Published:Updated:

விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?

விக்ரம், துருவ்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம், துருவ்

- ரகசியம் சொல்லும் கார்த்திக் சுப்புராஜ்

விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?

- ரகசியம் சொல்லும் கார்த்திக் சுப்புராஜ்

Published:Updated:
விக்ரம், துருவ்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம், துருவ்

“வழக்கமாக நாம நல்லா விரும்பி ரசிச்சு ஒரு வேலை செய்வோம். அதிலும் விக்ரம் மாதிரியான ஒரு நல்ல நடிகர் கையில் கிடைச்சபோது, அவரோட பயணப்பட்டு, நான் சொல்லும் விஷயங்களை அவர் எப்படி பிரசென்ட் பண்றாருன்னு பார்க்க ஆரம்பிச்சேன். அப்படிப் பார்த்தால், நான் கடந்து வந்த ஒவ்வொரு படமும் அனுபவம். காலேஜ் படிக்கும்போது ‘சாமி’ பார்த்துட்டு அந்த மாஸ் நடிப்பில் அரண்டுபோய் நின்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கு. நான் சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து விக்ரமோடு ஒர்க் பண்ணணும்னு ஆசை இருந்துகிட்டே இருக்கு. ‘இறைவி' பண்ணின சமயம் அவரைச் சந்திச்சு ஒரு கதை சொல்லி, அது மேற்கொண்டு தொடராமல் போச்சு. இந்த நேரம் தயாரிப்பாளர் லலித் குமார் சார் கூப்பிட்டு `விக்ரம், துருவ் காம்பினேஷன் பண்ணலாமா’ன்னு கேட்டார். அப்படித் தொடங்குனதுதான் ‘மகான்.’ இத்தனை வருடக் காத்திருப்புக்கு ‘மகான்’ நிச்சயம் நியாயம் செய்யும். வாழ்க்கையின் சில சிறப்பான தருணங்களாக இந்த 'மகானி’ல் வேலை பார்த்ததைச் சொல்வேன்” என மில்லி மீட்டரில் புன்னகைத்துப் பேசுகிறார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?
விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?

“விக்ரம், துருவ் சேர்ந்து களமாடுகிற மகானுக்கு எதிர்பார்ப்பு எகிறுதே...”

“இவங்க உலகத்துக்குள்ள உங்களைக் கூட்டிட்டுப் போறேன்னு சந்தோசமா இருக்கு. விக்ரம் அப்பாவாகவும் துருவ் மகனாகவுமே நடிச்சிருக்காங்க. தலைப்பைக் கேட்டவுடனே இருவரில் யார் மகான் என்ற கேள்விதான் உங்களுக்கு முதலில் தோன்றும். அதற்கான பதில்தான் படத்தின் வலிமையான அடித்தளமே.இதை ஆக்‌ஷன் படம்னு ஒரு வரியில் சொல்லிட முடியாது. உள்ளே நிறைய உணர்வுபூர்வமான விஷயங்களையும் வெச்சிருக்கோம். டெக்னிகலாகவும் ஸ்கிரிப்ட் ஸ்டைல்லயும் அடுத்த கட்டப் படம் பண்ணணும்னு நினைச்சேன். ‘மகான்’ அப்படித்தான் வந்திருக்கு. நீங்க சொன்ன மாதிரி விக்ரம் - துருவ்னு முதல் கட்டமே பரபரப்பு தந்தாலும், எங்களுக்கும் ஒரு சின்ன டென்ஷன் தொடங்குகிற வரை இருந்தது. முடிந்த அளவு வித்தியாசப்படுத்தித் தருவதில் பாடுபட்டிருக்கோம்.”

“டீசர் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கு...”

“கதையை எழுதி முடிச்சதும், விக்ரம் கிட்ட சொன்னேன். அவருக்கான சவால் இருக்கணும்னு நினைச்சபோது அதை அவரும் உணர்ந்திருக்கிறார். விக்ரம், துருவ் ரெண்டு பேருமே தங்கள் உழைப்பைக் கொடுத்திருக்காங்க. கேரக்டர்களின் வலுவான அடிப்படையில் நிறைய காட்சிகள் உள்ளன.”

விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?
விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?

“இரண்டு பேரையும் சேர்த்து எப்படிப் பயன்படுத்தினீங்க?”

“ஒருத்தர் பேசுவதற்கு பதில் பேசவும், உணர்வுகளுக்கும் வார்த்தைகளுக்கும் சரியான இடத்தை இன்னொருத்தர் கொடுக்கணும். அதை இரண்டு பேரும் அருமையா செய்தாங்க. இது விக்ரமுக்கு அனுபவத்தால் வந்தது. ஆனால் துருவ்வுக்கும் வந்தது ஆச்சர்யம்தான். அப்பா மாதிரி தேர்ந்த நடிகர் இருக்கும்போது அவருக்குச் சரிக்குச் சமமாக நிற்கவேண்டிய இடம் துருவ்வுக்குக் கிடைக்க, அந்தச் சவாலை அவர் துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும்போது நிறைய ரிகர்சல் தேவைப்படுமோன்னுகூட நினைச்சிருந்தோம். எங்களுக்கு அந்த விஷயத்தில் நல்ல ஏமாற்றம். ஒரு காட்சியில் நடிக்கும்போது ஒருத்தர் மட்டும் டாமினேட் பண்ணணும்னு நினைச்சிட்டால் அவர் மட்டுமே ரீச் ஆவாங்க. இன்னொருத்தர்கிட்டே பார்வை போகாது. ஒருத்தரே படபடன்னு வசனம் பேசிட்டால் அது சீன் ஆகாது. இன்னொருத்தர் சொல்றதைக் கேட்டுட்டு, அதைப் பின்பற்றிப் பேசுவதுதான் காட்சிக்கு அழகு. அந்த விதத்தில் இரண்டு பேருமே அவ்வளவு நேர்த்தியா விட்டுக்கொடுத்து நடிச்சாங்க.”

விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?
விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?

“இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக்கொள்வார்களா?”

“அது அடிக்கடி நடக்கும். நாங்க ஒரு இடத்தை மனதில் போட்டு வச்சிருப்போம். சரியா அதையே சொல்லிக்குவாங்க. இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங் கேரக்டர்ஸ். தனித்தனியே அதற்கு அடையாளம் இருக்கு. அவங்களுக்குள்ள முட்டல், மோதல் அன்புன்னு படத்தில் நடந்துகிட்டே இருக்கும். ‘இந்த இடத்தில் நீங்க செய்தது சூப்பர் டாடி’ன்னு சொல்ல, ‘நீ என்னப்பா அந்த கேப்ல நல்ல டயலாக் சொல்லிட்டியேப்பா... அது கிளாஸ்'னு விக்ரம் சொல்வார். இவ்வளவு இளம் வயதிலேயே துருவ்வுக்கு, துருவ்வாகவே நடிக்கணும்ங்கிற எண்ணம் கிடையாது.

இந்தக் கதையில் ஆர்வம் ஏற்பட்டுத்தான் இரண்டு பேருமே உள்ளே வந்தாங்க. இதனால் கவனம் கூடியிருக்கலாம். இந்த எதிர்பார்ப்பை நாங்களும் புரிஞ்சுவெச்சிருக்கோம். அது படத்திலும் தெளிவாகத் தெரியும். நாம ‘இப்படி இருந்தால் நல்லா இருக்கும்’னு சொல்லும்போது அதை விக்ரம் ரசித்து உள்வாங்கிப் பண்றார். இயல்பாகவே அவர் ரொம்ப நல்லா பழகக்கூடிய கேரக்டர். என்னோட கடைசி அசிஸ்டன்ட் வரைக்கும் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். கொரோனா, அதனால் இருக்கிற கட்டுப்பாடுகள், நேரக் கட்டுப்பாடு கொடுக்கிற அழுத்தங்கள் இருந்தும் ஷூட்டிங் ஸ்பாட் அவ்ளோ இயல்பா இருக்கும். அதற்குக் காரணம் விக்ரம் என்ற இந்தச் சிறப்பான மனிதர்தான்.”

விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?
விக்ரம், துருவ் இருவரில் யார் ‘மகான்’?

“சிம்ரன், வாணி போஜன்னு இரண்டு பேர்... என்ன விதமான கதாபாத்திரங்கள்?”

