Published:Updated:

நம்ம சூர்யாவுக்கு என்னதான் ஆச்சு?! - 10 பாயின்ட் `காப்பான்' கவலை! #Kaappaan

Surya, saayesha
Surya, saayesha

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் 'காப்பான்' படம் எப்படி இருக்கிறது!

1. சூப்பர் ஹீரோவான கேப்டன் அமெரிக்காதான் 'காப்பான்'-ல் வில்லன். கேப்பிடலிசம் என்கிற கார்ப்ரேட்டிசம் + அமெரிக்க அரசியல் ஆட்டம் என இரண்டையும் கலந்து இந்தியாவின் உண்மையான எதிரி யார் எனக் குறியீடுகளால் 'புரிய வைக்கிறார்' கே.வி.ஆனந்த். இந்தக் குறியீடு சாமானியர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத் தீவிரவாதிகளின் சிம்பிளாக 'கேப்டன் அமெரிக்கா' லோகோவைப் படம் முழுக்கப் பயன்படுத்தியிருப்பது 'சிறப்பு'!

2. காஷ்மீர் பிரச்னை, டெல்டா இயற்கைவள சுரண்டல், ஜெய் ஹிந்த் தேசிய ஒற்றுமை, இந்து - முஸ்லிம் சகோதரத்துவம், அம்பானி - அதானி - அகர்வால் கார்ப்பரேட் அரசியல், பாகிஸ்தான் பயங்கரவாதம், பயோ வார், இயற்கை விவசாயம், அமெரிக்க சதி என ஒரு செய்தித்தாள் சுவாரஸ்யங்கள் அத்தனையையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்கிற வெறியில் 2.45 மணி நேரம் கடுமையாக உழைத்திருக்கிறது இயக்குநர் அண்ட் டீம்.

Surya
Surya

3. ஹீரோ சூர்யாவுக்கு வழக்கமான அந்த 'ரோபோ' கேரெக்டர்தான். விறைப்பும் முறைப்பும், கடுப்புமாகப் படம் முழுக்க நடக்கிறார், ஓடுகிறார், பறக்கிறார், சீரழிந்துகொண்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேமராவைப் பார்த்து சீரியஸ் லெக்சர் கொடுக்கிறார். காஷ்மீரில் பிரச்னை நடந்தாலும் சரி, கோடியக்கரையில் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய வேண்டுமானாலும் சரி, தஞ்சாவூரில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமானாலும் சரி, பாகிஸ்தானில் உளவாளியாகச் சுற்றிவர வேண்டுமானாலும் சரி ஒற்றை ஆளாக சூர்யா ஒருவரே நாடு முழுக்க ஓடிஓடி நடித்திருக்கிறார். நம்ம சூர்யாவுக்கு என்னதான் ஆச்சு? சரியா கதை கேளுங்க சாரே!

4. மக்கு ஹீரோயின்கள்தாம் தமிழ் சினிமாவின் வழக்கம். ஆனால், இதில் 'மக்கு' ரோல் ஆர்யாவுக்கு. ஸ்டார்பக்ஸ் காபி, பீட்ஸா, கே.எஃப்.சி (இந்தியாவை அழிக்கும் அமெரிக்க குறியீடுகள்) பிரியரான ப்ளேபாய் ஆர்யா திடீர் பிரதமராகிவிடுகிறார். ஒரே ஒரு டர்பன் கட்டிவிட்டால் பிரதமர் அடையாளமே தெரியாது என நம்பி காரில் சாயிஷாவோட பிறந்தநாள் கொண்டாட கிளம்ப, தீவிரவாதிகள் குண்டுகளோடு துரத்த, அப்பாவிகள் பலர் நடுவில் சாக, வழக்கம்போல சூர்யா ஓடிவர... யப்பா... சாமி!

