Published:Updated:

விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி - தீபாவளியை நோக்கி முன்னணி நடிகர்கள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு `பிகில்' படத்தோடு வெளியாக இருக்கிறது, கார்த்தியின் `கைதி'.

பிகில் - கைதி
பிகில் - கைதி

``படங்கள் எடுப்பதைக்காட்டிலும் அதை வெளியிடுவதுதான் சிரமமாக இருக்கிறது" - இது திரைத்துறையில் உள்ள பெரும்பாலான நபர்களிடமிருந்து வந்த வார்த்தைகள். நல்ல படமாக இருந்தாலும் தவறான நேரத்தில் வெளியிடும்போது அதற்கான வரவேற்பு கிடைப்பதில்லை. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். வெளியிட, தேதி கிடைத்தாலும் ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக படங்களுக்கு பிரச்னை வந்துவிடுகிறது.

பிகில்
பிகில்

தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்குதான் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும். அதனுடன் அதிகபட்சம் ஒரு படம் வெளியாகும். இந்த வருடம் தீபாவளிக்கு என்று சொல்லிதான் `பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துடன் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த `பட்டாஸ்' வெளியாகும் என எதிர்பார்த்தனர். அக்டோபர் 4-ம் தேதி தனுஷின் `அசுரன்' வெளியாவதால் உடனே `பட்டாஸ்' படம் வர வாய்ப்பில்லை.

ஞாயிற்றுக்கிழமை (அக்.27) தீபாவளி வருவதால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே (அக்.25) விஜய்யின் `பிகில்' திரைப்படம் வரலாம் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த `கைதி' படமும் தீபாவளிப் பண்டிகையை நோக்கி வெளியாக இருக்கிறது. ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசருக்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ்.

கைதி
கைதி

அதனால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற செய்தியை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவ்விரண்டு படங்கள் தவிர, விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிப்பில் உருவான `சங்கத்தமிழன்', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள `ஒத்த செருப்பு' ஆகிய படங்களும் தீபாவளி ரேஸில் இருக்கிறது.