சினிமா
Published:Updated:

கர்ணன் - சினிமா விமர்சனம்

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ்

கர்ணன் - கலைக்காகத் தன்னிடமிருக்கும் அத்தனையையும் அள்ளிக் கொட்டித் திரையில் மிளிர்கிறார் தனுஷ்.

சினிமா என்னும் காட்சிமொழி சில சமயங்களில் மகிழ்விக்கும். சில சமயங்களில் ஆற்றுப்படுத்தும். சில சமயம் நமக்குள் கேள்விகளை எழுப்பும். வெகுசில சமயங்களில் நமக்கு அரசியல் பாடமெடுக்கும். இவை அனைத்தையும் ஒருங்கே செய்தால் அது ‘கர்ணன்.’

பொடியன்குளம் என்கிற வறண்ட பூமியின் குடிமக்களுக்குக் காலங்காலமாக மறுக்கப்படும் உரிமைகளுள் ஒன்று பேருந்து வசதி. பக்கத்து நகரம் செல்ல அவர்கள் ஆதிக்கச்சாதியினர் வாழும் மேலூருக்குச் சென்றுதான் பேருந்து ஏறவேண்டும். அங்கே போனால் கேலியும் வன்சொற்களும் வன்முறையுமே பரிசாகக் கிடைக்கின்றன. இதனால் கல்லூரி செல்லும் கனவு, அவசரகால சிகிச்சை என பொடியன்குளத்தின் சகலமும் வேகமாய்க் கடந்தோடும் பேருந்துச் சக்கரங்களுக்கு இரையாக, ‘குனிந்தது போதும்’ என நியாயம் கேட்டு கம்பீரமாய் தலை நிமிர்த்துகிறார் ஊரின் தலைமகனான கர்ணன். அவரோடு வேறுபட்டு, பின் கூட நின்று, இறுதியாய் தோளோடு தோள் உரசி அடக்குமுறைக்கு எதிராகப் போர்புரிகிறது மொத்தப் பொடியன்குளமும். கர்ணன் தலைமை தாங்க, துரியோதனன் அறிவுரை வழங்க, ஏமராஜா உடன் நிற்க, போரின் முடிவு இந்த முறை மாற்றியெழுதப்படுமா என்பதே மீதிக்கதை.

கர்ணன் - சினிமா விமர்சனம்

கர்ணன் - கலைக்காகத் தன்னிடமிருக்கும் அத்தனையையும் அள்ளிக் கொட்டித் திரையில் மிளிர்கிறார் தனுஷ். தலைமுடி தொடங்கி புருவம் தொட்டு கால்விரல் நரம்பு வரை அத்தனையையும் கதாபாத்திரத்திற்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைக்கும் அசாத்திய வலிமை தனுஷுக்கு மட்டுமே சாத்தியம். அடுத்தடுத்து அவரின் அதீத நடிப்புப் பசிக்குத் தீனிபோடும் கதாபாத்திரங்கள் அமையும்வரை தனுஷ் மேலே மேலே பறந்து இன்னும் பல உயரங்கள் தொடுவார்.

ஏமராஜாவாக லால். கிட்டத்தட்ட கர்ணனுக்கு இணையாகப் படம் நெடுகிலும் வருகிறார். நேர்த்தியான நடிப்பை வழங்கிச் செல்கிறார். அக்காவாக வரும் லஷ்மிப்ரியா சந்திரமெளலி படபடவெனப் பொரிந்து விழுவது, இயலாமையில் ஏங்கி உடைவது என ஏகப்பட்ட பரிமாணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அதிகாரத்தின் ஒற்றைக் குறியீடாகக் கண்ணபிரான். பார்ப்பவர்களுக்கு வெறுப்பை, பாதிக்கப்பட்டவர்களிடம் வலியை உண்டாக்கும் அந்த வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் நட்டி (எ)நடராஜன் சுப்ரமணியம். சின்னச் சின்ன ரசனைக் குறும்புகளால் கவர்கிறார் நாயகி ரஜிஷா விஜயன். ஆனால், அவருக்குப் போதுமான காட்சியமைப்புகள்தான் இல்லை. தன் அடுத்த தலைமுறையாவது நிமிர்ந்துவிட வேண்டும் என முட்டிமோதும் ஜி.எம்.குமாரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். யோகிபாபு, ‘பூ’ ராமு, சண்முகராஜன், குதிரைக்கார பையன் காளீஸ்வரன் தொடங்கி முந்தியில் சில்லறை முடிந்துவைத்திருக்கும் கிழவி வரை கிராமத்து மாந்தர்கள் அத்தனை பேரும் மனம் நிறைக்கிறார்கள்.

