Published:Updated:

"இரண்டு நிமிட `மாயா பஜார்' சீன் எடுக்க ஆறு மாதம் செலவழிச்சது வீண் போகலை..!" - `மகாநடி’ தயாரிப்பாளர்

"எங்களின் பயணம் மிகவும் கடினமான நீண்ட பயணம். சாவித்திரியம்மாவின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் ஒருமுறை இந்திய அளவில் எடுத்துச் சென்றதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்!"

29 ஆண்டுகளுக்குப் பிறகு, 'சிறந்த நடிகைக்கான' தேசிய விருதைத் தெலுங்கு திரையுலகம் இந்த ஆண்டு கைப்பற்றியிருக்கிறது. 1990-ம் ஆண்டு 'கர்தவ்யம்' திரைப்படத்துக்காக டோலிவுட்டிலிருந்து விஜயசாந்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து, பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோபிக்கான 'மகாநடி' திரைப்படத்தில் தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி டோலிவுட்டுக்கு இந்த ஆண்டின் தேசிய விருதைப் பெற்றுத் தந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh
Keerthy Suresh

66வது தேசிய விருதுகளின் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இதில், நாக் அஷ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த 'மகாநடி' (தமிழில் 'நடிகையர் திலகம்') திரைப்படம், 'சிறந்த தெலுங்கு திரைப்படம்', 'சிறந்த நடிகை' மற்றும் 'சிறந்த ஆடை வடிவமைப்பு' என மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கிறது. விருதுகளைக் குவித்திருக்கும் இத்திரைப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரோடு உரையாடினோம்.

தேசிய விருது அறிவித்தவுடன் உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

Nag Ashwin
Nag Ashwin

"மனநிறைவாக இருந்தது. எங்களின் பயணம் மிகவும் கடினமான நீண்ட பயணம். சாவித்திரியாம்மாவின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் ஒருமுறை இந்திய அளவில் எடுத்துச் சென்றதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் சாவித்திரியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?

விஜய்யின் எஸ்.எம்.எஸ்; 300 மிஸ்டு கால்; ஷவுட்-அவுட்! - தேசிய விருதுக்கு கீர்த்தி சுரேஷின் ரியாக்‌ஷன்

"சாவித்திரியம்மாவின் நடிப்புத் திறமைபற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். சுற்றி உள்ளவர்களே அவரை ஏமாற்றியபோதும், அவர் கைகளில் எதுவும் இல்லாத வேளையிலும், மற்றவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே அவர் பார்த்தார். எல்லோருக்கும் நல்லது மட்டுமே நினைத்தார். இப்படிப்பட்ட நேர்மறையான நபரைப் பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்று நினைத்தேன்.’’

அவர் வீட்டில் எப்படி இருப்பார், மக்களோடு எப்படி உரையாடுவார், என்ன கார் வைத்திருந்தார் போன்றவற்றையெல்லாம் உண்மைத்தன்மை மாறாமல் காட்சிப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் ஏராளம்.
தயாரிப்பாளர் பிரியங்கா தத்

சாவித்திரி கதாபாத்திரத்துக்கு கீர்த்தி சுரேஷை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

"16 வயது முதல் 40 வயது வரையிலான சாவித்திரியம்மாவின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் ஒருவரைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். வயது, நடிப்புத்திறமை என எல்லாவற்றுக்கும் ஏற்றபடி பொருந்தும் நடிகைகள் நம் திரைத்துறையில் மிகவும் குறைவு. கீர்த்தியின் நடிப்பை ஒரு படத்தில் பார்த்தேன். பார்த்ததும் சாவித்தியம்மா கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துவார் என்று தோன்றியது. சரியான தேர்வு என்று இப்போது நிரூபித்துவிட்டார்.’’

பயோபிக் எடுப்பதில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன?

Keerthy Suresh
Keerthy Suresh
Art By: Sundar

"வரலாறு படைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடந்த உண்மையான நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதே சுவாரஸ்யம்தான். புத்தகம், பேட்டி என அவர்களின் வாழ்க்கையைப் படிக்கும்போதே அந்த உணர்வுகள் நம்மையும் பாதிக்கும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்களோடு எப்படிப் பயணித்தார்கள், மக்களோடு மக்களாக எப்படி வாழ்ந்தார்கள் என்பதை படிக்கப் பிரமிப்பாக இருக்கும். அதிலும் சாவித்திரியம்மா மக்களுக்காகச் செய்த விஷயங்கள் ஏராளம். உதாரணத்துக்கு, விஜயவாடா பக்கத்தில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் அந்தப் பள்ளியில் அவர் நட்டு வைத்த சிறிய மரக்கன்று இப்போது வளர்ந்து கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போது நிச்சயம் நமக்கு மெய்சிலிர்க்கும். இப்படி ஏராளமான விஷயங்கள் ஒருவரின் சுயசரிதையைப் படிக்கும்போது தெரிந்துகொள்வோம். அத்தனையும் சுவாரஸ்யமானவை.’’

இந்த நெடுந்தூர பயணத்தில் அவர்கள் சந்தித்த சவால்கள் நிச்சயம் ஏராளம் இருக்கும். அவற்றைப் பற்றி இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரியங்கா தத் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Producers Priyanka Dutt and Swapna Dutt
Producers Priyanka Dutt and Swapna Dutt
Vikatan

"அந்தக் காலத்து நிகழ்வுகளை, அதுவும் திரைப்படத்தில் ஏற்கெனவே நாம் பார்த்த காட்சிகளை மறு ஆக்கம் செய்வதென்பது சாதாரண விஷயமல்ல. இத்திரைப்படத்தில் வரும் இரண்டு நிமிட 'மாயா பஜார்' படக் காட்சியை எடுக்க எங்களுக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டது. உடை, பின்னணி கலைஞர்கள், இடம், ஒப்பனை என எல்லாமே சவாலாகத்தான் இருந்தது. மேலும், எங்களுக்குக் கிடைத்த சில விஷயங்களை மட்டுமே வைத்து சாவித்திரியம்மா வீட்டில் எப்படி இருப்பார், மக்களோடு எப்படி உரையாடுவார், என்ன கார் வைத்திருந்தார் போன்றவற்றையெல்லாம் உண்மைத்தன்மை மாறாமல் காட்சிப்படுத்துவதிலிருந்த சிக்கல்கள் ஏராளம். நிகழ்ந்தவை மற்றும் எங்களின் கற்பனை இரண்டும் சேரும்போது அதில் எந்தவித தவறும் இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

Keerthy Suresh
Keerthy Suresh

அந்தக் காலத்து 'வாஹினி ஸ்டூடியோ' எப்படி இருக்கும் என்பதிலிருந்து அங்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் எப்படிப் பணிபுரிவார்கள் என்பது வரை அனைத்துத் தகவல்களையும் சேகரிக்கவே வருடம் ஆனது. அதற்காக அங்கு வேலை செய்த முன்னாள் ஒப்பனைக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர்கள் என அனைவரையும் சந்தித்தோம். அவர்கள் சொல்லும் தகவல்களை வைத்து காட்சிகளை வரைந்து, அவற்றைச் சரிபார்த்த பிறகே அதற்கான செட்டை அமைத்தோம். அனைவரின் உழைப்புக்கும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது."

கோலிவுட்டுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா?

தேசிய விருதுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷின் புதிய படம்!

"நிச்சயம் கோலிவுட்டிலும் தடம் பதிப்போம். `நடிகையர் திலகம்' எடுக்கும்போதே தமிழ்நாட்டு மக்களையும் மனதில் வைத்துதான் எடுத்தோம். சாதாரண 'டப்பிங்' திரைப்படமாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்காக நிறைய பயிற்சியையும் மேற்கொண்டோம். வருங்காலத்தில் நாங்கள் எடுக்கும் எல்லா திரைப்படமும் தமிழிலும் எடுப்போம். தமிழ்ப் படம் மட்டும் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. வாய்ப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு