Published:Updated:

கார்த்தியின் பாராட்டு, பிந்துவின் விழிப்புணர்வு, யுவனின் அடுத்த படம்! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

லாக்டெளனால் பல திரைப்படங்கள் நேரடி டிஜிட்டல் ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் பாலிவுட், கோலிவுட் என இந்திய அளவிலான சினிமாக்கள், இந்த ஆண்டு வெளிவரவிருந்த பல முக்கியப் படங்கள் OTT-யில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

அதில் முக்கியமாக தமிழில் ஜோதிகாவின் `பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் `பெண்குயின்’, பாலிவுட்டில் அமிதாப், ஆயுஷ்மான் குர்ரானாவின் `குலோபா சீதோபோ’, வித்யா பாலனின் `சகுந்தலா தேவி’, மல்லுவுட்டில் `சஃபியும் சுஜாதாவும்’, கன்னடாவில் ‘லா’, ‘ஃப்ரென்ச் பிரியாணி’ உள்ளிட்ட படங்கள் OTT-யில் வெளிவரவிருக்கின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ரெட் ஸோன் கீழ் கொண்டு வரப்பட்டது. இதில் படிப்படியாக பல மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து, ஆரஞ்ச் மண்டலங்களாக மாறியுள்ளது. இதில் ஆரம்பத்தில் பாதிப்பு அதிகமாக இருந்த ஈரோடு மாவட்டம், கடந்த 30 நாள்களுக்கும் மேலாக கொரோனா தொற்று யாருக்கும் இல்லாததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் `தமிழ்நாட்டில் ஈரோடு முதல் மாவட்டமாக சிவப்பிலிருந்து பச்சை மண்டலத்துக்கு மாறியுள்ளது. கடந்த 32 நாள்களாக எந்தவிதமான தொற்றும் இல்லை. இதற்கு ஒத்துழைப்பு அளித்த மக்கள், மருத்துவர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் சல்யூட்’ என ட்வீட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழில் `தீரன் அதிகாரம்’, `தேவ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். 90’ஸ் கிட்டான இவரை சமீபத்தில் அவரது நண்பர், ரகுலுக்குப் பிடித்தமான 90’ஸ் சினிமாக்களை ஷேர் செய்யும்படி ட்விட்டரில் டேக் செய்ய, நாஸ்டால்ஜியாவில் தற்போது மூழ்கியுள்ளார் ரகுல்.

ஷாருக் கஜோல் நடித்த இரண்டு படங்களைப் பகிர்ந்த அவர், `வாவ்! நிறைய படங்கள் இருக்கு. என்னை யாராவது திரும்பவும் அந்த நாள்களுக்குக் கூட்டிட்டுப் போங்க’ என தனது நாஸ்டால்ஜியா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாது, சினிமாத்துறையில் தனது தோழிகளான டாப்ஸி, ஹூமா குரேஷி ஆகியோரையும் தங்களுக்குப் பிடித்தமானவற்றை பகிர டேக் செய்துள்ளார் ரகுல்.

இந்த லாக்டெளனில் விர்ச்சுவல் போட்டோஷூட், பிரபலங்களிடையே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஆண்ட்ரியா, ஷ்ரேயா, ஹரிஷ்கல்யாண் எனப் பலரும் இதை முயற்சிக்க, இந்த லிஸ்டில் பிந்து மாதவியும் தற்போது இணைந்திருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக்கால் 100 மில்லியனுக்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாகவும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்த கேப்ஷனோடு, `இனி பிளாஸ்டிக் தவிர்ப்போம்’ என்ற கான்செப்டில் இந்த விர்ச்சுவல் புகைப்படங்களை எடுத்துள்ளார் பிந்து. போட்டோகிராஃபரின் வழிக்காட்டுதலோடு தன் வீட்டில் வேலை செய்பவரின் உதவியோடு இதைச் சாத்தியப்படுத்தியுள்ளார்.

`ஒவ்வொரு பூக்களுமே’, `கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைத் தந்தவர் பாடலாசிரியர் பா. விஜய். இளைஞன்’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் `ஸ்ட்ராபெர்ரி’ உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்தார்.

மேதாவி
மேதாவி

தற்போது இவர் அடுத்து `மேதாவி’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதில் `ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பு இன்று சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு