Published:Updated:

நடைமுறை சிக்கல்களைப் பேசியது ஓகே... ஆனால் டியூஷனா எடுப்பது? கமலி ஃப்ரம் நடுக்காவேரி +/- ரிப்போர்ட்!

கமலி ஃப்ரம் நடுக்காவேரி
கமலி ஃப்ரம் நடுக்காவேரி

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனம் ஒன்றில் தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து நுழைய முற்படும் சாமானிய பெண்ணின் போராட்டமே கமலி ஃப்ரம் நடுக்காவேரி.

தஞ்சை வட்டாரத்தின் நடுக்காவேரியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கமலிக்கு திடீரென சென்னை ஐ.ஐ.டியில் படிக்கவேண்டும் என ஆசை பிறக்கிறது. காரணம், ஒருதலைக்காதல். அதை மற்றவர்களிடம் மறைத்துவிட்டு ஐ.ஐ.டி ஆசையை மட்டும் வெளியே பகிர்கிறார். காதலைவிட சிக்கலாக இருக்கிறது ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளுக்காக தயாராகும் நடைமுறை. போதுமான கோச்சிங் சென்டர்கள் இல்லாமல், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் கலங்கி நிற்கும் கமலிக்கு ஆபத்பாந்தவனாய் வந்து உதவி செய்கிறார் ஓர் ஓய்வு பெற்ற பேராசிரியர்.

கமலி ஐ.ஐ.டிக்குள் நுழைந்தாரா, அவரின் காதல் என்னவானது என்பதை இரண்டரை மணிநேர பாடமாக சொல்கிறார் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி.
கமலி ஃப்ரம் நடுக்காவேரி
கமலி ஃப்ரம் நடுக்காவேரி

ஆனந்தி, அழகம்பெருமாள், பிரதாப் போத்தன், இமான் அண்ணாச்சி, ஶ்ரீஜா என படத்தில் இருப்பவர்கள் அனைவரும் இயல்பாய் நடித்திருப்பதால் நாம் பார்த்து, கேட்டு வளர்ந்த கிராமத்து மனிதர்களின் சாயலில் சிறப்பாக பொருந்திப் போகிறார்கள். அதுவே படத்தோடு நாம் ஒன்றிப்போவதற்கும் காரணமாகிறது.

தமிழில் முழுக்க முழுக்க பெண்களை மைய பாத்திரங்களாக வைத்து ஒரு ஃபீல் குட் படம் வந்து ஏகப்பட்ட நாள்களாகிறது. அந்தவகையில் கண்ணை உறுத்தும் காட்சிகள், தேவையில்லாத பாடல்கள், இரட்டை அர்த்தக் காமெடிகள் போன்வற்றை நம்பாமல் படமெடுத்ததற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.

கிராமத்து மனங்களை மட்டுமல்ல, மணங்களையும் அப்படியே நமக்குள் கடத்துகிறது ஜெகதீசன் லோகைய்யனின் ஒளிப்பதிவு. பச்சையம் பூசிய டெல்டா வட்டாரம் அப்படியே கண்களுக்குள் இறங்கி கதையின் முதல்பாதி தடுமாற்றங்களை மறக்கடிக்கிறது.

தந்தை - மகள், ஆசான் - மாணவி, தோழிகள் என ஒவ்வொரு உறவையும் நிறுவ சின்னச் சின்ன ரசனையான காட்சிகள், வசனங்களை படம் நெடுக அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அவை அனைத்தும் தனித்தனி காட்சிகளாகவே எடுபடுகின்றன.

கமலி ஃப்ரம் நடுக்காவேரி
கமலி ஃப்ரம் நடுக்காவேரி
Drishyam 2: வேற லெவல் சேட்டன்ஸ்... சவாலை எப்படி சமாளித்தது மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி?!

கிட்டத்தட்ட பாதி படம் அளவிற்கு கதை எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாமல் பார்வையாளர்களை குழப்புவதுதான் திரைக்கதையில் இருக்கும் பெரிய பிரச்னை. ஐ.ஐ.டிதான் கதையின் இலக்கு என முடிவான பின்னும் அதற்கான காரணம் படுவீக்காக இருப்பதால் கமலியின் முயற்சிகள் நம்மை கொஞ்சமும் பாதிக்காமல் கடந்துபோகின்றன.

நடைமுறைச் சிக்கல்களை பற்றி பேச நினைத்திருக்கும் இயக்குநர் அதைக் கொஞ்சம் விரிவாகவே பேசியிருக்கிறார். ஆனால் அதற்காக கமலி பாடம் கற்பதையும் அவ்வளவு டீட்டெயிலாக காட்டவேண்டுமா? ஒருகட்டத்தில் நாமே டியூஷன் சென்டரில் மாஸ்டரின் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

கமலியின் வெற்றியாக படத்தில் காட்டப்படுவது அவர் ஐ.ஐ.டிகளுக்கு இடையே நடக்கும் க்விஸ் போட்டியில் ஜெயிப்பதுதான். பக்கா கமர்ஷியல் டெம்ப்ளேட்டிற்குள் இந்த முடிவு சிக்குவதால் 'இதானே நடக்கப்போகுது' என முன்பே தயாராகிவிடுகிறது மனம். அதனாலேயே படத்தின் இறுதி சில நிமிடங்கள் உப்புசப்பின்றி கடந்துபோகின்றன.

கமலி ஃப்ரம் நடுக்காவேரி
கமலி ஃப்ரம் நடுக்காவேரி
விஷாலின் துப்பு துலக்கல்கள், வாவ் யுக்திகள், மென்சோக புன்சிரிப்புகள்! - 'சக்ரா' +/- ரிப்போர்ட்!
காதலுக்காக கல்வி பயில்கிறார். ஒருகட்டத்தில் அவரின் காதலும் புறக்கணிக்கப்படுகிறது. உடனே தன்மானம் உறுத்த மீண்டும் தீவிரமாய் படிக்கிறார். சில சாதனைகளும் செய்கிறார். ஆனால் மறுபடியும் அதே பையனின் கண்ணசைவிற்காக ஏங்குகிறார். இப்படியான குழப்பமான பாத்திரப் படைப்பே கமலியை முழுமனதாக நம்மை கொண்டாடவிடாமல் தடுக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு