Published:Updated:

வெயிட்லாஸ்... அம்மா... அரசியல்... புடவை சென்டிமென்ட்... அண்ணாத்த...

குஷ்பூ
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பூ

மாணவர்களின் படபட கேள்விகள்... குஷ்பூவின் கலகல பதில்கள்!

வெயிட்லாஸ்... அம்மா... அரசியல்... புடவை சென்டிமென்ட்... அண்ணாத்த...

மாணவர்களின் படபட கேள்விகள்... குஷ்பூவின் கலகல பதில்கள்!

Published:Updated:
குஷ்பூ
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பூ

‘‘ஒவ்வொரு நாளும் ஸ்ட்ரெஸ், அசதினு படுத்திதான் எடுக்கும். ஆனா, வேலைகளை முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் என் பொண்ணுங் களைப் பார்த்ததும் இந்த ஸ்ட்ரெஸ், அசதியெல்லாம் சட்டுனு மறைஞ்சுடும்’’ - குஷ்பூ.

இவர், பேசிக் கொண்டிருப்பதைக்கேட்டால், நம் எல்லோருக்குமே ஸ்ட்ரெஸ், அசதி எல்லா மும் நிச்சயமாகப் பறந்துவிடும். எப்போதுமே பட்பட் பட்டாசாக சிரித்தபடியே வெடித்துப் பேசும் அனுபவ ஆளுமையாயிற்றே குஷ்பூ. அதிலும், அன்றைய தினம் கத்துக்குட்டி பத்திரிகையாளர்களாக மாணவச் செல்வங்கள் ஏழு பேர் கேள்விகளை வீச, கூடுதல் உற்சாகம் குஷ்பூவுக்கு.

2021-22-ம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக் கான கூட்டுப்பயிற்சி முகாம் சென்னையில் நவம்பர் 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். தலைமைச் செயலகம், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம், மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம், அறப்போர் இயக்க அலுவலகம், சின்னத்திரை படப்பிடிப்புத் தளம் மற்றும் பிராட்வே நடைபாதைவாசிகளுடன் உரை யாடல் என ஆறு குழுக்கள் நேரடி விசிட் செல்ல, மற்றொரு குழு... நடிகையும் அரசியல் வாதியுமான குஷ்பூவை நேர்காணல் செய்தனர்.

சொன்ன நேரத்துக்கு சரியாக சென்னை, அடையாறு, காந்தி நகரில் இருக்கும் ஜெமினி ஹவுஸுக்கு வந்திறங்கினார் குஷ்பூ. மாணவ நிருபர்களைப் பார்த்ததும் அவ்வளவு உற்சாகம் அவர் முகத்தில். எந்த ஊர், என்ன படிக்கிறீர்கள் என ஒவ்வொருவரையும் தனித் தனியாக அக்கறையுடன் விசாரித்த பிறகு, கேள்விகளை எதிர்கொள்ள தயாரானார்.

வெயிட்லாஸ்... அம்மா... அரசியல்... புடவை சென்டிமென்ட்... அண்ணாத்த...
மாணவர்கள் ர.பரதவர்ஷினி, க.ஜெயசூர்யா, செ.சுப, சுஸ்மிதா.கு.பா, மௌனிஸ்வரன், சண்முகப் பிரியா செல்வராஜ், கீர்த்திகா.ரா, நா.நிவேதா ஆகியோர் வீசிய கலகல கேள்வி களுக்கு, குஷ்பூ அளித்த ரகளையான பதில்கள் இங்கே...

``திடீர்னு ஸ்லிம் ஆகியிருக்கீங்க, மறுபடியும் சினிமாவில் பிசியாகுற ஐடியா இருக்கா?''

``அப்படி எந்த ஐடியாவும் இல்லை. என் பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்லா வெயிட் குறைச்சுருக்காங்க. போலீஸா நடிக்கிறதால என் வீட்டுக்காரரும் ஸ்லிம் ஆகியிருக்காரு. பொதுவாவே என்னோட ஒப்பிடும்போது அவங்க மூணுபேரும் நல்ல உயரம். ஃபேமிலியா ஒண்ணா ஒரு போட்டோல நிக்கும்போது, நான் மட்டும் தனியா தெரிவேன். வெயிட்டை குறைச்சா அப்படித் தெரியாதுன்னு தோணுச்சு... குறைச்சிட்டேன்.”

``இந்த வெயிட்லாஸ் எப்படி சாத்தியமாச்சு... உங்களுடைய ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் என்ன?”

``தினமும் காலையில வொர்க் அவுட் ட்ரெய்னர் வருவார். ஒருமணி நேரம் வொர்க் அவுட் பண்ணுவேன். ட்ரெய்னர் வராத நாள்ல யோகா, ஈவ்னிங் 15 நிமிஷம் வாக்கிங் பண்ணுவேன். டயட்டைப் பொறுத்த வரைக்கும் சாப்பாட்டு அளவைக் குறைச்சுட் டேன். என்னோட பெரிய வீக்னஸ் பிரியாணி. இப்போ ஒரு தட்டு பிரியாணிக்கு பதிலா அரை கரண்டி பிரியாணி. ஒரு பவுல் ஐஸ்க்ரீமுக்கு பதில் ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம். ஜூஸுக்கு பதில் பழங்களை அப்படியே சாப்பிடுறேன். எத்தனை கலோரி எடுத்துக் கிறோம்னு தெரிஞ்சு சாப்பிட்டீங்கன்னா வெயிட்லாஸ் பண்றது ஈஸிதான்.”

``பரபரப்பான அரசியல்வாதி, பிரபலமான நடிகை, பாசமான அம்மா இந்த மூணுல எந்த ரோல் உங்களுக்குப் பிடிக்கும், ஏன்?’’

``இந்த உலகத்துல அம்மாங்கிற உறவுக்கு ஈடு எதுவும் இல்ல. என் அம்மாவுக்கு 77 வயசு... என்கூடதான் இருக்காங்க. நீங்க சொன்ன அத்தனை ரோல்களையும் நான் பண்ணாலும், தினமும் காலைல என் அம்மாவுக்கு டீ போட்டு எழுப்புறது என்னோட வேலை. அவங்களை `அம்மீ'ன்னு (அப்படித்தான் உச்சரித்தார்) கூப்பிடும்போது கிடைக்கிற சந்தோஷமே தனி. அதேபோல என் மகள்கள் என்னை அம்மான்னு கூப்பிடும்போது வர்ற சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அம்மா ரோல்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது”

``உங்க சோஷியல் மீடியா பக்கத்தில் நீங்க செல்லப் பிராணிகளோடு இருக்கிற போட்டோக்களை அதிகமா பார்க்கிறோம். அது பத்தி சொல்ல முடியுமா?”

``எங்க எல்லாருக்குமே பெட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். கோயம்புத்தூர்ல சுந்தர் சார் வீட்லயும் பெட்ஸ் இருக்கும். ஆனா, அவர் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுவார். ஏன்னா, சின்ன வயசுலயே வீட்டு நாய் அவரைக் கடிச்சிருக்கு. நானும் என் பொண்ணுங்களும் பெட்ஸ்கூட ரொம்ப க்ளோஸா இருப்போம். எங்க வீட்டுல நிலா, ஸ்னூப்பி, லியோ, குல்ஃபின்னு நாலு நாய்க்குட்டிகள் இருக்கு. அவங்களும் எங்க குடும்ப உறுப்பினர்கள்தான்.”

``நீண்ட நாள்களுக்குப் பிறகு ரஜினிகூட நடிச்சிருக் கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது?”