“சிம்ரன் இதற்கு முன்னாடி ‘துருவ நட்சத்திரத்’தில் விக்ரமுடன் நடிச்சிருந்தாலும் இதில் அவங்களுக்குப் பிரமாதமான ரோல். வாணி நல்ல கதாபாத்திரத்தில் வருகிறார். சிம்ரன் கிட்டே எதையும் புதுசா விளக்கணும்னு அவசியமில்லை. நாம் சொல்லும் ஒரு விஷயத்தை உள்வாங்கி ஒண்ணு பண்ணுவாங்க. அதுல எந்த மாற்றமும் சொல்லத் தேவையிருக்காது. அதே மாதிரி பாபி சிம்ஹா, முத்துக்குமார், சனத், தீபக் பரமேஷ்வர்னு பலர் இருக்காங்க. பெரிய ரோலுக்கு பாபியைத்தான் மனசில் வச்சிருந்தேன். அவரை எல்லோருக்கும் கொஞ்சம் சர்ப்ரைஸ் வச்சுதான் கொண்டுவந்தோம். விக்ரம் ரொம்ப ஹேப்பி. படத்தில் பாபிக்கான வெளி பெரியது. அவரும் செமையா பண்ணிருக்கார்.”

கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்

“முதலில் மியூசிக் அனிருத்னு வந்ததே... இப்ப சந்தோஷ் நாராயணனை இறக்கிட்டீங்க?”

“நீங்கள் எதிர்பார்த்த மாதிரி ஒரு விஷயமும் இல்லை. இப்படித்தான் உலகம் நம்மளை தப்பாவே எடை போடுது. அடுத்தடுத்த சில படங்களில் பிஸியாக, அனிருத்துக்கு நேர நெருக்கடி. எனக்குத்தான் சந்தோஷ் கிட்ட கேட்க ஒரே தயக்கம். பாயின்டுக்கு வராமல் பேசிட்டு இருக்கும்போதே புரிஞ்சுக்கிட்டு, ‘என்ன தயக்கம்... நீங்க கேட்டா செய்திடப் போறேன்’னு இறங்கி செய்துகொடுத்தார். இரண்டு பேர் கிட்டேயும் எனக்கு எந்தப் பிரச்னையும், மனவருத்தமும் இல்லை. பாடல்களும் இசையும் நல்லா வந்திருக்கு. ரொம்ப நாளாக என் மனசுக்குள் ஊறிக்கிடந்த ஒரு கதை. விக்ரம், துருவ் மற்றும் எனக்கும் ‘மகான்’ ஒரு இடத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை. தன்னை முழுசா ஒப்படைக்கிற மனசுக்கு ஒரு நல்ல படத்தைத் தரணும்னு வேண்டி விரும்பி வேலை செய்திருக்கேன். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவோட கேமரா வியூ ஃபைண்டரில் பார்த்தால் காட்சிகள் ‘அடடா’ன்னு இருக்கு. நிச்சயம் ஸ்கிரீன்ல பெரிய, பிரமாண்டமான ஃபீல் உங்களுக்குக் கிடைக்கும். அழகா, திருத்தமா கதை சொல்லியிருக்கேன். சந்தோஷமாப் பார்க்கலாம்.”

“இத்தனை நாள் அனுபவத்தில் கார்த்திக் சுப்புராஜ் தெரிஞ்சுகிட்டது என்ன?”

“ஐ.டி வேலை பார்த்துட்டு இருக்கும்போது குறும்படங்கள்தான் பண்ணிக்கிட்டிருந்தேன். மதுரைப் பக்கம் தியேட்டரில் ரஜினி, விக்ரம் படங்கள் பார்த்துத் திரிஞ்சவன் இப்ப அவங்களையே டைரக்ட் பண்ணிட்டேன். உங்க கேள்விக்கு உண்மையில் பதில் சொல்லத் தெரியலை. சினிமாவில் இத்தனை பேரை ஒருசேர ஒரே இடத்தில் வச்சு வேலை வாங்குவது பெரிய கலையாக நினைப்பேன். ஆனால் எதைப் பண்ணினாலும் பிடிச்சுதான் அதைப் பண்ணியிருக்கேன். எப்பவும் சாதாரண மனுஷனா, சராசரியில் ஒருத்தனாதான் நினைச்சுப்பேன். நடந்துப்பேன்.”