திருமணத்திற்கு முன்பே சூரிய பகவானின் அருளால், குந்தி தேவியின் வயிற்றில் கருவாகி விட்ட கர்ணனை, ஊரும் உலகுமறிய தன் மகனாக ஏற்றுக் கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் குந்திதேவி... அதற்காக அந்தச் சிசுவை உதாசீனப்படுத்தவும் மனம் இடம் தராத நிலையில், பத்திரமாக ஒரு மிதவைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட, தேரோட்டி எடுத்து வளர்க்க, கருணை மிக்க வள்ளலாகவும், மிகக் கடின வீரனாகவும் வளர்ந்தாலும், இளவரசனாக இல்லாத காரணத்தால் அவனுக்குப் பல நியாயமான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. துரியோதனன் அடைக்கலம் கொடுத்து அரச வாழ்வையும் தர முன் வர நன்றிக் கடனாக அவனுக்காகப் போரிடவும் தயாராகி, இன்னுயிரைத் தரவும் முற்படுகிறான் கர்ணன்.
சூரிய பகவானின் மகனாகிய அவனை எவராலும் நேருக்கு நேர் போர் செய்து வெல்ல முடியாது என்பதையறிந்த மாய கிருஷ்ணன் பல திருவிளையாடல்களையும் விளையாடி அவனை அழிக்க முற்படுகிறார், பலப்பல தில்லுமுல்லுகள், பதற வைக்கும் குறுக்கு வழிகள்... எல்லாவற்றையும் தாண்டி, போர்க்களத்தில் பள்ளத்தில் அமிழ்ந்த தேர்ச்சக்கரத்தைத் தனியனாக மேலெழுப்ப முயற்சிக்கையில் மார்பில் தைத்த அம்புகளுடன் உயிருக்குப் போராடும் அவனிடம், அவன் செய்த தர்மத்தின் பலனையும் அந்தணன் வடிவில் சென்று யாசகம் கேட்க, சேற்றில் கிடக்கும் அவன் தன் மார்புக் குருதி மூலம் அதனையும் தர, இறுதியாக அவன் கதையை முடிக்கிறார்.

இப்பொழுது பாடலுக்குப் போவோமே...
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா - கர்ணா வருவதை எதிர் கொள்ளடா…’
- நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு எவ்வளவுதான் அநியாயங்கள் செய்தாலும் அவர்களை அவ்வளவு எளிதில் அடக்கிட முடியாது என்பது உலக நியதி. அத்தனையையும் எதிர்கொண்டு அவர்கள் முன்னேறுவார்கள்.
'தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர்ப்பழி ஏற்றாயடா- நானும் உன்பழி கொண்டேனடா…’
- உனக்கு ராஜ மாதாவும் உண்டு, முத்தான ஐந்து தம்பிமார்களும் உண்டு. ஆனாலும், எல்லாம் திரை மறைவில், துரியோதனன் என்ற நீதி தவறியவனின் நண்பனாகப் போய் உன் வாழ்வை முடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டாய். உன் எல்லா அழிவுக்கும் காரணம் நான்தான் கர்ணா… இதை எல்லாம் எதற்காகச் செய்தேன் தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கண்ணனாகிய நான் செய்த இந்தப் பணிகள் பாவக் கறை படிந்தவைதாம். பாவம் செய்தவன் இந்தக் கண்ணன்தான். அதற்காக என்னை, இந்தப் பாவியை, மன்னித்து விடு கர்ணா.