``கிட்டத்தட்ட 28 வருஷங்களுக்கு அப்புறம் ரஜினி சார்கூட வொர்க் பண்ணியிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. லொகேஷன் போகும்போது சின்ன பயமும் தயக்கமும் இருந்துச்சு. முதல்நாள் ரஜினி சார்கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணித்தான் உட்கார்ந்திருந்தேன். அடுத்த நாள் அவரே வந்து, `என்கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா... நீங்கள்லாம் மாறிட்டீங்க’ன்னு சொன்னார். `நீங்க பேசமாட்டீங்களோன்னு நினைச்சு தள்ளி உட்கார்ந்துகிட்டிருந்தேன் சார்’னு சொன்னேன். அப்புறம் சகஜமாகிட் டேன். அவர் பக்கத்துலயே உட்கார்ந்து பழைய கதைகளையெல்லாம் பேசினோம்.”

``ரஜினி உங்ககிட்ட அரசியல் பேசினாரா?”

‘`எல்லாமே பேசினோம். நண்பர்கள் பத்தி, சினிமா பத்தி, இப்போ இருக்கிற சமுதாயத்தைப் பத்தி பேசினோம். அரசியலும் பேசினோம்.”

``சோஷியல் மீடியாக்கள்ல ‘அண்ணாத்த’ திரைப் படத்தை சீரியலோட ஒப்பிட்டு நிறைய மீம்ஸ் வந்தது. அதையெல்லாம் பார்த்தீங்களா?”

``நான் மீம்ஸ் பார்க்கிறதில்லை. ‘அண்ணாத்த’ வெற்றிப் படம், அதற்கான ரிசல்ட் எல்லோருக் கும் தெரியும். ஒரு லேப்டாப், மொபைல்போன் வெச்சுருந்தா யாரு வேணும்னாலும் கருத்து சொல்லிடலாம். ஆனா, கருத்து சொல்றதுபோல படம் எடுக்கறது ஈஸியான விஷயம் கிடையாது. ‘அன்பே சிவம்’ படத்துக்கு என் கணவர் எவ்வளவு மெனக்கெட்டார்னு எனக்குத்தான் தெரியும். ஆனா, அந்தப் படத்துக்கு அங்கீகாரம் கிடைச்சதா? அந்தப் படத்துக்கு அப்புறம் ரெண்டு வருஷம் வீட்டுல சும்மாதானே இருந் தாரு. பிறகு, சொந்த தயாரிப்புல ‘கிரி’ மாதிரி யான கமர்ஷியல் படம் பண்ணினதுக்கு அப்புறம்தானே கம்பேக் கொடுக்க முடிஞ்சது. இன்னிக்கு கேட்டா, இந்தியாவோட மிகச் சிறந்த படங்கள்ல ‘அன்பே சிவமு’ம் ஒண் ணுன்னு சொல்வாங்க. விமர்சனத்துக்கெல் லாம் காதுகொடுத்தா நாங்க இருக்க முடியாது.”

``கணவரோட சேர்ந்து படம் பண்ணுவீங்களா?”

``ஏன்... வாழ்க்கை நல்லாதானே போய்க் கிட்டிருக்கு. வீட்டுலயும் ஒரே முகம், லொகேஷன்லயும் ஒரே முகத்தைப் பார்க்க ணும்னா அவரு பாவம்ல. வேற ஹீரோயின்கூட அவர் ரொமான்ஸ் பண்ற வாய்ப்பை நான் ஏன் கெடுக்கணும்?” (சிரிக்கிறார்)

``உங்க பொண்ணுங்க சினிமாவுக்கு வருவாங்களா?’’

``அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியலை. அவங்க சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்பட்டா கஷ்டப்பட்டு வரட்டும். ஆனா, நான் சினிமா தயாரிச்சு நானே அறிமுகப்படுத்துவேனான்னு கேட்டா நிச்சயமா மாட்டேன். எல்லா வசதிகளோடும் வளர்த்துட்டோம். அடுத்த கட்டதுக்கு வரணும்னா அவங்க போராடணும். மத்தபடி அவங்க சினிமாவுக்கு வர்றதுல எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.”

``உங்களை அதிகமா புடவையிலதான் பார்க்க முடியுது. என்ன காரணம்?’’

``நான் சம்பாதிக்கிறதுல பாதி சேலை களுக்குத்தான் போகும். நான் எங்கே கடைக்குப் போனாலும் புடவைகளைத் தேடுவேன். விலையெல்லாம் பார்த்துதான் வாங்குவேன். சேலை விஷயத்துல நான் ரொம்ப பொஸஸிவ். என்னுடைய சேலைகளை வெளியில யாருக்கும் கொடுக்க மாட்டேன். 15 வருஷங்களுக்கு முன்னே வாங்கின சேலைகளைக்கூட இன்னும் வெச்சிருக்கேன்.”

வெயிட்லாஸ்... அம்மா... அரசியல்... புடவை சென்டிமென்ட்... அண்ணாத்த...

``உங்க ஸ்கின் மற்றும் ஹேர் கேர் பத்தி சொல்லுங்க...’’

``என் பர்சனல் கேருக்கு தேவையான ஃபேஸ் பேக், ஹேர் பேக் எல்லாத்தையும் என் வீட்டு கிச்சன்ல உள்ள பொருள் கள்லேருந்தே தயாரிச்சு பயன்படுத்துறேன். அவ்வளவுதான்.’’

``சினிமா, அரசியல்னு வேற வேற தளங்கள்ல பயணிக்கிறீங்க... எப்படி டைம் மேனேஜ்மென்ட் பண்றீங்க?''

``எவ்வளவு ஸ்ட்ரெஸ், அசதி இருந்தாலும் வீட்டுக்குப் போய் என் பொண்ணுங்களைப் பார்த்த உடனே எல்லாம் பறந்துடும். நேரத்தைக் கையாள்றது எனக்கு ரொம்ப ஈஸியான விஷயம். நான் எப்பவும் பொய் வாக்கு தரமாட்டேன். வர்றேன்னு சொன்னா அந்த நேரத்துக்கு கரெக்ட்டா போயிடுவேன். எங்கிட்ட கேட்காமலேயே என் பெயரைக் கொடுக்குற நிகழ்ச்சிகளுக்கு என்னால போக முடியாது.’’

``உங்க அரசியல் பயணத்தில் குறுகிய காலத்தில் நிறைய மாற்றங்கள் இருந்ததே... ஏன்?”

``எங்கே எனக்கு மரியாதை இல்லையோ அங்கே இருக்க மாட்டேன். அதுதான் என்னுடைய கொள்கை. நான், என்னுடைய திறமையை மட்டும் நம்பிதான் இந்தளவுக்கு வந்திருக்கேன். எங்கே எனக்கு சுயமரியாதை இல்லையோ அங்கிருந்து ஒதுங்கிடுவேன். அதுதான் என்னுடைய அரசியல் மாற்றத் துக்கான காரணம். எதுக்கு தி.மு.க-வுல இருந்து வெளியில வந்தேன், எதுக்கு காங்கிரஸ்லேருந்து வெளியில வந்தேன்னு இதுவரைக்கும் நான் வெளியில சொல்லலை. ஏன்னா அதைப் பேச ஆரம்பிச்சோம்னோ... நல்லா இருக்காது.”

``ஒரு பெண், அரசியல் தெரிஞ்சுக்கிறதும் அரசியலுக்கு வர்றதும் எவ்வளவு முக்கியம்?’’

``ரொம்ப ரொம்ப முக்கியம். புள்ளிவிவரப்படி இந்தியாவுல ஆண்களைவிட பெண்கள்தான் எண்ணிக்கையில அதிகமாக இருக்காங்க. அப்படியிருக்கும்போது ஏன் பெண்கள் முன்னால போகக் கூடாது? அரசியல்ல ஏன் இந்திராகாந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, உமா பாரதின்னு விரல்விட்டு எண்ணுற அளவு பெண்களே இருக்காங்க... இப்போ நிறைய பெண்கள் அரசியலுக்கு வர்றதைப் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. இன்னும் அதிகமான பெண்கள் அரசியலுக்கு வரணும்.”

``அரசியலுக்கு ஏன் வந்தோம்னு என்னிக்காவது நினைச்சிருக்கீங்களா?’’

``என்னிக்கு அப்படித் தோணுதோ அன்னிக்கு அரசியலைவிட்டே விலகிருவேன்.’’