அம்மண்ணின் வெக்கையை, அம்மனிதர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை, போராட்டம் உண்டாக்கும் தகிப்பை, காட்டுப்பேச்சியின் கொண்டாட்டத்தை நமக்குள் ஊறச்செய்வதில் தேனி ஈஸ்வரின் கேமரா தீயாய் உழைக்கிறது. த.ராமலிங்கத்தின் கலை இயக்கம் நம்மை கதையை விட்டு விலகாமல் ஒன்ற வைக்கிறது. திலீப் சுப்பராயனின் வெகு இயல்பான சண்டை வடிவமைப்பு படத்திற்குக் கனம் கூட்டுகிறது.

படத்திற்குப் படம் தமிழ் சினிமாவில் தன் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்துக்கொண்டே செல்கிறார் சந்தோஷ் நாராயணன். மஞ்சனத்தி புராணம் பேசும் அரசியலில் தெறிக்கிறது யுகபாரதியின் எழுத்து வன்மை.

கர்ணன் - சினிமா விமர்சனம்

போராட்டத்தை வன்முறையாகவே பலகாலமாகக் காட்டிவரும் தமிழ் சினிமாவில், ஆயுதம் எடுக்கும் அந்தப் புள்ளியை நோக்கி ஒரு சமூகத்தை எது நகர்த்துகிறது என்பது குறித்து கர்ணன் பேசியிருப்பது மிகமுக்கிய அரசியல் முன்னெடுப்பு. 90களில் தென்மாவட்டங்களில் பற்றியெரிந்த சாதிய அடக்குமுறைகளை சமரசமின்றிக் காட்சிப்படுத்திய துணிச்சலுக்குப் பாராட்டுகள் மாரி.

அநேகமாய் நாட்டார் வழிபாட்டை இவ்வளவு விளக்கமாய் வெள்ளித்திரையில் பேசியிருப்பது இதுவே முதல்முறை. பேருந்து சமூக நகர்தலுக்கான குறியீடு. தளையிலிருந்து விடுபடும் கழுதை அடிமைத்தனத்தின் குறியீடு. யானை, உழைக்கும் எல்லாருக்கும் உயரம் பொது என்பதற்கான குறியீடு. இப்படிக் குறியீடுகள் வழியே கதை சொல்வது தமிழ்சினிமாவில் அரிதாகவே நிகழும். அதேபோல் எல்லாக் காட்சிகளிலும் யானை, குதிரை, பன்றி என ஏதோ ஓர் உயிரினம் ‘உலகம் அனைவருக்குமானது; ஏற்றத்தாழ்வுகள் மனிதர்களாலானது’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

கர்ணன் - சினிமா விமர்சனம்

சம்பவங்கள் நிகழும் காலம், ஏமனின் தெளிவில்லாத அரசியல் நிலைப்பாடு, ஊரின் போராட்டம் ஒற்றையாளை நம்பியே என்கிற கதாநாயக பிம்பம், வலிந்து சொல்லப்படும் வணிக சினிமா இறுதிக்காட்சி எனப் படத்தில் குறைகள் இல்லாமலில்லை. ஆனால் படத்தின் பேசுபொருள் இவையனைத்தையும் தாண்டி முக்கியமாகத் தெரிகிறது.

கர்ணன் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கும் வள்ளல் அல்லன், மறுக்கப்பட்டதைப் பெறத் துணியும் மாவீரன்!