Published:Updated:

`` `பொன்மகள் வந்தாள்' படம் என்னுடைய குறும்படத்தின் கரு!'' - பழங்குடி இளைஞர் சொல்வது உண்மையா?

பொன்மகள் வந்தாள்
News
பொன்மகள் வந்தாள்

சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் எடுத்த குறும்படத்தின் கரு என குற்றம் சாட்டுகிறார், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின இளைஞர் ராஜபாண்டியன். அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என விசாரித்தோம்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம், கட்டபனை அருகே உள்ளது வந்தமேடு. ஏலக்காய் தோட்டங்கள் நிறைந்த அப்பகுதியில் வசிக்கும் இளைஞரான ராஜபாண்டியன், சமீபத்தில் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' படம், தன்னுடைய குறும்படத்தின் கரு என்று குற்றம் சாட்டியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“பல ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து கேரளாவுக்கு வந்தது எங்கள் குடும்பம். எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆசை. எப்படியாவது சினிமாவில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து, பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு, ’தீண்டாதே…’ என்ற குறும்படத்தை எடுத்தேன். அதை எடுக்க 80 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. ஏலக்காய் எஸ்டேட்டில், நானும் என் மனைவியும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து வைத்து, அந்தப் பணத்தில் குறும்படத்தை எடுத்தேன்.

தீண்டாதே குறும்பட போஸ்டர்
தீண்டாதே குறும்பட போஸ்டர்

அதை அன்றைய வருடமே, சென்னை வர்த்தக மையத்தில் சினிமா பிரபலங்கள் சிலர் முன்னிலையில் திரையிட்டுக் காட்டினேன். அப்போது, என்னைப் பாராட்டிய பலரும், இப்படத்தின் கரு, முழு நீளப் படமாக எடுக்கக்கூடியதாக உள்ளது. முயற்சியை விடாமல், முழு நீளப் படமாக எடுங்கள் என்றனர். என்னுடைய ஆசையும் அதுவாகத்தான் இருந்தது. ஏனென்றால், குறும்படத்திற்கான கதையாக மட்டுமல்லாமல், பெரிய படமாக எடுப்பதற்கான கதையாகவும் அதை எழுதி வைத்திருந்தேன். இதற்கிடையில், தற்போது வெளியாகியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இரண்டு வருடத்திற்கு முன்னர் நான் எடுத்து வெளியிட்ட படத்தின் கருவை, முழு நீளப் படமாக எடுக்க நினைத்த விஷயத்தை அப்படியே படமாக்கியுள்ளனர்” என்றவரிடம் தொடர்ந்து பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

''அதெப்படி அவ்வளவு உறுதியாக உங்கள் கதையை அவர்கள் எடுத்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டோம். 'தீண்டாதே' குறும்படத்தில் நடிப்பதற்காக, சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் செம்மலர் அன்னம் என்பவரிடம் கதை சொன்னேன். அவரும் நடிப்பதாக உறுதியளித்து, கடைசியில் அவரால் நடிக்க முடியவில்லை. அவரிடம் நான் குறும்படத்திற்கான கதையையும், முழு நீளப் படத்திற்கான கதையையும் சொன்னேன். எந்த சினிமா தொடர்பும் இல்லாமல் கேரளாவில் உள்ள எனக்கு, சினிமா துணை நடிகையாக அறிமுகமான காரணத்தால், முழுக் கதையையும் அவரிடம் சொல்லி, அவரது கருத்தைப் பெற்றேன். அவரும் கதை சூப்பரா இருக்கு என்றார். நான் என்ன கதாபாத்திரத்தில் அவரை நடிக்கவைக்க திட்டமிட்டு அவரிடம் கதை சொன்னேனோ, அதே கதாபாத்திரத்தில் 'பொன்மகள் வந்தாள்' படத்தில் அவர் நடித்துள்ளார். அவரிடம் போனில் முறையிட்டேன்.

