Election bannerElection banner
Published:Updated:

''தனுஷை என் சொந்த புள்ளையா நினைச்சு பாடுனேன்!'' - 'கண்டா வரச்சொல்லுங்க' கிடக்குழி மாரியம்மாள்

கிடக்குழி மாரியம்மாள்
கிடக்குழி மாரியம்மாள்

மாரி செல்வராஜ் இயக்க தனுஷ் நடித்து, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் 'கர்ணன்' படத்தின் ''கண்டா வரச்சொல்லுங்க'' பாடல் நேற்று வெளியானது. படத்தின் அறிமுகப்பாடலான இந்தப்பாடல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாடகர் கிடக்குழி மாரியம்மாளிடம் பேசினேன்.

''எல்லையில்லா மகிழ்ச்சியில இருக்கேன். கிட்டதட்ட அம்பது வருஷம் இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தேன். என்னோட எட்டு வயசுல இருந்து பாடிக்கிட்டு இருக்கேன். நிறைய மேடைகள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கேன். வெளிநாடுகளுக்கும் பாடுறதுக்குப் போயிருக்கேன். இருந்தும், சினிமா வாய்ப்புங்குறது எட்டாக் கனியாவே இருந்துட்டுது. இது எனக்குள்ள பெரிய வருத்தம். என்னோட கலையை வெறுத்து உட்கார்ந்திருந்தேன். அப்பதான் 'கண்டா வரச்சொல்லுங்க' பாட்டு வாய்ப்பு கிடைச்சது. என்னோட இத்தனையாண்டு வருத்தத்தையும் போக்கி, மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கு 'கர்ணன்' பாடல்'' உற்சாகமாகப் பேசுகிறார் மாரியம்மாள்.

''என்னோட ஊர் சிவகங்கை மாவட்டம் கிடக்குழி. சின்ன வயசுல இருந்து பாட்டு என்கூடவே இருந்திருக்கு. பள்ளிக்கூடம் போயிட்டு வர்றப்போ ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து பாடிக்கிட்டே கிடப்பேன். நானே வரிகள் போட்டு பாடுவேன். இதுல என்னோட பெயரையும் சேர்த்துக்குவேன். இப்படி இருந்தப்போ ஜனங்க மத்தியில பாட சாவு வீட்டுலதான் முதல் வாய்ப்பு கிடைச்சது. அப்ப எனக்கு 8 வயசு. துக்கவீட்டுக்கு வந்திருந்த பெரியவங்க எல்லாம் நான் பாடுறதைக் கேட்டுட்டு என்னைப் பாராட்டினாங்க செத்தவங்களைப் புகழ்ந்து பாடுவேன். இதுக்குப் பணம்லாம் வாங்க மாட்டேன். அப்புறம் என்னோட பாட்டு மேடைகள்ல அரங்கேறி போயிட்டு இருந்தது. இப்போ பெரிய பாடகரா எல்லாராலும் கொண்டாடப்படுற அந்தோணிதாசன், மகாலிங்கம், ஆலங்குடி இளையராஜா மற்றும் முத்து சிற்பி எல்லாருமே என்னோட பசங்கதான். நான் வாழ்க்கையில உயரணும்னு காத்துட்டு இருந்தவங்க. என்னோட கணவர்தான் எனக்கு பாட்டுல குரு. அவர் இறந்துட்டார். ஒரு பொண்ணு லெட்சுமி இருக்கா. அவளும் நல்லா பாடுவா. டிவி நிகழ்ச்சில பாடியிருக்கா. ரெண்டு பேரப் பசங்க. மூத்தவன் ஜீவா. நான் சினிமால பாடுனதை வீடியோல பார்த்துட்டு மகிழ்ச்சியில துள்ளி குதிச்சான்.

தனுஷ்
தனுஷ்

மாரி செல்வராஜோட 'பரியேறும் பெருமாள்' ரொம்பப் பிடிச்ச படம். அவரோட தீவிர ரசிகை நான். ஆனா, மாரியோட படத்துலயே பாடுவேன்னு நினைக்கல. ஒருநாள் மாரிக்கிட்ட இருந்து எனக்கு போன் வந்திருக்கு. என்னோட போனை எப்பவும் சின்ன பேரன் சுபாஷ்தான் எடுத்துப் பேசுவான். 'நான் மாரிசெல்வராஜ் பேசுறேன்'னு அவர் சொன்னவுடனே 'ஐயோ, சொல்லுங்க சார்'னு சொல்லிட்டு என்னைத் தேடியிருக்கான். அந்த நேரத்துல நான் வீட்டுல இல்ல. என் பொண்ணுகிட்ட பேசிட்டு வெச்சிட்டார் மாரி தம்பி. அப்புறம் சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடனே பசங்க என்கிட்ட மாரி போன் பண்ணுன விஷயத்தை சொல்ல சந்தோஷமா மாரி தம்பியை கூப்புட்டு பேசினேன். 'அம்மா, என்னோட படத்துல ஒரு பாட்டு பாட முடியுமா'னார். 'சார், என்ன கேட்டுட்டீங்க... இதுக்குத்தானே காத்துக்கிட்டு இருக்கேன்'னு சொல்லிட்டு சென்னைக்கு கிளம்பி வந்துட்டேன். இந்த போன் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் மாரிகிட்ட பேசுனதுலாம் இல்ல. டிவில அவரைப் பார்த்திருக்கேன் அவ்வளவுதான். என்னைப் பத்தி மாரி தம்பி கேள்விப்பட்டு நான் பாடுனா சரியாயிருக்கும்னு நினைச்சு கூப்பிட்டு கொடுத்த வாய்ப்பு இந்த 'கண்டா வரச்சொல்லுங்க'.

சந்தோஷ் நாரயணன் சார் ஸ்டூடியோவுக்கு போனப்போ மனசுல பெரிய ஆசை எதுவுமே வெச்சிக்கமாதான் போனேன். ஏன்னா, இது மாதிரி நிறைய ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு போயிட்டு ஏமாந்து வந்திருக்கேன். சில பாடல்கள் ரெக்கார்ட்டிங் செக்‌ஷன் வரைக்கும் போயிட்டு அப்புறம் ரிலீஸாகாம, இல்லைனா வேற பாடகர் பாடி வந்திருக்கு. இதனால, பெருசா எதுவும் ஆசை வெச்சிக்கல. ஆனா, மியூசிக் டைரக்டர் சந்தோஷ் சார், மாரி தம்பி மேல இருந்த நம்பிக்கையில பாடுனேன். 'ஒரு சுத்த கிராமிய வாய்ஸ் தேடிக்கிட்டு இருந்தோம். உங்க வாய்ஸ் கிடைச்சிருக்கு'னு சந்தோஷ் சார் சொன்னார். ஒரு குழந்தைக்கு சொல்லி குடுக்குற மாதிரியே சொல்லிக் கொடுத்தார். 'அம்மா, நம்ம ஊர்ல பாடுற பாட்டுகளோட ராகம்தான். அதனால, பயப்படாம பாடுங்க'னு மாரி தம்பி சொன்னார். பாடல்களின் வரிகள் உணர்வுப்பூர்வமா இருக்குறதுனால எனக்கு பாடுறப்போ எமோஷன் ஆகிருச்சு. வரிகளை உள்வாங்கிட்டு உணர்வுப்பூர்வமா பாடுனேன். வாழ்க்கைல சந்தோஷக் கலை இழந்து இருந்த காலத்துல 'கண்டா வரச்சொல்லுங்க' பாட்டு எனக்குத் திரும்பவும் உற்சாகம் கொடுத்திருக்கு.

பாட்டு ரெக்கார்டிங் போயிட்டு இருந்தப்போ சந்தோஷ் சாருக்கு தனுஷ் சார் போன் பண்ணியிருக்கார். அப்போ நான் பாடிட்டு இருந்ததை கேட்டு இருக்கார். உடனே, இங்கிலீஷ்ல பயங்கரமா தனுஷ் சார் ஏதோ சொன்னார். எனக்கு என்ன சொல்றார்னு தெரியல. பாட்டு ரெக்கார்டிங் முடிச்சவுடனே ' அம்மா நல்லா பாடியிருக்காங்க, எந்த ஊருங்க'னு தனுஷ் சார் விசாரிச்சார்னு சந்தோஷ் தம்பி என்கிட்ட சொன்னார். அதைக் கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. இன்னும் தனுஷை நேர்ல பார்க்கல. என்னோட புள்ளை வயசு தனுஷுக்கு. என்னோட சொந்த பிள்ளைக்கு பாடுனதா நினைச்சிட்டுத்தான் பாடுனேன். இந்தப் பாட்டுக்காக மாரி தம்பிக்கும், சந்தோஷ் நாரயணன் சாருக்கும் பெரிய நன்றிகடன் பட்டிருக்கேன். இதுவரைக்கும் நான் பட்ட கஷ்டத்துக்கு விடியல் வந்திருக்குனு நினைக்குறேன்'' எனக் கலங்கினார் பாடகி கிடக்குழி மாரியம்மாள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு