Published:Updated:

காக்கி சட்டைக்குள் ஒரு கதைசொல்லி!

ஷாஹி கபீர்
பிரீமியம் ஸ்டோரி
ஷாஹி கபீர்

கோட்டயத்தில் ஆயுதப்படையில் பணியில் இருந்தபோது சக போலீஸ் நண்பர்களை வைத்து ‘இன் க்ளோரியஸ் லைப்’ என்ற குறும்படத்தை இயக்கினேன்

காக்கி சட்டைக்குள் ஒரு கதைசொல்லி!

கோட்டயத்தில் ஆயுதப்படையில் பணியில் இருந்தபோது சக போலீஸ் நண்பர்களை வைத்து ‘இன் க்ளோரியஸ் லைப்’ என்ற குறும்படத்தை இயக்கினேன்

Published:Updated:
ஷாஹி கபீர்
பிரீமியம் ஸ்டோரி
ஷாஹி கபீர்

ஆலப்புழாவில் மினி ரிசார்ட் போல் உள்ள வீட்டில் ஹாயாக உட்கார்ந்து அடுத்த ஸ்கிரிப்ட்டை எழுத ஆரம்பித்து விட்டார் திரைக்கதையாசிரியர் ஷாஹி கபீர். திரைக்கதை எழுதுபவர்களை ஹீரோவாகக் கொண்டாடும் மலையாள சினிமாவின் லேட்டஸ்ட் கவன ஈர்ப்பு. ‘ஜோசப்’, ‘நாயாட்டு’ என்ற இரு ஹிட் போலீஸ் க்ரைம் த்ரில்லர் படங்களின் கதை, திரைக் கதையாசிரியர். எல்லாவற்றையும் விட பிஸியான முன்னாள் கேரள போலீஸ் அதிகாரி. அதே ஆச்சர்யத்துடன் அவரிடம் பேசினேன்.

``போலீஸ், சினிமா இரண்டும் நேரெதிர் துருவங்கள். ‘டூட்டி பிஸி, படம் பார்க்கவே நேரம் இல்லை’ என்று சொல்லும் போலீஸைத்தான் நான் பார்த்திருக்கிறேன். பிஸியான போலீஸ் ஆபீஸராக இருந்து எப்படி சினிமாவுக்குள் வந்தீர்கள்?’’

``போலீஸ் வேலையை நேசித்துதான் சேர்ந்தேன். இயல்பிலேயே நான் கிரியேட்டிவ் ஆசாமி. ஒரு வளையத்துக்குள் நிற்க மாட்டேன். ஊர் சுற்றுவதும் வாசிப்பதும், உலக சினிமாக்கள் பார்ப்பதும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு சிவில் போலீஸ் ஆபீஸராக பிஸியான வாழ்க்கை, வழக்கு, விசாரணை, பந்தோபஸ்து என ஒரு வளையத்துக்குள் வாழ்க்கை அமைந்ததை என் மனம் விரும்பவில்லை. கிடைக்கும் நேரத்தில் கதைகள் எழுத ஆரம்பித்தேன். மருத்துவ விடுப்பில் குறும்படங்கள் இயக்க ஆரம்பித்து அதற்கு விருதுகள் கிடைக்க ஆரம்பித்ததும் என்னையும் அறியாமல் எனக்குள் இருந்த இயக்குநர் எட்டிப்பார்த்தான். நீண்ட விடுப்பில் சினிமாவுக்குள் வந்த நான் இப்போது சினிமாவில் செட்டில் ஆகிவிட்டேன்!”

காக்கி சட்டைக்குள் ஒரு கதைசொல்லி!

``அப்படியென்றால் இந்நேரம் இயக்குநராக பிஸியாகியிருக்க வேண்டும். அப்படி ஆகாமல் ஏன் கதை, திரைக்கதையாசிரியராக மாறினீர்கள்?’’

