கிருஷ்ண பக்தர். கண்ணனுக்கு, தானே ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று திருவான்மியூரில் நிலம் வாங்கியிருக்கிறார். விரைவிலேயே கட்டியும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். 

Kannadasan - A Reporter's Diary
Kannadasan - A Reporter's Diary

அமரர் சின்னப்பதேவர் கவிஞருக்கு சடையப்ப வள்ளல்! தேவர் இல்லாமல், அவர் பெயர் போடாமல் கவிஞர் வீட்டில் எந்த நல்ல காரியமும் நடக்காது. கவிஞரின் படுக்கை அறையில் தேவரின் பெரிய படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கிறது. கவிஞருக்கு ஊர் ஊராகச் செல்வது என்றால் மிகவும் பிடிக்கும்.

அப்போது தன் எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபடுவார். புதிய ஏற்பாடு - ஏசுவின் வாழ்க்கை வரலாறைப் பதினெட்டே நாட்களில் வெளியூரில்தான் எழுதி முடித்தார்.சமீபத்தில் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற சேரமான் காதலி பாதிக்கு மேல் வெளியூரில் எழுதப்பட்டதுதான். தாமே எழுதிக் கொண்டிருந்தவர், 1969-க்குப் பிறகு டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். பிறகு கவிதை ‘சொல்லுவது’தான்.

செக்குகளிலும் கடிதங்களிலும் கையெழுத்துப் போடுவதோடு சரி. இவர் டிக்டேட் பண்ணும்போது எழுதுபவர்களுக்குத்தான் கை வலிக்குமே தவிர வார்த்தைகளில் தடங்கலோ, கருத்துப் பஞ்சமோ கொஞ்சமேனும் இவரிடம் கிடையாது. கவிஞரிடம் உதவி என்று யார் போய் நின்றாலும் தட்டிக் கழிக்க மாட்டார்.

முடிந்தவரை அதைச் செய்து முடிக்கவே முனைவார்.``பசி... காசு” என்று ஒரு கை இவரை நோக்கி நீட்டப்பட்டுவிட்டால் உடனே அதில் ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ நிச்சயம் விழும். இவர் சாதாரணமாகச் சட்டையில் பணம் வைத்திருக்கமாட்டார். பக்கத்திலிருப்பவர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்து விடுவார்! சினிமாவுக்குக் கவிஞர் எழுதிய முதல் பாடல் `கன்னியின் காதலி’ என்ற படத்தில் வந்தது. `கலங்காதிரு மனமே...

உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே" என்ற பாடல் தான் அது. “‘மங்கம்மா சபத’த்தில் அமரர் கொத்தமங்கலம் சுப்புவின் ஒரு பாடல் தான் என்னைப் டாட்டெழுதத் தூண்டியது. சுப்புதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்தார்” என்பார் கவிஞர். கவிஞருக்கு ஞாபக சக்தி அதிகம். பிள்ளையார்பட்டியில் தான் படித்துக் கொண்டிருந்தபோது- 1938-39-ல் விகடனையும் தவறாமல் படிப்பார். 

அப்போது விகடன் அட்டையில் பெண்களின் ஹை ஹீல்ஸ் ஷூவைக் கிண்டல் செய்து இரண்டு கொக்குகள் பேசுவதாகக் கவிதை வந்திருந்தது. அதை அப்போது படித்த கவிஞர் நினைவில் வைத்துக் கொண்டு சமீபத்தில் விகடன் பொன் விழாவில் பேசும்போது அதைக் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 41 ஆண்டுகளாக அதை மறக்காமல் இருந்திருக்கிறார். இப்படிப் பல, பசுமரத்தாணி போல அவர் நினைவில் இருக்கின்றன. 

முன்பெல்லாம் கவிஞருக்குக் கொஞ்சம் கோபம் வரும். அவர் சத்தம் போட்டுத் திட்டிக் கூடப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கிறார். தனிமை கவிஞருக்குப் பிடிக்கும். தனிமையிலே இவருக்குச் சிந்தனை பிறக்கும். தனியே உட்கார்ந்து யோசித்துக் கொண்டேயிருப்பார்.

சொல்வதை எழுத ஆள் இருந்தால் போதும்; சொல்லிக் கொண்டே இருப்பார். அத்தனையும் அட்சர லட்சம் பெறும்! சரஸ்வதியின் அருள் நீண்ட நாட்களாகவே இவரிடம் இருக்கிறது. லட்சுமி கடாட்சம் சில வருடங்களாகத்தான் இவர்மீது படத் தொடங்கியிருக்கிறது.

- பாலா

(01.02.1981 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism