Published:Updated:

``விஷாலுக்கு மட்டுமே 12 கோடி இல்லை... பின்னால் ஒருவர் இருக்கிறார்!'' - கேயார்

கேயார்

̀̀``கமலுக்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எல்லோரும் இப்போது போட்டிபோட்டுக்கொண்டு சூர்யாவை ஆதரிக்கிறார்கள்.''

``விஷாலுக்கு மட்டுமே 12 கோடி இல்லை... பின்னால் ஒருவர் இருக்கிறார்!'' - கேயார்

̀̀``கமலுக்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எல்லோரும் இப்போது போட்டிபோட்டுக்கொண்டு சூர்யாவை ஆதரிக்கிறார்கள்.''

Published:Updated:
கேயார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மூத்த தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி, கமல் என பெரும் நடிகர்களின் நண்பர் என சினிமா வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்றவர், கேயார். ஓ.டி.டி பிரச்னைகள் தொடங்கி தயாரிப்பாளர் சங்கப் பிரச்னைகள் வரை இவரிடம் பல விஷயங்களைப் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஓ.டி.டி தான் இப்போது தமிழ் சினிமாவில் டாப்பிக்கல் செய்தி. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்தென்ன?''

``சினிமாவில் எது நடந்தாலும் அது நல்லதுக்குதான் என எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனோ வைரஸ் பிரச்னை முடிய எப்படியும் நான்கு மாதத்துக்கு மேல் ஆகிவிடும். `நாங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படத்தை வைத்துக்கொண்டு நீண்டநாள் காத்திருக்க முடியாது' என்று `பொன்மகள் வந்தாள்' தரப்பு சொல்வதும் நியாயம். `நாங்கள் பல கோடிகள் செலவு செய்து தியேட்டர்களைக் கட்டிவைத்திருக்கிறோம். எங்களுக்குத் தராமல் டிஜிட்டலுக்குத் தருவது தவறு' என்று திரையரங்க உரிமையாளர்கள் சொல்வதும் நியாயம். சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு சம்பவங்கள் நடந்து வந்துகொண்டேதான் இருக்கின்றன. டி.வி சேனலுக்கு விற்கப்படும் புதுப்படங்களை 100 நாள்கள் முடிந்த பிறகே ஒளிபரப்ப வேண்டும் என்று முதலில் நிபந்தனை போட்டார்கள். காலப்போக்கில் அது காலாவதியாகி, இப்போது ஒரு மாதம் கழித்தே ஒளிபரப்பலாம் என ஒப்புக்கொண்டார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் புதுப்படங்கள் போடக்கூடாது என்று கட்டளை போட்டனர். அதுவும் காலப்போக்கில் உடைந்துபோய்விட்டது. ஒரு காலத்தில், தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் 100-வது நாள் விழாவைக் கொண்டாடின. இப்போது அப்படியில்லை. ஒரு புதுப்படம் தியேட்டரில் ரிலீஸானால், அதன் வாழ்நாள் மூன்று நாள்கள் மட்டுமே. அதனால் மாற்றங்களை யாரும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சூர்யாவுக்கு 30 தயாரிப்பாளர்கள் மட்டும் ஆதரவு தெரிவிப்பது ஏன்?''

``தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் வரப்போகிறது. அதனால் தயாரிப்பாளர்கள் மூன்று அணியாகப் பிரிந்து போட்டியிடுகிறார்கள். குறிப்பிட்ட அணியில் இருப்பவர்கள் மட்டும் சூர்யாவை ஆதரித்து கையெழுத்துப்போட்டிருக்கிறார்கள். நான் எந்த அணியிலும் போட்டியிடவில்லை.''

விஜய் நடித்த `மாஸ்டர்' படத்தின் சாட்டிலைட் உரிமையை 20 கோடி கொடுத்து சன் டி.வி வாங்கிவிட்டது. அடுத்து, `மாஸ்டர்' படத்தின் ஓவர்சீஸ் உரிமையை 30 கோடிக்கு விற்றுவிட்டனர்.
கேயார்
ஜோதிகா
ஜோதிகா
பொன்மகள் வந்தாள்

`` `விஸ்வரூபம்' படத்தின்போதும் இப்படி ஓர் பிரச்னை எழுந்தது. ஆனால், அப்போது எல்லோருமே ஒட்டுமொத்தமாக கமல்ஹாசனை எதிர்த்தார்களே?''

``ஆமாம். அந்தப் படத்துக்கு அரசாங்கம் முதல் தியேட்டர்கள் வரை எல்லோரும் பிரச்னை கொடுத்தார்கள். அப்போது, `எனக்கு தியேட்டர்களே வேண்டாம். நான் டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்போகிறேன்' என்று கமல் அறிவித்ததுமே சினிமாவின் அனைத்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்தச் சூழலில் நான் ஒருவன் மட்டும்தான் `இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. யாராலும் தடுக்க முடியாது. ஒரு காலத்தில் உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவை எல்லோரும் கல்லால் அடித்தார்கள். பிற்காலத்தில் அதுதான் உண்மை என்று நிரூபணமானது' என்று கமலுக்கு ஆதரவாகப் பேசினேன். கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எல்லோரும் இப்போது போட்டிபோட்டுக்கொண்டு சூர்யாவை ஆதரிக்கிறார்கள்.''

``தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவராகச் சொல்லுங்கள்... இந்தப் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?''

``சினிமாவில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது நடக்கவே நடக்காது, இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று யாராலும் எதுவும் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், தியேட்டர் அமைப்புகள் என இரண்டு தரப்புமே சுயநலமாக யோசிக்காமல், சினிமாவின் எதிர்காலம் கருதி சிந்தித்துப் பேசி முடிவெடுக்க வேண்டும்.''

Vijay
Vijay

``பெரிய நடிகர்களின் படங்களும் ஓ.டி.டி-க்கு வருமா?''

``எனக்குத் தெரிந்து, முன்னணி நடிகர்களின் படங்களையும் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஓ.டி.டி நிறுவனங்கள் இறங்கி இருக்கின்றன. இந்தியில் அக்‌ஷய்குமார் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அதாவது, அவருடைய படம் ரிலீஸான முதல் மூன்று நாளிலேயே 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துவிடும். தற்போது, அக்‌ஷய் நடிப்பில் நம்முடைய ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் `காஞ்சனா' படத்தின் ரீமேக்கை ஓ.டி.டி உரிமையை 200- கோடி ரூபாய் வரை வாங்க பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது. விஜய் நடித்த `மாஸ்டர்' படத்தின் சாட்டிலைட் உரிமையை 20 கோடி கொடுத்து சன் டி.வி வாங்கிவிட்டது. அடுத்து, `மாஸ்டர்' படத்தின் ஓவர்சீஸ் உரிமையை 30 கோடிக்கு விற்று விட்டனர். சூர்யா நிறுவனம் தயாரித்து, ஜோதிகா நடித்துள்ள `பொன்மகள் வந்தாள்' படத்தின் டி.வி உரிமையை இரண்டரை கோடி கொடுத்து விஜய் டி.வி வாங்கியிருக்கிறது. பல டீலிங்குகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.''

vishal
vishal

``தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிலர் ஊழல் செய்துவிட்டார்கள், பணம் கையாடல் நடந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறீர்களே... எப்படி?''

``முதன்முதலாக நானும், கே.ஆர்.ஜி-யும் சேர்ந்துதான் `தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நல்வாழ்வு அறக்கட்டளை' என்றொரு அமைப்பை ஏற்படுத்தினோம். கடந்த காலத்தில் விஷால் அணி ஜெயித்து, சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு பொருளாளராகப் பதவி ஏற்றுக்கொண்டார். பிரபு தயாரிப்பாளர் என்கிற தனிப்பட்ட முறையில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், அது அவரது உரிமை. ஆனால், சங்கத்தின் பொருளாளர் பதவியைத் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தியது தவறு. எஸ்.ஆர்.பிரபு பொருளாளர் பதவியில் இருந்துகொண்டு சங்கத்துக்கு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல், சொந்த சினிமா கம்பெனிக்காக ஓ.டி.டி தளங்களை சுயநலமாகப் பயன்படுத்திக் கொண்டார். கவுன்சில் அறக்கட்டளையில் இருந்த 12 கோடி ரூபாய் எங்கே, விஷால் கொள்ளையடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் பொருளாளர் எஸ்.ஆர். பிரபு கையெழுத்து போடாமல் ஒரு ரூபாய்கூட சங்கத்தில் இருந்து விஷால் எடுக்க முடியாது. அப்படியானால், சங்கத்தில் இருந்த 12 கோடி ரூபாய் பணம் திவாலானது பிரபுவுக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் வரப்போகிறது. அப்போது 12 கோடி ரூபாய் பணம் செலவு செய்யப்பட்டதற்கான விளக்கத்தை எஸ்.ஆர்.பிரபு கொடுக்க வேண்டும்'' என்றார் கேயார்.

``எல்லா கணக்குகளும் முறையாக இருக்கிறது!'' - எஸ்.ஆர்.பிரபு

SR PRABHU
SR PRABHU

கேயாரின் குற்றச்சாட்டு குறித்து எஸ்.ஆர்.பிரவுவிடம் கேட்டோம். ``தயாரிப்பாளர் சங்கப் பணத்தில் நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் முறையான கணக்கு இருக்கிறது. சங்கத்தில் இப்போது தனி அதிகாரிதான் இருக்கிறார். அவருக்கு கடிதம் எழுதிக்கேட்டால் கணக்குகளை காட்டப்போகிறார். யார் வேண்டுமானாலும் போய் கணக்குகளை சரிபார்த்துக்கொள்ளலாம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism