ஆதிக்க மனப்பான்மை, வஞ்சம், பேராசை, சுயநலம் ஆகியவற்றின் மூலம் அதிகாரமும் செல்வாக்கும் பெற்ற, பெற முயலும் ‘வல்லினங்களின்’ கதையே இந்தக் ‘கசடதபற.’
ஆறு கதைமாந்தர்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கே தெரியாமல் இன்னொருவரின் வாழ்க்கையில் குறுக்கிட, அதன் விளைவாக விரிகின்றன ஆறு தனித்தனிக் கதைகள். ‘பட்டாம்பூச்சி விளைவு’ கோட்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் கதைக்களம் என்பதால் கோவையாக ‘இதுதான் கதை’ எனச் சொல்வது கடினம். ஆனால் திரையில் பார்க்கும்போது அதிக உறுத்தல்கள் இல்லாமல் நமக்கு எளிதாகப் புரிவது இந்த ஹைபர்லிங்க் சினிமாவின் பிளஸ்.
வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், விஜயலட்சுமி, ஹரீஷ் கல்யாண் என முன்னணிக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் ஆறு பேரில் வெங்கட் பிரபுவும் விஜயலஷ்மியும் தனித்துத் தெரிகிறார்கள். இவர்கள் தவிர, ரெஜினா, பிரியா பவானி சங்கர், சிஜாரோஸ், பிருத்விராஜன், சம்பத், சென்றாயன், அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு என ஏராளமான நடிகர்கள்.

ஆறு இசையமைப்பாளர்களில் அதிகம் ஈர்ப்பது யுவனும் சந்தோஷ் நாராயணனும்தான். துள்ளல் இசையில் யுவன் இழுத்தால் கலங்கடிக்கும் குரல்கள் வழியே அழுத்தமாகப் பதிகிறார் சந்தோஷ். ஆறு ஒளிப்பதிவாளர்களுமே தாங்கள் எடுத்துக்கொண்ட கதையைப் பொறுப்பாகச் சுமந்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளர்கள் ஆறு பேரும் அப்படியே.
வேன்டேஜ் பாயின்ட், பட்டர்ப்ளை எபெக்ட் என இரு கோட்பாடுகளின் வழியே படம் எடுக்க முயன்றதில் கரை சேர்ந்திருக்கிறார் சிம்புதேவன். கடவுள் குறித்த பார்வை வேன்டேஜ் பாயின்ட் கோட்பாட்டின் ஒரு சோற்றுப் பதமென்றால் காவல்துறை வன்முறை பட்டாம்பூச்சி விளைவிற்குப் பக்கா பொருத்தம். ஆனால் என்கவுன்ட்டர் குறித்த நியாயங்கள்தான் சிம்புதேவனின் வழக்கமான அரசியல் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கிறது.
மின்னல் வேகத்தில் நகரும் திரைக்கதையும், ஒவ்வொரு கதையும் மற்றொன்றோடு இணையும் புள்ளிகளும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. ஆனால் பரபர திரைக்கதையையும் தாண்டி ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் துருத்திக்கொண்டு தெரிவதுதான் சிக்கல். ஒருசில இடங்களில் சீரியல் நெடி.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஆறு குட்டிக்கதைகளோடு மீண்டுவந்து இயக்குநராய் வெற்றியும் பெற்றிருக்கிறார் சிம்புதேவன். ஆனால் அவரின் வழக்கமான நகைச்சுவை உணர்வு மிகச்சில இடங்களில் மட்டுமே எடுபடுவது ஏமாற்றம். ‘தென்சென்னைக் கதைகள்’ எனச் சொல்லப்பட்டாலும் எந்தக் கதையும் நிலப்பரப்பைப் பிரதிபலிக்கவில்லை.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை வித்தியாசமாய்ப் படமாக்கிக் காட்ட முயன்ற முயற்சிக்காகவே கசடதபறவைப் பாராட்டலாம்.