சினிமா
தொடர்கள்
Published:Updated:

“போலீஸ்காரர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும்!”

குடும்பத்துடன் சிபி தாமஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் சிபி தாமஸ்

நான் நடிக்க, கதை திரைக்கதை எழுத, சினிமா இயக்க என முறையான அனுமதியை அரசிடமிருந்து வாங்கியிருக்கிறேன். உங்கள் கனவுகளை அடைய கூடுதல் நேரம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும்.

இதெல்லாம் மலையாள சினிமாவில்தான் சாத்தியம் என்று சத்தியம் செய்யலாம். ஒரே நேரத்தில் காவல்துறையில் பணிபுரிந்துகொண்டே சினிமாத்துறையிலும் தடம்பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் மலையாளிகள்.

சிபி தாமஸ், ஷாஹி கபீர், நித்தீஷ், ஷாஜி மராத், அருண் விஸ்வம், ரஹீம் காதர், பி.எஸ்.சுப்ரமண்யன் மற்றும் சரத் கோவிலகம் என்று ஸ்கிரிப்ட் ரைட்டர்களாக, நடிகர்களாக, இயக்குநர்களாக மல்லுவுட்டில் காவல்துறையினர் ஜொலிக்கிறார்கள். தேசிய விருதுபெற்ற ‘தொண்டிமுதலும் திருசாக்‌ஷியும்’ படத்தில் மட்டும் மொத்தம் 23 போலீஸார், போலீஸாகவே நடித்திருந்தார்கள். அதே படத்தில் இயல்பான இன்ஸ்பெக்டராக நடித்த சிபி தாமஸ் இப்போது கேரள சினிமாவின் பிஸியான நடிகர், கதாசிரியர் மற்றும் நாவல் எழுத்தாளர். சமீபத்தில் ஹிட்டடித்த, ‘நா தான் கேஸ் கொடு’ படத்தில் திருடனாகவே நடித்துக் கலக்கியிருந்தார். தமிழில் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் எஸ்.பி பாத்திரத்தில் நடித்திருந்தார்.

பகலில் போலீஸ் பணி, இரவெல்லாம் எழுத்துப்பணி... நடுவில் விடுப்பில் நடிப்பு என பிஸியாக இயங்கிக்கொண்டிருந்த சிபி தாமஸை சந்தித்தேன்.

சிபி தாமஸ்
சிபி தாமஸ்

“கேரள போலீஸே கலைத்துறைக்குள் வந்திடுச்சா... அதென்ன கேரளக் காக்கிகள் கதை எழுதுவதிலும் நடிப்பிலும் பின்னுகிறீர்களே..?”

“(சிரிக்கிறார்) ஒரு விஷயம் சொல்லட்டுமா..? போலீஸ்காரர்களுக்கு ஒவ்வொருநாளும் மற்றவர்களைவிட புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். ஒவ்வொரு பெட்டிஷனுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையோடு கொஞ்சம் புனைவையும் கலந்தால் அழகான மலையாள சினிமாவின் திரைக்கதை தயார். எங்களின் தினசரி அனுபவங்கள்தான் எங்களைத் திரைத்துறையில் மிளிர வைக்கின்றன. Experiences makes Masters. நம் வாழ்க்கையில் விதவிதமான குணாதிசயங்கள் கொண்ட நிறைய பேரைச் சந்திப்போம். நம்மால் அவர்களை உன்னிப்பாகக் கவனிக்க முடிந்தாலே போதும், நம்மாலும் நடிக்க முடியும். நான் நடிப்பதெல்லாம் நான் சந்தித்த மனிதர்களைப் போலவே பிரதியெடுத்துச் செய்வதுதான்!”

“இந்திய அளவில் பிஸியான ஒளிப்பதிவாளராக விளங்கும் ராஜீவ் ரவி உங்கள் நெருங்கிய நண்பராமே..?”

“ஆமாம்... என் இளம் வயது ஆத்ம நண்பன். எனக்கு பள்ளி நாள்களிலிருந்து நடிப்பின்மீது பெருங்காதல் உண்டு. காரணம், என் தந்தை தாமஸ். விவசாயிதான் என்றாலும் மேடை நாடக இயக்குநர். என் தாயார் அந்த நாடகங்களில் நடிப்பார். வீட்டிலேயே நாடக ரிகர்சல் நடக்கும். அதனால் நடிப்பு என் ரத்தத்திலேயே உண்டு. பள்ளி மற்றும் கல்லூரியில் மாநில அளவில் நடிப்புக்காக முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். நானும் ராஜீவும் புனே திரைப்படக்கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தோம். ஓரியண்டேஷன் புரோக்ராமுக்குக்கூட நேரில் போயிருந்தோம். ஆனால், அதிர்ஷ்டம் என் நண்பனுக்கு மட்டும் அடித்தது. ‘ஒளிப்பதிவு’ பிரிவில் அவனுக்கு இடம் கிடைத்தது. அதன்பிறகு நான் கல்லூரியில் நடிப்புக்காக பல்கலைக்கழக அளவில் விருதுகள் வாங்கினேன். இன்ஸ்பெக்டராக வேலை பார்த்துக்கொண்டே, என்றாவது நம் நடிப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும் எனக் காத்திருந்ததற்கு பலனாக எதேச்சையாக ‘தொண்டிமுதலும்...’ படம் கிடைத்தது. அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியுடன் பழைய நட்பு துளிர்த்தது. ஒரு இன்ஸ்பெக்டராக நான் வடமாநிலங்களுக்குப் போய் கொள்ளையர்களை சேஸ் செய்து பிடித்த அனுபவத்தை அவரிடம் சொன்னதும் ‘படமாகப் பண்ணலாம், நீயே திரைக்கதை எழுது!’’ என்றார். அப்படி என் அனுபவத்தில் நிகழ்ந்த ‘குட்டவும் சிக்ஸயும்’ படம் எனக்கு மலையாள சினிமாவில் பல கதவுகளை சமீபத்தில் திறந்து வைத்திருக்கிறது!”

“போலீஸ்காரர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும்!”

“கேரள போலீஸில் நடிப்பதற்கு அனுமதிக்கிறார்களா? எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது? சினிமாவில் பணிபுரிவது உங்கள் பிஸியான ரெகுலர் போலீஸ் வேலையை பாதிக்காதா?’’

“நான் நடிக்க, கதை திரைக்கதை எழுத, சினிமா இயக்க என முறையான அனுமதியை அரசிடமிருந்து வாங்கியிருக்கிறேன். உங்கள் கனவுகளை அடைய கூடுதல் நேரம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். அதனால்தான் அவ்வளவு பிஸியான போலீஸ் பணிகளுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி சினிமாவில் நடிக்கிறேன். இரவுகளில் கதை, திரைக்கதை எழுதுகிறேன். கலைத்துறை என் இளம்பிராயத்துக் கனவு என்பதால் காவல்துறை வேலை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்கிறேன். முதல்வரின் பதக்கம் வாங்கிய அதிகாரி நான்.

சொல்லப்போனால் என்னை காவல்துறையின் சீனியர்கள் அதிகம் உற்சாகப்படுத்துகிறார்கள். ‘தொண்டிமுதலும்...’ படம் ரிலீஸானபோது நான் கடலோரக் காவல்படையில் இன்ஸ்பெக்டராகப் பணியில் இருந்தேன். அப்போது எங்கள் ஐ.ஜி. விஜயன் சார் ஒரு அஃபிஷியல் மீட்டிங்கில் எங்கள் சகாக்களிடம், ‘யார்லாம் தொண்டிமுதலும் திருசாக்‌ஷியும் படம் பார்த்தீங்க?’ எனக் கேட்டார். பலர் ‘பார்க்கலை’ என்றார்கள். ‘என்னது, இன்னும் பார்க்கலையா..? அருமையான படத்தை மிஸ் பண்ணிட்டீங்க...மலையாள சினிமாவின் புது சூப்பர் ஸ்டார் நடிகர் உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் அவர் நடிப்பு அபாரம். காவல்துறைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். படத்தைப் பார்த்துட்டு வந்து எங்கிட்ட சொல்லுங்க’ என்றவர் என் நடிப்பை எல்லோர் முன்னிலையிலும் 45 நிமிடங்கள் புகழ்ந்தார். வாழ்வில் மறக்க முடியாத பாராட்டு அது!”

“போலீஸ்காரர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும்!”

“உங்களுக்கு ‘ஜெய்பீம்’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?”

“தொண்டிமுதலும் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் த.செ.ஞானவேல் என்னை சென்னையில் இருக்கும் சூர்யாவின் 2டி ஆபீஸுக்கு இன்டர்வியூவுக்காக அழைத்திருந்தார். ‘போலீஸ் ரோல் இருக்கு... பண்றீங்களா?’ என்று கேட்டார். கசக்குமா என்ன? உடனடியாக ஓகே சொன்னேன். மனசுக்கு நிறைவான சினிமா.

நான் ரியல் போலீஸ் என்பதால் நடிப்பாரா என இங்கிருக்கும் இயக்குநர்கள் நினைக்கிறார்களோ என்னவோ, அடுத்த படம் தமிழில் அமையவில்லை. இதோ இந்தப் பேட்டி பார்த்து அழைப்பு வரும் எனக் காத்திருக்கிறேன்!”

“மலையாள வாசகர்களிடையே நீங்கள் எழுதிய, ‘குட்ட சம்மதம்’ நாவல் ரொம்பவே பாப்புலர். சினிமாவுக்கு நடுவே நாவலும் எழுதும் யோசனை எப்படி வந்தது?”

“எனக்கு எழுத்தின் மீதும் அதீத ஆர்வம் உண்டு. ‘மாத்ருபூமி’ என் முதல் நாவலை வெளியிட்டது. காவல்துறையில் நான் சந்தித்த ஒரு நெகிழ வைக்கும் வழக்கு பற்றிய புனைவு கலந்த நாவல் அது. அந்த நாவல் தந்த வரவேற்போடு அடுத்த நாவலையும் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதோடு தற்போது நான்கு பெரிய இயக்குநர்களின் படங்களுக்குக் கதாசிரியராக கமிட் ஆகியிருக்கிறேன்!’’

“போலீஸ்காரர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும்!”

“தமிழில் உங்கள் ஃபேவரைட்?”

“டைரக்டர்களில் ஷங்கர், மணிரத்னம், த.செ.ஞானவேல் பிடிக்கும். நடிப்பில் ரஜினி சார், சூர்யா, மாதவன், விஜய் மற்றும் விஜய் சேதுபதி. படமென்றால் ‘ஜெய்பீம்’, ‘கைதி’, ‘பேரன்பு’, ‘விக்ரம்’ மற்றும் ‘எந்திரன்’ ரொம்பவே பிடிக்கும்!”

“உங்களின் எதிர்கால லட்சியம் என்ன?”

“காவல்துறையில் நிறைய சாதனைகள் பண்ணியாச்சு. சிறந்த புலனாய்வு, சிறந்த பணிக்கான முதல்வரின் பதக்கம், ஸ்பெஷல் ஆபரேஷனுக்கான விருது எனப் பல விருதுகள் வாங்கியாச்சு.

இனி கலைத்துறையில் சிறந்த நடிகர் மற்றும் கதாசிரியர் எனப் பெயர் வாங்கணும். அப்புறம் முக்கியமான விஷயம்... என் லட்சியக்கனவுன்னுகூடச் சொல்லலாம். தமிழ்ப்படத்தில் கொடூர வில்லனாக நடிக்க வேண்டும்!”