ராஜபாண்டியன்
ராஜபாண்டியன்

ஆனால் அவரோ, 'எனக்கு எதுவும் தெரியாது. என் பெயரைக் கெடுக்காதே' என்று சொல்லிவிட்டார். பின்னர், தேனி எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக, சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு கடிதம் எழுதியிருக்கிறோம். எங்கோ ஒரு மலையில், ஏலக்காய் எஸ்டேட்டில் வேலை செய்யும் பழங்குடியின இளைஞன் இவன், இவனால் வெளியே எதுவும் சொல்லமுடியாது என்று நினைத்திருக்கலாம். நான் பணமோ, அங்கீகாரமோ எதையும் எதிர்பார்க்கவில்லை. இப்படத்தின் கரு என்னுடையது. அதனை ஒப்புக்கொண்டால் போதும். இன்னொரு முக்கியமான விஷயம். என்னுடைய 'தீண்டாதே' குறும்படம் யூடியூபில் உள்ளது. அதையும், பொன்மகள் வந்தாள் படத்தையும் பாருங்கள். முடிவை மக்களே சொல்லட்டும்!” என்றார்.

இதுதொடர்பாக ராஜபாண்டியன் குற்றம் சொல்லும் நடிகை செம்மலர் அன்னத்திடம் பேசினோம். ''ராஜபாண்டியன் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் பேசியதாகச் சொல்வது அப்பட்டமான பொய். இப்படி ஒருவர் குற்றம் சொல்லியிருக்கிறார் என்றதும் என் கணவரிடம் இவர் யார் எனத் தெரியுமா என விசாரித்தேன். அப்போது அவர், இந்த ராஜபாண்டியன் என்பவர் என்னை நடிக்கவைக்க கேட்டதாகச் சொன்னார். ராஜபாண்டியன் நடிக்கக் கேட்டபோது எனக்கு குழந்தை பிறந்து ஏழு மாதங்களே ஆகியிருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகச் சொன்னார். என்னிடம் முழுக் கதையையும் சொன்னதாகச் சொல்வதெல்லாம் சுத்தப் பொய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது ஃபேஸ்புக் மெசஞ்ஜரில் பார்க்கும்போதுதான் அவர் அனுப்பியிருக்கும் மெசேஜையும் பார்த்தேன். அதன் ஸ்கிரீன்ஷாட்டை உங்களுக்கு அனுப்புகிறேன். தன்னை குறும்பட இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, 'அம்மா பொண்ணு பாசப்போராட்டம், நீங்கள் வீரப்பெண்மணியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்' என்று ஒரு லைனைத்தான் அனுப்பியிருக்கிறார். இன்னொரு விஷயம் அவர் அனுப்பியிருக்கும் தேதியைப் பாருங்கள். செப்டம்பர் 27, 2018. எனக்கு தெரிஞ்சு 'பொன்மகள் வந்தாள்' கதையை ஜூலை மாதமே ரெஜிஸ்டர் செய்துவிட்டார்கள். படத்தில் நான் ஒப்பந்தமாகும்போது எனக்கு என்ன கதை என்றெல்லாம் தெரியாது. 2 ரோலில் நடிக்கணும். அதுல ஒரு ரோல் 15 வருஷம் கழிச்சு நடக்குற மாதிரியான கேரெக்டர் என்றுதான் எனக்கு சொல்லியிருந்தார்கள். படத்தோட இயக்குநரையே நான் ஷூட்டிங் ஸ்பாட்லதான் பாத்தேன். ராஜபாண்டியன் என்பவர் என் பெயரை முழுக்க முழுக்க தவறாகப் பயன்படுத்துகிறார்'' என்றார் செம்மலர்.

Semmalar
Semmalar

'பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் தரப்பில் சிலரிடம் பேசினோம். ''2018 மார்ச்சில் கதை சொல்லி, ஜூன் மாதம் கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டார்கள். ராஜபாண்டியனின் 'தீண்டாதே' குறும்படத்தையும் பார்த்தோம். குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் என்கிற லைனைத்தாண்டி 'பொன்மகள் வந்தாள்' படத்துக்கும், இந்தக் குறும்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை" என்றனர்.