“கோட்டயத்தில் ஆயுதப்படையில் பணியில் இருந்தபோது சக போலீஸ் நண்பர்களை வைத்து ‘இன் க்ளோரியஸ் லைப்’ என்ற குறும்படத்தை இயக்கினேன். 6 விருதுகள் பெற்ற அந்தக் குறும்படம், ‘நம்மால் இயக்குநராக முடியும்’ என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தது. தினசரியில் என் பேட்டியைப் பார்த்து, நடிகர் டொவினோ தாமஸ், விநாயகன் இருவரும் பேசினார்கள். அவர்கள் மூலம் இயக்குநர், நடிகர் திலீஷ் போத்தனின் அறிமுகம் கிடைத்தது. அவரின் ‘தொண்டிமுதலும் த்ரிசாக்‌ஷியமும்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணி செய்தேன். ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை என்பதால், என்னை அந்தப் படத்தில் எளிதில் பொருத்திக்கொண்டேன். படத்தில் நிஜ போலீஸ்காரர்கள் பலரை நடிக்கவும் வைத்தோம். நானும் ஒரு சிறு கேரக்டர் செய்திருந்தேன். படம் பிஸியாக டேக்-ஆப் ஆகும்போதுதான் ‘இயக்கத்துக்கு மிகுந்த பொறுமை தேவை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று முடிவெடுத்தேன். திலீஷ் போத்தனும், அந்தப் படத்தின் திரைக்கதையாசிரியர் ஷியாம் புஷ்கரனும் ‘உங்ககிட்ட நிறைய கதைகள் இருக்கு நண்பா... எழுதுங்க’ என உற்சாகப்படுத்தினர். உடல் உறுப்பு தானத்தையும், வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த முன்னாள் போலீஸ்காரனின் வாழ்க்கையையும் இணைத்து ‘ஜோசப்’ கதையை ஒரே வாரத்தில் எழுதி முடித்தேன். ‘இந்தக்கதைக்கு மோகன்லால் பொருத்தமாக இருப்பார், அவரைப் போய்ப் பாருங்கள்’ என்று சொன்னார்கள். எனக்கு ஜோஜு ஜார்ஜ் மனதில் வந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரைச் சந்தித்து, கதையின் ஒன்லைன் சொன்னபோதே, கதைக்குள் வந்துவிட்டார். ‘நானே தயாரிச்சு நடிக்கிறேன்... இயக்குநர் பத்மகுமார் இயக்கட்டும்!’ என்றார். படத்தை எடுத்து என்னிடம் போட்டுக் காட்டியபோது, நான் என்ன உணர்வோடு கதையை எழுதினேனோ அதைத் தத்ரூபமாக திரையில் இருவரும் கொண்டு வந்திருந்தார்கள். சிலிர்ப்பாக இருந்தது. படம் ரிலீஸாகி ஜோஜுவுக்கும் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அடுத்து ஜோஜுவை மனதில் வைத்து ‘நாயாட்டு’ படத்தின் திரைக்கதை எழுதினேன்.

எழுதி முடித்ததும், ‘இதில் அந்த சப் இன்ஸ்பெக்டர் மணியன் பாத்திரத்தில் நீங்க நடிச்சா நல்லா இருக்கும் நண்பா!’ என்று சொன்னேன். ஓகே சொல்லி இயக்குநர் மார்ட்டின் ப்ரக்காத்தை எனக்கு அறிமுகம் செய்த கையோடு, ‘முதல் படம் ஜோசப்புக்கு கேரளாவின் சுகாதாரத்துறை வழக்கு போட்டிருந்தது. இதில் என்ன வழக்குப்பா?’ என்று ஜாலியாகக் கேட்டார். ஆமாம். ‘ம்ருத சஞ்சீவினி’ எனும் உறுப்பு தான திட்டத்தைத் தப்பாகக் காட்டி பயமுறுத்தி விட்டேன் என்று சொன்னார்கள். சத்தியமாக அப்படி எதையும் மனதில் வைத்து எழுதவில்லை. முழுக்க முழுக்க புனைவுக்கே இப்படியென்றால் அடுத்த படத்தை உண்மைச் சம்பவத்தோடு எழுதலாம் என முடிவெடுத்தேன்... அதுதான் ‘நாயாட்டு!’ ”

காக்கி சட்டைக்குள் ஒரு கதைசொல்லி!

``போலீஸை விமர்சிக்கும் ‘நாயாட்டு’ சினிமா உங்கள் சொந்த அனுபவமா?’’

“கேரளத்தின் அனுபவம் என்றே சொல்லலாம். முலந்துருத்தி என்ற ஊரில் இரண்டு குழந்தைகள் விபத்தில் இறந்துபோனார்கள். மப்டியில் அந்த வாகனத்தில் போலீஸார் இருந்ததால் அவர்கள்தான் குடித்துவிட்டு மோதி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு பாய்ந்தது. உண்மையில் வாகன ஓட்டி யாரோ ஒருவர். ஆனால், அந்த வாகனத்தில் பயணித்த நான்கு போலீஸ்காரர்களும் தலைமறைவானதும் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையை போலீஸே நடத்தியது. வழக்கு நீண்டுகொண்டே போய், தற்போதுதான் அந்த வழக்கில் அவர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தோடு கொஞ்சம் புனைவையும் அரசியலையும் கலந்து கதையை எழுதினேன். படத்தை அண்மையில் பார்த்த நான்கு போலீஸ்காரர்களும் ‘பக்கத்தில் இருந்து பார்த்ததைப்போல அவ்வளவு நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்... தற்கொலை எண்ணம் வரை எங்கள் மன ஓட்டத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்!’ என்று பாராட்டினார்கள். படத்தில் க்ளைமாக்ஸை முடிவே இல்லாமல் விட்டிருந்ததை அவர்கள் ரசித்தார்கள்!”

`` ‘நாயாட்டு’ தலித்களுக்கு எதிரான கருத்தியலைக் கொண்ட படம் என்ற விமர்சனம் இருக்கிறதே?’’

“அதுதான் எனக்கே வருத்தம். என் நோக்கம் தவறாகிவிட்டதே என்ற வருத்தம் எனக்கிருக்கிறது. நிஜத்தில் முலந்துருத்தி சம்பவத்தைக் காட்சிப்படுத்த நினைத்தேன். ஏனென்றால், இறந்த அந்தக் குழந்தைகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். என் படத்தில் அதிகார போலீஸ் - அப்பாவி போலீஸ் என்ற இரண்டு சாதிகள்தான் உண்டு. தேடுதல் வேட்டையில் தற்கொலை செய்துகொள்ளும் அந்த போலீஸ் அதிகாரி தலித் சமூகத்தைச் சார்ந்தவர்தான். பெண் போலீஸ் நிமிஷாவும் தலித்துதான். நான் சாதிய அரசியலைப் பேச சத்தியமாகப் நினைக்கவே இல்லை. ஒரு காவல்நிலையத்தில் ஒரு அதிகாரி கோபப்பட்டால் எப்படி செயின் ரியாக்‌ஷனாக அது பலரை பாதிக்கிறது என்பதை மட்டுமே நிஜ சம்பவத்தின் பின்னணியில் சொல்ல நினைத்தேன். படத்தில் வரும் தேர்தலும், அதை ஒட்டி ஆளும் அதிகார வர்க்கம் போடும் கணக்கும்தான் நான் நிஜத்தில் பேச நினைத்தது. கேரக்டருக்காக ஒரு தலித் பாத்திரத்தை நான் காட்சிப்படுத்திய விதம் பலருக்கு வருத்தம் என்றார்கள்.

சாதி ரீதியான இப்படியொரு விமர்சனமும் பார்வையும் படம் ரிலீஸான பிறகே எனக்குத் தெரிய வந்தது. சப் இன்ஸ்பெக்டர் மணியன் பாத்திரத்தை மட்டும் ஆரம்பம் முதல் முடிவுவரை கவனித்துப் பார்த்தால், நான் தலித்தியச் சிந்தனையாளன் என்பது உங்களுக்கே புரியும்!”

காக்கி சட்டைக்குள் ஒரு கதைசொல்லி!

``போலீஸில் வேலை பார்த்ததால்தான் போலீஸை விமர்சித்துப் படம் எடுக்க முடிந்ததா? போலீஸிலிருந்து எதிர்ப்புகள் வரவில்லையா?’’

“காவல்துறையை மோசமாகச் சித்திரிக்கக்கூடாது என்ற நோக்கம் முன்னாள் போலீஸ்காரனாய் எனக்கு இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு படைப்பாளியாய் நிஜத்தின் அருகே வைத்துக் கதை சொல்ல ஆசைப்படுகிறேன். அடுத்த படமும் போலீஸை மையமாக வைத்துதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் கேரளத்தின் உயர் பதவியில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அழைத்துப் பாராட்டினார்கள். ‘ஜோசப்’ பார்த்து தமிழ்நாட்டிலிருந்து அழைத்துப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டில் இப்படி ஒரு போலீஸ்காரர் சினிமாவில் வேலை செய்ய முடியாது என்றுகூடச் சொன்னார்கள். வாய்ப்பிருந்தால் 2024-ல் மீண்டும் காக்கியை அணிந்து டியூட்டியில் சேர நினைக்கிறேன். இப்போது அடுத்து ‘இவன் என்னமாதிரியான கதை சொல்லப்போகிறான்’ என உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பத்து வருட அனுபவமே இன்னும் நான்கு கதைகள் சொல்லும்!”

நம்பிக்கையுடன் சிரிக்கிறார் அந்தக் காக்கிக் கதை சொல்லி.