Mohan lal
Mohan lal

5. பிரதமர் மோடியின் மேனரிசங்களோடு மோகன்லால். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் கதாபாத்திரம். பாகிஸ்தானை அழிக்க கார்ப்பரேட் கிரிமினில் நூதன வழிசொல்லும்போது ''நீயெல்லாம் மனுஷனா... அப்பாவி மக்களைக் கொல்ல உனக்கு எப்படி மனசு வருது... இதையேதான் நாளைக்கு இந்தியாவுக்கும் நீ செய்வ'' என்று கார்ப்பரேட் சதியை இனம் காணுகிறார் பிரதமர். முன்னாள் அரசு செய்த தவறுகளை சரிசெய்ய பல வியூகங்களை மேற்கொள்கிறார். ஆனால், இந்த கார்ப்பரேட்தான் தன்னைக் கொல்லத்துடிக்கிறான் என்று தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்.

6. கார்ப்பரேட் கிரிமினலாக பொம்மன் இரானி. அம்பானி, அதானி, அணில் அகர்வால் என எல்லா ரோலையும் ஒருவருக்குள் இன்ஜெக்ட் செய்திருப்பதால் இந்த வில்லனிடம் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இந்த கார்ப்பரேட் வில்லன் என்ன செய்தாலும் அதை சூர்யா முறியடித்துவிடுவார் என முதல் சீனிலேயே தெரிந்துவிட்டதால் எந்த ட்விஸ்ட்டும் கதையில் இல்லை.

Surya, Arya
Surya, Arya

7. படத்தின் ப்ளஸ் ஒளிப்பதிவு. காஷ்மீர், லண்டன், தஞ்சாவூர் என கேமரா எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் நாமும் செல்வதுபோல ஒரு ஃபீல். ஒளிப்பதிவில் படத்தின் அத்தனை லாஜிக் ஓட்டைகளையும் மறைக்க முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர். வாழ்த்துகள் எம்.எஸ்.பிரபு!

8. சாயிஷாவைப் பார்த்து ' ''உனக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ் மூளை'' என சொல்வது, ''40 ப்ளஸ் ஆன்ட்டி - நான் வயசைச் சொல்லல'' என இந்தப் படத்திலும் கே.வி.ஆனந்தின் வழக்கமான, படத்துக்குச் சம்பந்தமில்லாத இரட்டை அர்த்த வசனங்கள். ஒருகட்டத்தில் இந்தியாவின் பிரதமரே ''வீட்ல தனியா என்னப் பண்ணுவீங்க'' என டபுள்மீனிங் ஜோக் அடிக்கும் அளவுக்குக் கொடூரமாக யோசித்திருக்கிறார்கள்.

Surya, Mohanlal
Surya, Mohanlal

9. தேசப்பற்றுப் படம் என்றால் 'ரோஜா'தான் இன்ஸ்பிரேஷன் என்பதால், 'நவபாரதம் உருவானது' என அதே பின்னணி இசையை காப்பானிலும் ஒலிக்கவிட்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் இசையில் பாடல்கள் எப்படி இருக்குமோ அந்த வழக்கத்தின்படியே இந்தப் படத்திலும் இருக்கிறது. உங்கள் ரசிகர்கள் பாவம் ஹாரிஸ்!

10. இன்னமும் மக்கள் அப்பாவிகளாகத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு சர்வதேச அரசியலை, கார்ப்பரேட் கண்ணி வெடிகளை வெளிச்சம்போட்டு காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கிருக்கிறது என கே.வி.ஆனந்த் அண்ட் சூர்யா டீம் ஒரு ரூமுக்குள் உட்கார்ந்து கதையைத் தயாரித்து இருப்பது புரிகிறது. செய்தித்தாள் செய்திகளையும் வாட்ஸ்அப் ஃபார்வேடுகளையும் மட்டுமே வைத்து படம் தயாரித்தால் என்ன நடக்கும் என்பதற்கு மற்றொரு உதாரணம் இந்தக் 'காப்பான்'!

`பயணம்' பிரச்னை முதல், `காப்பான்' கதைத் திருட்டு வழக்கு வரை... பட்டுக்கோட்டை பிரபாகர் ஷேரிங்ஸ்
அடுத்த கட்டுரைக்கு