Published:Updated:

`சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தி `ஸ்மிதா' எனப் பெயரிட்டவர்!'- இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன் மரணம்

சினிமா இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன்
சினிமா இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன்

"இங்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் வந்த பெண் யார் என நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பெண் 'நான்தான் புடிச்சிருக்கா' எனக் கேட்டார்" என சில்க் ஸ்மிதா-வை அறிமுகப்படுத்தியது பற்றி கூறியிருந்தார் ஆண்டனி ஈஸ்ட்மேன்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆண்டனி ஈஸ்ட்மேன் (75) மாரடைப்பு காரணமாக திருச்சூரில் நேற்று மரணமடைந்தார். போட்டோகிராபரான ஆண்டனி 'ஈஸ்ட்மேன்' என்ற ஸ்டுடியோ வைத்திருந்தார். இதையடுத்து அவர் ஆண்டனி ஈஸ்ட்மேன் என அழைக்கப்பட்டார். இவர்தான் நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். இவரைப் பற்றி சில்க் ஸ்மிதா பேட்டிகளில் அடிக்கடி கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது குறித்து ஒருமுறை ஆண்டனி ஈஸ்ட்மேன் கூறியிருந்தார், "எதிர்பாராதவிதமாக நான் சினிமா இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வந்தேன். காரணம் அடிப்படையில் நான் ஸ்டில் போட்டோகிராபர். அன்று நான் கலூர் டென்னிசன், ஜான் பால் ஆகிய நண்பர்களைச் சந்தித்தேன். ஜான் பாலும் நானும் 'இணையைத் தேடி' என்ற கதையை உருவாக்கினோம். அதற்கு ஷோபா-வை நாயகியாக நாங்கள் நினைத்து வைத்திருந்தோம். அவர் மரணமடைந்ததால் புதிய கதாநாயகியை நடிக்க வைக்கலாம் எனத் தீர்மானித்தோம்.

சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதா

அன்று கோடம்பாக்கத்தில் சினிமாவில் நடிப்பதற்காக பிள்ளைகளுடன் அங்கு வந்து தங்கியிருந்த நிறைய குடும்பங்கள் உண்டு. அதில் பல வீடுகளில் சென்று பார்த்தேன். மேக்கப் போடக்கூடாது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். நான் கேமராவுடன் சென்றேன். ஆனால் எல்லோரும் கேமராவுக்கு போஸ் கொடுக்க மேக்கப்புடன் வந்தார்கள். இதனால் ஏமாற்றத்துடன் நாங்கள் வெளியே வந்தபோது, பக்கத்தில் உள்ள வீட்டில் ஒரு பெண் இருப்பதாகச் சொன்னார்கள்.

நாங்கள் போய் பார்த்தபோது அங்கு வேலைக்காரி போன்று ஒரு பெண் பிளாஸ்டிக் இருக்கையில் அமர்ந்திருந்தாள். இங்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் வந்த பெண் யார் என நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பெண் 'நான்தான் புடிச்சிருக்கா' எனக் கேட்டார். அதை பிறகு சொல்லலாம். வேற யாரும் கூட இல்லியா என நான் கேட்டேன். அம்மா காய்கறி வாங்கப்போயிருப்பதாக அந்தப் பெண் சொன்னாள். சிறிது நேரத்தில் அம்மா வந்தார். அவரிடம் விபரத்தைச் கூறினேன்.

சினிமா இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன்
சினிமா இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன்

பின்னர் மேக்கப் இல்லாமல், தண்ணீர்கொண்டு முகத்தை கழுவிவிட்டு அந்தப் பெண்ணின் போட்டோவை எடுத்துவிட்டு சென்றேன். பிரிண்ட் எடுத்து பார்த்தபோது அனைவருக்கும் அந்தப் பெண்ணை பிடித்துவிட்டது. மறுநாள் அவரது வீட்டுக்குபோய் விபரத்தைச் சொன்னோம். இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். பெண்ணின் பெயரைக் கேட்டோம், விஜயமாலா என்றார் அம்மா. அந்தப் பெயர் வேண்டாம் வேறுபெயர் நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்றோம்.

அது ஸ்மிதா பாட்டீல் பிரபலமாக நடித்துக்கொண்டிருந்த காலம். அந்தப் பெயரில் ஓர் ஈர்ப்பு இருந்ததால் புதுமுக நடிகை ஸ்மிதா எனப் பெயரிட்டோம். நாங்கள் சொன்னபடி படத்தில் நடித்தார். பின்னர் வினு சக்கரவர்த்தியின் படத்தில்தான் சில்க் என்ற அடைமொழி அவரது பெயரில் சேர்க்கப்பட்டது. கமல்ஹாசனின் 'மூன்றாம் பிறை' திரைப்படம்தான் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மாற்றியது. அதன்பிறகு மரணம்வரை பல பேட்டிகளில் என்னைப்பற்றி அவர் கூறியிருக்கிறார்" எனக் கூறியிருந்தார்.

ஆண்டனி ஈஸ்ட்மேனின் மறைவிற்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு