Published:Updated:

```சொகுசா இருக்கப் பழகாதே' அண்ணன் நா.முத்துக்குமார் சொன்ன வார்த்தை''-கார்த்திக் நேத்தா #NaMuthukumar

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமாரின் நினைவுகளைப் பகிர்கிறார் கார்த்திக் நேத்தா

``ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது. எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்...." - நா.முத்துக்குமார்
- நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகளை எழுதி, தமிழ்த் திரை உலகில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தவர் நா.முத்துக்குமார். மிகக் குறுகிய காலத்தில் ஏராளமான சிறந்த பாடல்களை எழுதியவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர். யுவன் ஷங்கர் ராஜா - நா.முத்துக்குமார் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருந்தது. திரையிசையில் இன்னும் பல உச்சங்களைத் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவால் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இறந்தார். இன்று அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்.

நா.முத்துக்குமாரிடம் ஐந்தாண்டுகளுக்கு மேல், உதவியாளராகப் பணியாற்றியவரும், தற்போது முன்னணி பாடலாசிரியருமான கார்த்திக் நேத்தாவிடம் நா.முத்துக்குமார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டேன்.

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா

``முத்துக்குமார் அண்ணன்தான் எனக்கு குரு. எப்பவுமே என் நலன்மீது அக்கறையோடு இருப்பார். முதலில் ஏதாவது ஒரு புத்தகத்தைக் கொடுத்து படி என்றுதான் சொல்வார். பிறகுதான் வேலையெல்லாம். அந்தளவுக்குப் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் எழுதி ஹிட்டான பாடல் டியூனில் என்னை எழுதச் சொல்வார். தத்தகரம் எப்படி எழுதுவது என்பது ஆரம்பித்து அனைத்தையும் கற்றுக்கொடுப்பார். எழுதிக்கொடுப்பட்ட வரிகளில் எது டியூனோடு ஒட்டவில்லை என்பதைத் திருத்திக் கொடுப்பார். ரொம்ப நல்ல பயிற்சி.

முத்துக்குமார் அண்ணன் என்னிடம் அடிக்கடி சொல்வது, `கார்த்தி, சொகுசா இருக்கப் பழகாதே' என்பதுதான்.
கார்த்திக் நேத்தா
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

ஒரு பாடலுக்கான டியூனைக் கொடுத்ததும், அதை நான்கைந்து முறை நன்கு கேட்கச் சொல்வார். அடுத்து, இயக்குநர் சொல்லும் பாடலுக்கான சூழலை மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கதைச் சூழலை பாடலின் பல்லவியிலேயே சொல்லிவிட வேண்டும். சரணம் வரை இழுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பார். சரணத்தில் நம் அனுபவத்தை, நம் ரசனையை வெளிப்படுத்தும் வரிகளை எழுதலாம்; அதேநேரம் நமக்குத் தெரியும் என்பதற்காகச் சங்க இலக்கிய வார்த்தைகளையோ, எளிதில் புரியாத வார்த்தைகளையோ பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்துவார். அதை அவரும் பின்பற்றுவார்.

பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடுவானம் போலவே கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

அவர் தொடர்ந்து தத்துவார்த்த நூல்களைப் படிப்பார். அவைதான் அவர் எழுதிய பாடல்களில் வெளிப்பட்டது. என்னையும் அம்மாதிரியான நூல்களைப் படிக்கச் சொல்வார். முத்துக்குமார் அண்ணன் என்னிடம் அடிக்கடிச் சொல்வது, `கார்த்தி சொகுசா இருக்கப் பழகாதே' என்பதுதான். ஒரு பாட்டு எழுதிவிட்டோம். அடுத்து வரும் என்று இருந்துவிடாமல், புதிய இயக்குநர்களைப் போய் நேரில் பார்; அவர்களின் படங்களைப் பற்றிய உன் பார்வையைப் பகிர்ந்துகொள்' என்று சொல்வார். என்னைப் பற்றி பலரிடம் நல்ல விதமாகச் சொல்லியிருக்கிறார். சில இயக்குநர்களிடம் பாடல் எழுத என்னைப் பரிந்துரைகூட செய்திருக்கிறார். நான்தான் அவர் சொன்னதைக் கேட்காமல், பலரைச் சென்று பார்க்காமல் இருந்துவிட்டேன்.

அறிவுரையாகச் சொல்லாமல், தம்பிக்குச் சொல்லும் விதமாக உரிமையாகச் சொல்வார். `நண்பர்களோடு ஊர் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, உனக்கான நேரத்தை சரியாகப் பிரித்துக்கொள்; அதேநேரம் நிறைய டிராவல் பண்ணவும் செய்' என்பார். அவர் சொன்னதையெல்லாம் இப்போதுதான் ஃபாலோ பண்ணிவருகிறேன். அவரின் பாடல் வரியில்லாமல் ஒருநாளும் கழியாது" என்கிறார் கார்த்திக் நேத்தா.

அடுத்த கட்டுரைக்கு