Published:Updated:

தேசிய விருதுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷின் புதிய படம்!

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகளில், தற்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

66-வது தேசிய விருதுக்கான வெற்றியாளர்களின் பட்டியல், சமீபத்தில் வெளியானது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோபிக்கான `மகாநடி’ படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றிருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் நடிக்கும் புதியபடம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வந்துள்ளது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் தற்போது கமிட்டாகியிருக்கிறார். தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம், `மேயாத மான்', `மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். எமோஷனல் மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில், ஹீரோ இல்லை.

புதிய பட அறிவிப்பு
புதிய பட அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நயன்தாரா, தமன்னா, அமலா பால் என நடிகைகள் பலரும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்தப் பட்டியலில் தற்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.