வஞ்சகமாக உன்னைக் கொல்வதன்றி எனக்கு வேறு வழி தெரியவில்லை கர்ணா.
‘மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா - கர்ணா மன்னித்து அருள்வாயடா…’
- தருமமும் நியாயமுமே தன் இரு கண்களென வாழ்ந்து வரும் உன் இளவல், ஐவரில் மூத்தவன் தருமனை அரியணையில் ஏற்றுவதற்காக, கண்ணனாகிய நான் செய்த இந்தப் பணிகள் பாவக் கறை படிந்தவைதாம். பாவம் செய்தவன் இந்தக் கண்ணன்தான். அதற்காக என்னை, இந்தப் பாவியை, மன்னித்து விடு கர்ணா.
‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா வஞ்சகன் கண்ணனடா…’
- என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உனக்களிக்கப்பட்ட அரச வாழ்வுக்காகவும், இன்னும் பல உரிமைகளுக்காகவும் நன்றிக் கடன் தீர்க்க நீ, சேரக் கூடாத இடந்தனிலே சேர்ந்து விட்டாய். உன்னை அழித்தால்தான் இந்தப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர என்னால் இயலும். போர் முடிந்தால்தான் தருமன் பட்டம் சூட்ட முடியும். வஞ்சகமாக உன்னைக் கொல்வதன்றி எனக்கு வேறு வழி தெரியவில்லை கர்ணா.
- உனது கவச குண்டலங்களை உன்னிடமிருந்து அறுத்து வாங்கினேன்.
- உன் குருவின் சாபத்திற்கு ஆளாக்கினேன்.
- ஒரு முறைக்கு மேல் நாக பாணத்தை உபயோகிக்கக் கூடாதென்ற உறுதி மொழியை, உன் தாய் மூலமே வாங்கச் செய்தேன்.
- தேரை அமிழ்த்தி அப் பாணத்திலிருந்து விஜயனைக் காப்பாற்றினேன்.
- தேரோட்டி சல்லியனை உன்னிடம் சண்டை போட்டுப் போகச் செய்தேன்.
- பள்ளத்தில் உன் தேரை விழச்செய்து, உன் தர்மத்தையெல்லாம் தாரை வார்த்து வாங்கினேன்.
இப்படி நான் உனக்குச் செய்த வஞ்சகங்கள் கொஞ்சமல்ல, எல்லாம் செய்தது எதற்காக என்றால் நியாயத்தை அரியணை ஏற்றத்தான், என்னை மன்னித்து விடு கர்ணா.

பாடல் இயற்றிய கண்ணதாசன்; சக்கர வாக ராகத்தில் கணீர் குரலில் பாடிய சீர்காழி கோவிந்த ராஜன், இசையமைத்த விஸ்வநாதன்- ராமமூர்த்தி; கர்ணனாகவே வாழ்ந்து காட்டிய சிவாஜி; கண்ணனாகவே மாறி விட்ட என்.டி.ஆர்... இவர்களையெல்லாம் நம் முன்னே கொண்டு வந்த இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று அத்தனை பேருமல்லவா இறவாப் புகழுடன் இன்றைக்கும் நம் கண் முன்னே காட்சியளிக்கிறார்கள்!
இல்லையென்று வருவோருக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் இயன்றதைச் செய்வோர், காலத்தின் கட்டாயத்தால் தவறான இடத்தில் சேர்ந்தாலும், இறுதியில் அனைவரின் உள்ளத்திலும் உயர்வான இடம் பிடித்து, இந்த உலகம் உள்ளளவும் உலா வருவார்கள் என்பதற்குக் கர்ணன் பாத்திரமே தக்க சான்று.
அந்தக் கர்ணன் மட்டுமா நம் மனத்தில் நிற்கிறார்? அவர் புகழ் பாடிய அனைவருமல்லவா நம் முன்னே வலம் வருகிறார்கள், பாடல் இயற்றிய கண்ணதாசன்; சக்கர வாக ராகத்தில் கணீர் குரலில் பாடிய சீர்காழி கோவிந்த ராஜன், இசையமைத்த விஸ்வநாதன்- ராமமூர்த்தி; கர்ணனாகவே வாழ்ந்து காட்டிய சிவாஜி; கண்ணனாகவே மாறி விட்ட என்.டி.ஆர்... இவர்களையெல்லாம் நம் முன்னே கொண்டு வந்த இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று அத்தனை பேருமல்லவா இறவாப் புகழுடன் இன்றைக்கும் நம் கண் முன்னே காட்சியளிக்கிறார்கள்!
கருணையும் கொடையும் வீரமும் நன்றிக்கடனுமே கர்ணன்! நாமும் கர்ணனாக வாழ முயற்சிப்போம்!
- ரெ, ஆத்மநாதன் (காட்டிகன், சுவிட்சர்லாந்து)