Published:Updated:

#PenguinReview ``ஓ இதுதான் த்ரில்லரா... அப்ப சரி, அப்ப சரி!'' - `பெண்குயின்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

கீர்த்தி சுரேஷ், பெண்குயின்
கீர்த்தி சுரேஷ், பெண்குயின்

#PenguinReview: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'பெண்குயின்' படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

தற்செயல் நிகழ்வுகள் எப்போதுமே ஆச்சர்யம் அளிப்பவை. லாக்டெளனால் தியேட்டர் ரிலீஸ் இல்லாமல் ஓடிடி-யில் வந்த முதல் படம் 'பொன்மகள் வந்தாள்'. இரண்டாவது படமாக இப்போது வந்திருப்பது 'பெண்குயின்'. இரண்டுக்குமே பல ஒற்றுமைகள். இரண்டுமே பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் படங்கள். இரண்டுமே மலைப் பிரதேசங்களைக் கதைக்களமாகக் கொண்டவை. இரண்டுமே குழந்தைக் கடத்தலைப் பற்றிப் பேசுகின்றன. ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' ஓகே... நடிப்புக்காக தேசிய விருதுபெற்ற கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' எப்படி, படத்தின் ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன?

கோர்ட்டுக்கு அது முக்கியம்... ஆனால், ஜோதிகாவுக்கு? - `பொன்மகள் வந்தாள்' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்

* சில ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட குழந்தையைத் தேடி ஓடும், காப்பாற்றப்போராடும் ஒரு தாயின் கதையே 'பெண்குயின்'.

* பெண்குயினின் குயின் கீர்த்தி சுரேஷ். படம் முழுக்கவே இறுக்கமான முகமும், ஆறாத மனமுமாக தவித்துத் திரியும் கதாபாத்திரம். அதில் வித்தியாசங்கள் பல காட்டி பலம் கூட்டியிருக்கிறார் கீர்த்தி. கர்ப்பிணிப் பெண்ணின் உடல்மொழியை அச்சு அசலாக நகலெடுத்திருப்பவர், சில காட்சிகளில் எல்லாம் அசால்ட்டாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார்.

பெண்குயின்
பெண்குயின்

* லிங்காவின் நடிப்பு பிரமாதம். அவருக்குக் கிடைத்த இடத்தை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆனா, இயக்குநர்தான் லிங்காவை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. மற்ற நடிகர்களில் மாதம்பட்டி ரங்கராஜின் முகத்தில் இயற்கையான குளிரின் நடுக்கம் கூட தெரியவில்லை. சிறுவன் அத்வைத் மற்றும் மதி ஆகியோர் கவனிக்கவைக்கிறார்கள். எந்தக் கதாபாத்திரமும் பெரிதாக மனதில் நிற்கவில்லை.

* வசனங்கள் சின்னத் தாக்கத்தைக் கூட உண்டு பண்ணவில்லை. ஒரு தமிழ்ப் படத்தையே தமிழ் டப்பிங் படமாகப் பார்த்ததுபோன்ற உணர்வு. படத்தையும் பார்வையாளர்களையும் ஒன்றவிடாமல் செய்யும் வேலையைத்தான் வசனங்கள் செய்திருக்கின்றன. சைலைன்ட் மூவியாக எடுத்து சைகை மொழியில் பேசியிருந்தால்கூட படத்துடன் இன்னும் கொஞ்சம் ஒன்றியிருப்போமோ என்றே தோன்றுகிறது.

Keerthy Suresh
Keerthy Suresh

* திரைக்கதை என்கிற விஷயத்தையும் முதல் காட்சியிலேயே, துண்டு துண்டாக வெட்டி ஏரியில் வீசிவிட்டார்கள். படத்தில் எல்லோரும் குழந்தையைத் தேடும்போது, நாம் மட்டும் திரைக்கதையைத் தேடிக்கொண்டிருக்கிறோம். புதருக்குள் விழுந்த பந்தை எடுக்கச்செல்கையில் இன்னொரு பந்து கிடைப்பதுபோல, சைக்கோ படங்களில் போனஸ் கில்லர் கிடைப்பதெல்லாம் பழைய டெக்னிக் சாரே. அந்தக் கடைசி ட்விஸ்ட் எல்லாம் அதை எழுதியவருக்கே இரண்டு நாளுக்குப் பிறகு மறந்துவிடும்.

* முதற்பாதியில் சில இடங்களில் லாஜிக் விஷயங்கள் உறுத்தின. ஆனால், அடுத்த பாதியிலோ அப்படி எந்த உறுத்தலும் இல்லை. பழகிடுச்சு! லாஜிக் குறைகளை அடுக்க ஆரம்பித்தால் அது அத்தனையும் ஸ்பாய்லர் ஆகிவிடும்.

* கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு, அவ்வளவு அழகியலோடு இருக்கிறது. ஆனால், படம் அதற்குத்தகுந்ததாக இல்லை என்பதால் சில ஷாட்கள் படத்துக்குச் சம்பந்தம் இல்லாமல் இருக்கின்றன. அணில் க்ரிஷ்ஷின் படத்தொகுப்பு சிறப்பு. காட்சிகளில் ஆங்காங்கே உள்ள பதைபதைப்பைக் கூட்டிக்கொடுத்திருக்கிறார். படத்தின் பின்பாதியில் வரும் 'ரகசிய அறை' கொஞ்ச நேரமே காட்டப்பட்டாலும் திகிலூட்டுகிறது. கலை இயக்குநருக்கு வாழ்த்துகள்!

ஈஸ்வர் கார்த்திக், கார்த்திக் பழனி
ஈஸ்வர் கார்த்திக், கார்த்திக் பழனி

* கீர்த்தியின் நடிப்பு, கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவைத்தாண்டி படத்தின் ஆன்ம பலம் சந்தோஷ் நாராயணின் இசை. பல இடங்களில் பின்னணி இசைதான் படத்தின் உணர்வை காட்சிகளுடன் இழைந்தோடி கடத்துகிறது. சிறப்பு சந்தோஷ்!

* ஒரு த்ரில்லர் கதையின் நிலமாக, குளிரான மலை பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். இயற்கையாகவே அந்த நிலத்தில் உள்ள ஒரு த்ரில் உணர்வைத்தாண்டி, திரைக்கதை, பாத்திர வடிவமைப்பு, காட்சியமைப்பு ஆகியவற்றில் அந்த உணர்வு பெரிதாக வெளிப்படவே இல்லை. தாய்மை என்பது உறவல்ல, ஒரு ஆட்டிட்யூட் என்ற கூற்றை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கும் இயக்குநர், குற்றத்திற்கான காரணங்களை, குற்றவாளியின் உளவியல் பிரச்னைகளை சரியாகக் கையாளததே படத்தின் சிக்கல்.

பெண்குயின்
பெண்குயின்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடி ரிலீஸ் `பெண்குயின்'... படம் எப்படி இருக்கிறது? #VikatanPollResults

* 20 நிமிடக் குறும்படமாக `சுருக்'கென எடுத்திருந்தால் `நறுக்' என வந்திருக்கும் படம் என்பதை, பார்வையாளர்கள் ஸ்கிப் பட்டனைத் தட்டுவதை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு