Election bannerElection banner
Published:Updated:

`19 வருட குடும்ப வாழ்க்கை, உதயநிதியின் பர்சனல்ஸ், பசங்களோட அப்டேட்!’ - கிருத்திகா உதயநிதி ஷேரிங்ஸ்

கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி

மிக அரிதாகவே பேட்டியளிக்கும் கிருத்திகா, சினிமா பயணம் முதல் பர்சனல் விஷயங்கள் வரை கலகலப்புடன் பகிர்ந்துகொண்டார்.

கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் மருமகளான கிருத்திகா, தமிழ் சினிமா பெண் இயக்குநர்களில் ஒருவராக கவனம் பெற்றவர். இளம் அரசியல்வாதியும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் காதல் மனைவி. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருப்பவர், புதிய படத்துக்கான வேலைகள், வெப் சீரிஸ், வைரமுத்துவின் புராஜெக்ட் என பிஸியாகியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காகத் தமிழகமே ஆவலுடன் இருக்கும் நிலையில், அந்த முடிவுகளுடன், உதயநிதியின் வெற்றிக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறார். மிக அரிதாகவே பேட்டியளிக்கும் கிருத்திகா, சினிமா பயணம் முதல் பர்சனல் விஷயங்கள் வரை கலகலப்புடன் பகிர்ந்துகொண்டார்.

குடும்பத்தினருடன் கிருத்திகா
குடும்பத்தினருடன் கிருத்திகா

கவிஞர் வைரமுத்துவின் `நாட்படு தேறல்' பாட்டுத் தொடரில் ஒரு பாடலை இயக்கியிருக்கிறார் கிருத்திகா. அந்த அனுபவத்திலிருந்தே பேச்சைத் தொடங்கினார்.

``சினிமா படங்களைவிடவும், தனி ஆல்பங்களை இயக்கவே அதிகம் ஆசைப்படுவேன். மதன் கார்க்கி என்னோட நண்பர். அவர் மூலமா, வைரமுத்து சாரின் `நாட்படு தேறல்' புராஜெக்டுல வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது. அந்தப் பாட்டுத் தொடர்ல வரும் 100 பாடல்கள்ல, மதன் கார்க்கியே தேர்ந்தெடுத்து `நாக்கு செவந்தவரே’ங்கிற ஒரு பாடலை எனக்குக் கொடுத்தார். அது எனக்கும் ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. பெண் இசையமைப்பாளர் வாகு மசான், ஃபோக், ராக் மியூசிக் ரெண்டுமே இணைஞ்ச பிரமாதமான இசையை உருவாக்கி, பாடியிருக்காங்க. அவங்களோடு சிலர் சேர்ந்து நடிச்சிருக்கும் இந்த ஆல்பத்தை, ரெண்டு நாள்ல போன்லயே ஷூட் பண்ணி முடிச்சுட்டோம்" என்றவர், சினிமா விஷயங்கள் குறித்துப் பகிர்ந்தார்.

``கிரியேட்டிவ் துறையிலதான் எனக்கு ஆர்வம். அதனாலதான், விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். அப்போதே ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுத்திருக்கேன். விளம்பரப் படத்துறையிலும், பத்திரிகை துறையிலயும் வேலை செஞ்சேன். புதுசு புதுசா ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும்னு நினைப்பேன். அதனாலதான், இயக்குநராக முடிவெடுத்தேன். எந்த இயக்குநர்கிட்டயும் நான் உதவி இயக்குநரா வேலை செஞ்சதில்ல. மீடியா துறையில வேலை செஞ்ச அனுபவத்துலயே, சினிமா படத்தை எடுத்திட முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு அதிகம் இருந்துச்சு. எனக்கு எல்லா வகையிலும் முதல் ஊக்கம் கணவர் உதய்கிட்ட இருந்தே கிடைக்கும்.

மகனுடன் கிருத்திகா
மகனுடன் கிருத்திகா

அவரே தயாரிக்க முன்வரவே, `வணக்கம் சென்னை' படத்தை நல்லபடியா உருவாக்கினோம். ஓர் உண்மைக் கதையை அடிப்படையா வெச்சு, ரொம்பவே மெனக்கெட்டு `காளி' படத்தை எடுத்தேன். மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும், எனக்கு நிறைவான அனுபவத்தை அந்தப் படம் கொடுத்துச்சு. ஒரு கதையை உருவாக்கி, நடிகர்களைத் தேர்வு செஞ்சு, தயாரிப்பாளர் கிடைச்சு, ஸ்கிரிப்ட் வேலைகளை முடிக்க, தகுந்த கால அவகாசம் தேவைப்படும். அந்த வகையில என்னோட அடுத்த படத்துக்கான வேலைகள் போயிட்டு இருக்கு. அது தொடர்பான அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும். இதுக்கு நடுவுல வெப் சீரிஸ் இயக்கும் வேலைகளையும் ஆரம்பிச்சிருக்கேன்.

ஸ்கூல், காலேஜ் படிச்ச காலத்துல மூத்த இயக்குநர்கள் பலரோட படங்களையும் பார்த்து வியந்திருக்கேன். சமீபகால இயக்குநர்கள்ல வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களைப் பார்த்து ஆச்சர்யப்படுறேன். ஓய்வு நேரத்துல நிறைய படங்கள் பார்ப்பேன். அப்படித்தான் சினிமா துறை அனுபவங்களைக் கத்துக்கிறேன்" என்று சிரிப்பவருக்கு, தனுஷ், விக்ரமை வைத்துப் படம் எடுப்பது பெரிய கனவாம்.

குடும்பத்தினருடன் கிருத்திகா
குடும்பத்தினருடன் கிருத்திகா

உரையாடல் குடும்ப விஷயங்கள் குறித்து திசைமாறியது. உதயநிதியின் சினிமா மற்றும் அரசியல் பயணம் பற்றிப் பேசும் கிருத்திகா, ``நானும் உதய்யும் குளோஸ் ஃபிரெண்ட்ஸ். ஒருத்தர் வளர்ச்சியில இன்னொருத்தர் ரொம்பவே அக்கறையா இருப்போம். அவர் ரொம்பவே அமைதியான டைப். டான்ஸ் ஆடுறது, ரொமான்ஸ் பண்றதெல்லாம் அவருக்கு வராதுனு நினைச்சுட்டிருந்தேன். ஆனா, `ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல நல்லாவே நடிச்சிருந்தார்.

`நீ எப்படிப்பா இப்படியெல்லாம் நடிச்சு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கே'ன்னு அவர்கிட்ட சிரிச்சுகிட்டே கேட்டேன். `எனக்கே தெரியல'ன்னு அவரும் சிரிச்சுகிட்டே சொன்னார். தொடர்ந்து அவரோட படங்களைப் பார்த்துட்டு பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் எல்லாத்தையும் ஷேர் பண்ணுவேன். அவர் நடிப்புல `நிமிர்', `மனிதன்' படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் இயக்கத்துல உதய்யை நடிக்க வைக்கலாமேன்னு பலரும் கேட்டிருக்காங்க. வீட்டையும் சினிமா தொழிலையும் ஒண்ணா சேர்க்க வேண்டாமேன்னு நாங்க நினைக்கிறோம். அதனால, அந்த வாய்ப்பு அமையுறது இப்போதைக்குக் கஷ்டம்தான்.

உதயநிதி தேர்தல் பிரசாரத்தில்
உதயநிதி தேர்தல் பிரசாரத்தில்

நாங்க நாளைக்கு நடக்கிறதைப் பத்தி இன்னைக்கு யோசிக்கவே மாட்டோம். எது நடந்தாலும் அதை பாசிட்டிவ்வா எடுத்துப்போம். அப்படித்தான், தனக்கு அரசியல் பொறுப்பு கிடைச்சதையும் உதய் மகிழ்ச்சியுடன் ஏத்துகிட்டார். தமிழ்நாடு மட்டுமல்லாம இந்திய அளவுல நடக்கிற அரசியல் நிகழ்வுகளையும் தினமும் தெரிஞ்சுப்பார். அந்த அனுபவத்துடன், பிரசாரத்துல ஆன் த ஸ்பாட்ல சில விஷயங்களைச் செஞ்சு கைத்தட்டல் வாங்கிடுறார். அதுக்கு, `செங்கல் எய்ம்ஸ்' விஷயம் நல்ல உதாரணம்.

நடிகரானதுபோலவே, அவர் நேரடி அரசியல்ல ஆக்டிவ்வா இருக்கிறது, பிரசாரத்துல கலக்குறது எல்லாமே எனக்குப் பெரிய ஆச்சர்யம்தான். `நீ யாரு உதய்? உன் கூட 19 வருஷம் குடும்பம் நடத்தியிருக்கேன். நீ இப்படியெல்லாம் பேசி அசத்துவேன்னு நான் தெரிஞ்சுக்காம போயிட்டேனே'ன்னு சமீபத்துல அவர்கிட்ட சிரிச்சுகிட்டே கேட்டேன். `கலைஞரோட பேரனா இருந்துகிட்டு இதுகூட பேசலைன்னா எப்படி? ஒரு ஃப்ளோவுல தானா வருது'ன்னு அவர் சொல்ல, ரெண்டு பேரும் சிரிச்சுட்டோம். என்னைப் பொறுத்தவரை, சினிமாவைவிட அரசியல்லதான் உதய் சிறப்பா செயல்படுறார்.

கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி

அரசியல் குடும்பத்துல இருந்தாலும், எனக்கும் அரசியல் அனுபவத்துக்கும் ரொம்பவே தூரம்தான். எங்க குடும்பத்துல அரசியல் நிகழ்வுகளைக் கடைசியா தெரிஞ்சுக்கிற நபர் நான்தான். அதனால, வீட்டுல அடிக்கடி என்னைக் கிண்டல் செய்வாங்க. ஏதாச்சும் போராட்டத்துல உதய்யை கைது செஞ்சுட்டா அந்த முக்கியமான செய்தியைக்கூட, எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகுதான் தெரிஞ்சுப்பேன். வீட்டுல எல்லோரும் அரசியல் பத்தி தீவிரமா ஆலோசனை செய்துகிட்டு இருக்கும்போது, நான் ஓரமா எதுவுமே பேச முடியாம அமைதியா உட்கார்ந்திருப்பேன்.

கணவருக்காகப் பிரசாரம் செய்யலாம்னு இருந்தேன். ஆனா, தேர்தலுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்பு எனக்கு கொரோனா வந்திடுச்சு. வீட்டுலயே தனிமைப்படுத்திகிட்டேன். இப்போ முழுமையா குணமாகிட்டேன். எங்க குடும்பத்தினர் மட்டுமல்ல, எங்களுடைய வீட்டுப் பணியாளர்களுக்கும் அவங்க குடும்பத்தினருக்கும் ஏதாச்சும் ஒண்ணுன்னாகூட என் மாமனார் அக்கறையுடன் நலம் விசாரிப்பார். சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர். அவர் முதல்வரானா மக்களுக்கு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்வார். இதே குணங்கள் உதயநிதிகிட்டயும் இருக்கு. அவரும் ஜெயிப்பார்னு நம்புறேன். தேர்தல் முடிவுகளைத் தெரிஞ்சுக்க ஆவலோடு காத்திருக்கேன்.

குடும்பத்தினருடன் கிருத்திகா
குடும்பத்தினருடன் கிருத்திகா

- கணவர் மீதான அன்பில் நெகிழ்ந்து பேசும் கிருத்திகா, சைக்கிளிங் பிரியர். நேரம் கிடைக்கும்போது, குடும்பத்தினருடன் ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிளிங் பயணத்தில் ஈடுபடுகிறார்.

``எந்தத் துறையில இருந்தாலும், குடும்பப் பொறுப்புக்குத்தான் முதல் முன்னுரிமை கொடுக்கணும்னு பெரும்பாலான பெண்களுக்கு நிர்ப்பந்தம் இருக்கும். இதுபோன்ற கேள்வியே எனக்கு இதுவரை வந்ததில்ல. நான் வீட்டுல இருக்கும்போதெல்லாம் குழந்தைகள், கணவர், குடும்ப நிர்வாகத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். அதேசமயம், வேலை விஷயமா வெளியூர் ஷூட்டிங் போயிட்டா, என்னோட அம்மாவும் மாமியாரும் குழந்தைகளைப் பார்த்துப்பாங்க. `ஒரு பெண்ணா இதையெல்லாம் நீ செய்யக் கூடாது'ங்கிற பேச்சே, பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் எனக்கு வந்தது இல்ல. அந்த வகையில நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கேன்.

கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி
`எய்ம்ஸ் செங்கல்’ - எங்கிருந்து எடுத்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்? - சுவாரஸ்ய பகிர்வு

பையன் இன்பன் ப்ளஸ் டூ போகப்போறான். எங்க ரெண்டுபேரையும்விட பையன் ரொம்பவே உயரமா வளர்ந்துட்டான். பொண்ணு தன்மயா அஞ்சாவது முடிச்சிருக்கா. எங்க ரெண்டு பேர்ல யார் வீட்டுல இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவோம். எந்த நிர்ப்பந்தங்களையும் திணிக்காம, பிடிச்ச விஷயத்துக்கு ஊக்கம் கொடுத்து குழந்தைகளைச் சுதந்திரமா வளர்க்கிறோம். இப்போதைக்கு அவங்களுக்கு சினிமாவுல ஆர்வம் இல்ல. பையனுக்கு ஸ்போர்ட்ஸ்ல அதிக விருப்பம். எதிர்காலத்துல எந்தத் துறையில செயல்பட நினைச்சாலும், குழந்தைகளுக்கு முழு ஊக்கம் கொடுப்போம்" என்று புன்னகையுடன் முடித்தார் கிருத்திகா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு