பொதுவாக ஹாலிவுட் உள்ளிட்ட அயல் திரைப்படங்கள், ஆக்ஷன், திரில்லர் என்று சில குறிப்பிட்ட ஜானர்களில் அடையாளப் படுத்தப்படும். இது எவ்வகையான திரைப்படம் என்பதை பார்வையாளர்களுக்கு அழுத்தமாக உணர்த்தி விடும் வசதி இது. ஆனால், தமிழ் சினிமாவில் பெரும்பாலும் எல்லாம் கலந்து கட்டிய கதம்ப சாதம்தான். ஜானராக வகைப்படுத்துவது நம் வழக்கமில்லை.
இந்தச் சூழலில் ‘Coming of age’ என்கிற ஜானரில் குறிப்பிட்டு அடையாளப்படுத்தக்கூடிய படமாக உருவான முன்னோடி திரைப்படங்களில் ஒன்று 1981-ல் உருவான `பன்னீர் புஷ்பங்கள்’. இன்னொரு சிறந்த உதாரணமாக 1979-ல் வெளியான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தைச் சொல்லலாம்.
விடலை வயதில் இருக்கும் ஒரு சிறுவன், இளைஞனாக மனமுதிர்ச்சியை நோக்கி நகர்வதே இவ்வகைத் திரைப்படங்களின் மையம். லோக்கல் மொழியில் சொன்னால் மனதளவில் `வயதுக்கு வருதல்’. கண்ணுக்குத் தெரியாத இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது என்றே நம்மில் பலருக்குத் தெரியாது. சுஜாதா எழுதிய `நிலா நிழல்’ என்கிற நாவல் இவ்வகையில் எழுதப்பட்ட சிறந்ததொரு படைப்பு.

விடலைப் பருவத்தில் இனக்கவர்ச்சியால் எழும் காதலை `பிஞ்சிலே பழுத்ததுங்க’ என்று வெறுப்புடனும் இகழ்ச்சியுடனும் அணுகுவதே பெரியவர்களின் வழக்கம். அவர்களும் அந்த வயதைக் கடந்து வந்தவர்கள்தான் என்றாலும் இதை `செக்ஸ் தேடல்’ என்றே கொச்சைப்படுத்தி பார்க்கிறார்கள். ஆனால், விடலைப் பருவத்தில் ஏற்படும் காதலும் காமம் தொடர்பான தேடலும் இயற்கையின் ஒரு பகுதிதான் என்பதை சில திரைப்படங்கள் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன.
‘Adolescence’ எனப்படும் வளரிளம் பருவத்தை `மனதில் புயலும் எரிமலையும் சுழன்றடிக்கும் பருவம்’ என்று உளவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். இந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள்தான், அவர்களின் வருங்கால வாழ்கையையும் ஆளுமையையும் தீர்மானிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, இந்த வயதில் பெரியவர்களின் முறையான, முதிர்ச்சியான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக இந்த அணுகுமுறை பெரும்பாலும் இங்கு நிகழ்வதில்லை.
இந்த விஷயத்தை மிக அழுத்தமாகப் பேசிய முன்னோடி திரைப்படம் `பன்னீர் புஷ்பங்கள்’.
இதில் சந்தானபாரதி, பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர். சந்தானத்தின் மகன். இவருடைய தம்பி ஆர்.எஸ். சிவாஜி. (கமல் நடித்த `அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் ஜனகராஜிடம் ``தெய்வமே.. நீங்க எங்கயோ போயிட்டீங்க” என்று அனத்துபவராக வருபவர் என்று சொன்னால் சட்டென்று நினைவுக்கு வந்து விடும்.)
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மேக்கப்மேனாக விளங்கி புகழ்பெற்ற பீதாம்பரத்தின் மகன் P.வாசு. இவரின் தந்தை பிற்பாடு பல திரைப்படங்களையும் தயாரித்தார்.
இந்த இருவருமே இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளர்களாகப் பணிபுரிந்தவர்கள். `ஓ மஞ்சு’ என்கிற திரைப்படத்தை ஸ்ரீதர் உருவாக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இணைந்தார்கள். `மீனவ நண்பன்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் பணிபுரிந்த பின், மிக விரைவிலேயே ஸ்ரீதரிடமிருந்து விலகி வந்து முதல் திரைப்படத்தை உருவாக்கத் துவங்கினார்கள். அப்போது அவர்களின் வயது ஏறத்தாழ 25-க்குள்தான் இருக்கும். அதுவே `பன்னீர் புஷ்பங்கள்’.

ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக பணிபுரிந்த சமயத்திலேயே `பிற்காலத்தில் நாம் இணைந்து பணிபுரியலாம்’ என்று தீர்மானித்துக் கொண்டார்கள். ஆனால், இந்த இயக்குநர் ஜோடி சில திரைப்படங்களிலேயே பிரிந்தது. பன்னீர் புஷ்பங்கள் (1981), மதுமலர் (1981), மெல்லப் பேசுங்கள் (1983), சாஹசமே ஜீவிதம் (தெலுங்கு – 1984), நீதியின் நிழல் (1985) ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிறகு இந்த ஜோடி பிரிந்தது.
இதில் P.வாசு, அப்பட்டமான வெகுசன திரைப்படங்களை இயக்குபவராக பிறகு மாறினார். ஆனால், சந்தான பாரதியோ வித்தியாசமான கதையம்சங்கள் உள்ள திரைப்படங்களை மட்டும் இயக்குவதில் அக்கறை காட்டினார். இருவருமே பிற்காலத்தில் நடிகராகவும் மாறினார்கள்.
ஓகே.. இப்போது `பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
ஊட்டியில் இருக்கும் ஓர் ஆங்கில பாணி பள்ளியில் படிப்பவன் பிரபு (சுரேஷ்). அங்கு புதிதாக இணையும் மாணவியான உமாவை (சாந்தி கிருஷ்ணா) பார்த்தவுடன் காதலில் விழுகிறான். அவளுடன் பழக முயற்சி செய்கிறான். அவளும் நண்பன் என்கிற தொனியில் இயல்பாக பழகுகிறாள்.
காதல் என்றால் வில்லன் இல்லாமல் எப்படி? பிரபுவின் பார்வையில், அந்த வில்லன் ஆசிரியர் ரூபத்தில் வருகிறார். உமாவின் வீட்டில் உள்ள அவுட்ஹவுஸில் குடியேறுகிறார் புதிதாக வரும் ஆசிரியரான பிரேம். (பிரதாப் போத்தன்). எனவே, பிரபுவை விடவும் ஆசிரியரிடம்தான் அதிக நேரத்தை உமாவால் செலவு செய்ய நேர்கிறது.
காதல் என்றால் பொசசிவ்னஸ்ஸும் உண்டல்லவா? தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருக்கும் ஆசிரியர் மீது எரிச்சலும் வெறுப்பும் கொள்கிறான் பிரபு. ஆனால் விடலை வயது மாணவர்களின் மனோபாவத்தைச் சரியாகப் புரிந்துள்ள அந்த ஆசிரியர், பிரபுவுக்கு சரியான ஆலோசனையைத் தருகிறார். பிரபுவும் தெளிவு அடைகிறான்.

இதற்கிடையில் பிரபுவும் உமாவும் காதல் செய்வதாக ஒரு வதந்தி பள்ளிக்குள் பரவ, அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. பிரபுவை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்கிறார்கள்.
``நீங்க ரெண்டு பேரும் எங்காவது ஓடிப் போயிடுங்க” என்று கூட இருக்கும் நண்பர்கள் சில்லறைத்தனமான ஐடியாவைக் கொடுக்க அதை நம்பி இருவரும் ரயிலில் பயணப்படுகிறார்கள். இவர்களை ஆதரித்து அதன் காரணமாக தன் பணியை ராஜினாமா செய்யும் செய்யும் ஆசிரியர் அதே ரயிலில் பயணிக்கிறார். இவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து புத்திமதி சொல்லி திருப்பி அழைத்து வருவதோடு படம் நிறைகிறது.
`பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் விடலை வயதில் இயற்கையாக ஏற்படும் இனக்கவர்ச்சியை ஆசிரியர்களும் பெற்றோர்களும் முதிர்ச்சியோடு அணுக வேண்டும் என்கிற செய்தியை சொல்வதோடு மட்டும் நின்று விடவில்லை. விடலைப் பருவ காதலை அதிகமாக ரொமாண்டிசைஸ் செய்யாமல் அவர்கள் நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் பற்றி பேசுகிறது.
இது போன்ற காட்சிகளை நீங்கள் நிறைய தமிழ் சினிமாக்களில் கண்டிருக்கலாம். பணக்காரரின் பெண்ணை ஏழை இளைஞன் காதலிப்பான். சாதி காரணமாகவோ வர்க்க பேதம் காரணமாகவே அவர்களின் காதலில் நிறைய இடையூறுகள் வரும். அவர்கள் இருவரும் இணைய வேண்டுமென்று பார்வையாளர்கள் தவிக்கும்படி காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும்.
ஒரு முகூர்த்த நாளில் சூரிய உதயத்தின் பின்னணியில் அவர்கள் ஊரை விட்டு ஓடுவார்கள். ஊரே தீப்பந்தங்களுடன் துரத்தி வரும். என்றாலும் அவர்கள் தப்பிச் செல்வார்கள். `இந்த அமர காதல் வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம் மட்டும் அல்ல, காதலின் கட்டாயமும் கூட’ என்பது போல் பின்னணியில் `தத்துப் பித்தென்று’ எழுதப்பட்ட காவிய வரிகள் இயக்குநரின் குரலில் ஒலிக்கும்.

அப்படி ஓடிப் போன விடலைகளின் காதல் பிறகு என்னவானது.. நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் எப்படியெல்லாம் அவதிப் பட்டார்கள் என்பதைப் பற்றி இயக்குநர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி... எந்தவொரு கவலையும் இருக்காது. காதலர்கள் இணைந்த திருப்தியுடன் கண்ணைத் துடைத்துக் கொண்டு அரங்கத்திலிருந்து கிளம்புவார்கள். (ஆனால் இதே பார்வையாளர்கள்தான் தங்கள் வீட்டில் உருவாகும் காதலை கன்னாபின்னாவென்று எதிர்ப்பார்கள்).
இதே 1981-ம் ஆண்டு வெளியான `அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் செய்தியும் இதுவே. ஆனால், இந்த இடத்தில்தான் `பன்னீர் புஷ்பங்கள்’ யதார்த்தமான குரலை முன்வைக்கிறது.
ஓடிப் போகும் காதலர்களை நோக்கி அவர்களின் ஆசிரியர் கேட்பார். ``நாலு பேர் உன்னை அடிச்சுப் போட்டுட்டு இந்தப் பொண்ணை தூக்கிட்டுப் போனா உன்னால தடுக்க முடியுமா?” என்பார். இளைஞனால் எந்தப் பதிலும் சொல்ல முடியாது.
இந்தத் திரைப்படத்தில் இன்னொரு செய்தியும் உள்ளது. உமாவிடம் பிரபுதான் காதல் உணர்வோடு பழகுவான். ஆனால் உமா ஒரு நண்பனைப் போலத்தான் இவனது உறவை ஏற்றுக் கொள்வாள். ஆனால் அவளது தாயும் சரி, பள்ளியும் சரி, `இவர்கள் காதலர்கள்’ என்கிற அசட்டுத்தனமான புரிதலோடு இவர்களைக் கட்டுப்படுத்த முயலும்போதுதான் அவளுக்கு கோபம் வரும்.
தன்னை வீட்டில் அடைத்து வைத்திருக்கும் தாயின் காவலை மீறி பிரபுவுடன் ஓடிப்போகும் சிந்தனையை அவளுக்குள் உருவாக்குவதே அநாவசியமான அந்தக் கண்டிப்புதான். இந்த வகையில் பெற்றோர்களுக்கும் சரி, ஆசிரியர்களுக்கும் சரி, ஒரு மகத்தான் செய்தியை இந்தத் திரைப்படம் சொல்கிறது எனலாம்.

`பன்னீர் புஷ்பங்கள்' திரைப்பட உருவாக்க பின்னணியில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.
இந்தத் திரைப்படத்தின் கதை சோமசுந்தரேஸ்வருடையது. பிற்பாடு கார்த்திக் நடித்து மகத்தான வெற்றி பெற்ற `அமரன்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர் `ஆர்.ராஜேஸ்வர்’ என்றும் அறியப்பட்டார். கதை எழுதுவதில் மிகவும் திறமைசாலியான ராஜேஸ்வர் சொன்ன ஒரு சிறிய லைன், கங்கை அமரனுக்கு பிடித்துப் போக அதைப் படமாக்கும் பொறுப்பை `பாரதி – வாசு’ என்கிற இளம் இயக்குநர்களிடம் ஒப்படைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை தயாரிப்பதில் முதலில் நிறைய உற்சாகங்களும் பிறகு ஏராளமான பின்னடைவுகளும் ஏற்படுகின்றன. அத்தனையையும் சமாளித்து இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்தவர் கங்கை அமரன்.
எனவே, இந்தத் திரைப்படத்தின் ஹீரோவுக்கு `பிரபு’ என்றும் ஆசிரியர் பாத்திரத்துக்கு `பிரேம்’ என்றும் பெயர் சூட்டி தங்களின் நன்றியை இயக்குநர்கள் தெரிவித்தார்கள். இரண்டுமே கங்கை அமரனின் மகன்களின் பெயர் என்பது நமக்குத் தெரியும்.
நடிகர் சுரேஷ் இந்தத் திரைப்படத்தில்தான் நாயகனாக அறிமுகமானார். இவரின் தந்தையான M.S.கோபிநாத், பல தென்னிந்தியத் திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவர். திரைப்படத்தில் நடிப்பதற்காக பல இடங்களில் முயற்சி செய்து சோர்ந்து போன சுரேஷை, பாரதி –வாசு பார்த்த முதல் கணத்திலேயே ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர்.
ஆனால், இதே நேரத்தில் `அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பும் சுரேஷிற்கு வந்தது. இரண்டில் எதை ஒப்புக்கொள்வது என்று தவித்துப் போனார் சுரேஷ். ஆனால், முதலில் வந்த வாய்ப்பை ஒப்புக்கொள்வதுதான் நேர்மையான விஷயம் என்கிற தந்தையின் அறிவுறுத்தலுக்குப் பின்பு இதில் நடித்தார். படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு பல தமிழ் திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால் `சாக்லேட் பாய்’ பாத்திரம் சலித்துப் போகவே பின்னர் தெலுங்கு திரையுலகிற்குச் சென்று `ஆக்ஷன் ஹீரோவாகவும்’ பிரகாசித்தார்.
இதன் நாயகியான `சாந்தி கிருஷ்ணா’விற்கும் இதுவே முதல் தமிழ்த் திரைப்படம். மலையாளத்தில் அறிமுகமான அதே ஆண்டில் தமிழிலும் அறிமுகமானார்.

ஆனால், புதுமுகங்கள் அறிமுகமாகும் இந்த எளிய திரைப்படத்தில் தன்னுடைய நாயக பிம்பம் இடையூறாக இருக்கலாம் என்று யோசித்து அந்த அழைப்பை மறுத்துவிட்டார் கமல். இந்த இடத்தில் கமலின் தீர்க்கதரிசனத்தை சற்று வியக்கலாம். ஒருவேளை கமல் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தால், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் கவனமும் அதிகமாக அவர் மீதே இருந்திருக்கும். கமலுக்காக நிறைய காட்சிகள் கூட இணைக்கப்பட்டிருக்கலாம். இவை படத்தின் எளிமையை நிச்சயம் பாதித்திருக்கும். இதை கமல் சரியாக யூகித்தது பாராட்டத்தக்கது.
பிரதாப்பின் தமிழ் திரைபிம்பம் என்பது விநோதமானது. சைக்கோத்தனத்தின் சாயல், எக்ஸண்ட்ரிக், கிறுக்குத்தனமான வேடம் என்பதுதான் பிரதாப் குறித்த பெரும்பாலான தமிழகப் பார்வையாளர்களின் மனப்பதிவாக இருக்கிறது. ஆனால் `பன்னீர் புஷ்பங்களில்’ அவர் ஏற்றிருந்தது மிக அருமையான பாத்திரம். ஒரு கண்ணியமான நல்லாசிரியரை நம் கண் முன்னே கொண்டு வந்து அசத்தியிருப்பார்.
``என்னோட கிளாஸ்ல பசங்க பயங்கரமா கலாட்டா செய்யறாங்க.. உங்க கிட்ட மட்டும் எப்படி இவ்வளவு மரியாதை தர்றாங்க?” என்று ஒரு சக ஆசிரியர் கேட்கும்போது அதற்கு பிரதாப் அளிக்கும் விளக்கம் அற்புதமானது. அதைப்போலவே விடலை இளைஞனான பிரபு, தன்னை வெறுத்து ஒதுக்கும்போது ஒரு முதிர்ச்சியான ஆசிரியராக அவனுடைய மனோபாவத்தைப் புரிந்துகொண்டு அரவணைத்துச் செல்லும் காட்சியும் அருமையானது. பிரதாப்பின் கரியரில் `பன்னீர் புஷ்பங்கள்’ ஒரு முக்கியமான, வித்தியாசமான மைல்கல்லாக அமைந்தது.

இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்ததற்காக இசையமைப்பாளரான இளையராஜா சம்பளம் வாங்கிக்கொள்ள மறுத்தார் என்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல். இதற்கொரு பின்னணிக் காரணம் இருக்கிறது.
இயக்குநர் ஸ்ரீதர் `இளமை ஊஞ்சலாடுகிறது’ என்கிற திரைப்படத்தை ஆரம்பித்திருந்த நேரம் அது. தனது ஆஸ்தான இசையமைப்பாளரான எம்.எஸ். விஸ்வநாதனையே இதற்கும் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருந்தார். ஆனால், அப்போது உதவியாளர்களாக இருந்த பாரதி–வாசு, `இளையராஜா என்று புதிதாக வந்திருப்பவரின் இசை புத்துணர்ச்சியாக இருக்கிறது’ என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த யோசனையை முதலில் கோபத்துடன் மறுத்த ஸ்ரீதர், பிறகு மனம் மாறி இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார்.
பாடல் கம்போஸிங்கின் போது ``இந்தப் பசங்க சொன்னதால்தான் உங்களை ஒப்பந்தம் செய்தேன்” என்று ஸ்ரீதர், இளையராஜாவிடம் கூற, அந்தச் சம்பவத்தை மறக்காமல் நினைவு வைத்திருந்த இளையராஜா, இவர்கள் முதன் முதலில் இயக்குநரான திரைப்படத்தில் சம்பளம் வாங்கிக் கொள்வதைப் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. மேலும், படத்தின் உருவாக்கமும் அவருக்குப் பிடித்திருந்தது. இப்படி நல்ல திரைப்படங்களுக்கு சம்பளம் வாங்காமல் ராஜா இசையமைத்தது ஏராளம்.
எண்பதுகளின் காலகட்டத்தையும் இளையராஜாவின் இசையையும் பிரித்தே பார்க்க முடியாது. முன்னணி நடிகர்கள், சிறிய திரைப்படங்கள் என்று எந்தப் பாகுபாடும் காட்டாமல் ஏறத்தாழ அனைத்து திரைப்படங்களுக்கும் தன் இசைத்திறமையைக் கொட்டியிருக்கிறார் ராஜா.
பொதுவாக ஒரு ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும் வெற்றியடைய வைப்பது ஓர் இசையமைப்பாளனுக்கு சவால். ஆனால் ராஜாவின் விஷயமே வேறு. பல ஆல்பங்களை மிக அநாயசமாக ஹிட் ஆக்கியவர் அவர். `பன்னீர் புஷ்பங்கள்’ ஆல்பமும் இதற்கு விதிவிலக்கில்லை.
இந்த ஆல்பத்தின் ஹைலைட்டான பாடல் என்று `ஆனந்த ராகம்..’ பாடலைச் சொல்லலாம். சிம்மேந்திரமத்திமம் ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலின் நோட் மிக விசேஷமானது. ஒரு விமானம் வழக்கமான முறையில் அல்லாமல் ஜிவ்வென்று அப்படியே நேரடியாக டேக் ஆஃப் ஆனால் எப்படியிருக்கும்? இந்தப் பாடல் தரும் அனுபவமும் அப்படித்தான். கீழே இறங்காமல் உயரத்திலேயே பறந்து அப்படியே பல்லவியில் மீண்டும் இணைவதை மிகச் சிறப்பான இசையமைப்பிற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். உமாரமணன் இந்தப் பாடலை அருமையாக பாடியிருந்தார்.
என் இளம்வயதில் எஸ்.பி.பிதான் எனக்கு ஹீரோ. மலேசியா வாசுதேவன் பாடல்கள் வந்தால் உடனே ஸ்கிப் செய்து விடுவேன். `குத்துப்பாடல்களை மட்டுமே பாடுபவர் வாசுதேவன்’ என்பது போன்று ஒரு தவறான மனப்பதிவு என்னிடம் இருந்தது. ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகுதான் மலேசியா வாசுதேவனும் மிக அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதை கண்டு கொண்டேன்.
இதில் வரும் `கோடைக்கால காற்றே’ என்கிற பாடல் அப்படியொன்று. காற்றில் பறக்கும் சிறகு போல அத்தனை மென்மையாகவும் இதமாகவும் பாடியிருப்பார் வாசுதேவன்.
`பூந்தளிர் ஆட’ என்கிற இன்னொரு அருமையான பாடலை எஸ்.பி.பியும் ஜானகியும் இணைந்து பாடியிருப்பார்கள். ஹாஸ்டல் மெஸ்ஸில் நிகழும் கொடுமைகளை ஜாலியாக விவரிக்கும் பாடல் `வெங்காய சாம்பாரும் வேகாத சோறும்’. கதாகாலட்சேப பாணியில் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தத் திரைப்படத்தின் துவக்கத்தில் டைட்டில் கார்டு காண்பிக்கப்படும்போது ஒலிக்கும் பின்னணி இசையே அத்தனை நவீனத்துடன் இருக்கும். இன்றைக்கு கேட்டாலும் புத்துணர்ச்சியை உணரலாம். பின்னணி இசை முதற்கொண்டு பாடல்களில் வரும் துவக்க இசை, இடையிசை என்று அனைத்திலும் ராஜாவின் பிரத்யேக முத்திரை அழுத்தமாக பதிவாகியிருக்கும்.
இனக்கவர்ச்சியின் உந்துதலால் ஓடிப் போகும் இளம் காதலர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் சிரமங்களை அதிகத் திரைப்படங்கள் பேசியதில்லை. அவை காதலை ஒரு சிறந்த கச்சாப்பொருள் போல உபயோகித்து அசட்டுத்தனமாக ரொமாண்டிசைஸ் செய்திருந்தன.
ஆனால், இதிலுள்ள ஆபத்தைப் பற்றி பேசிய முன்னோடி திரைப்படம் `பன்னீர் புஷ்பங்கள்’. ஏறத்தாழ பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விஷயத்தை பாலாஜி சக்திவேல் இயக்கிய `காதல்’ திரைப்படம் பேசியிருந்தது.
`பன்னீர் புஷ்பங்கள்’, இளம் காதலர்களைப் பற்றிய படமென்றாலும் காட்சியமைப்புகளும் சரி, பாடல்களும் சரி, துளி கூட ஆபாசம் இல்லாமல் கண்ணியமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்தச் சமயத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுகூர வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு ஓடிப் போகும் இளம் காதலர்கள் நடைமுறையில் படும் அவஸ்தைகளைப் பற்றி முன்பே ஒரு படம் வந்திருக்கிறது. ஆம். பாரதி –வாசுவின் குருநாதரான ஸ்ரீதர் இயக்கிய `ஓ மஞ்சு’ திரைப்படத்தின் கதையும் இதுதான்.
ஒரு நாள் மதிய நேரத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலில் இந்தத் திரைப்படத்தை தற்செயலாக பார்க்கத் துவங்கினேன். ஆனால், படம் மிக மோசமான முறையில் பாலியல் மலினக் காட்சிகளுடன் மூன்றாம் தர திரைப்படம் போல் இருந்தது. படத்தின் இறுதியில் இயக்குநரின் பெயராக ஸ்ரீதர் என்று வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை பெரிய மேதையா இப்படியொரு படத்தை எடுத்திருந்தார் என்று அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு வேளை பாரதி–வாசு `ஓ மஞ்சு’ திரைப்படத்திலிருந்து ‘பன்னீர் புஷ்பங்களுக்கான’ தூண்டுதலைப் பெற்றிருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது. ஆனால், குருவை மிஞ்சிய சீடர்களாக ஒரு மகத்தான திரைப்படத்தை உருவாக்குவதில் இந்த இளம் இயக்குநர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள் என்று சொல்லலாம்.
கடைசியாக ஒரு பின்னிணைப்புடன் இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
`பன்னீர் புஷ்பங்கள்’ 1979-ல் வெளிவந்த அமெரிக்கத் திரைப்படமான ‘A Little Romance’ என்பதின் நகல் அல்லது அதிலிருந்து தூண்டுதல் பெற்று உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றொரு தகவலை இணையத்தில் கண்டதால் அதை தேடிப் பிடித்துப் பார்த்தேன்.

வளரிளம் பருவத்தில் உள்ள ஓர் அமெரிக்க மாணவிக்கும் பிரெஞ்சு சிறுவனுக்கும் இடையில் உருவாகும் நேசத்தைப் பற்றியது. இந்தத் திரைப்படத்தில் அவர்கள் வீட்டை விட்டு தற்காலிகமாக ஓடிப் போகிறார்கள். வழியில் சில பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் `பன்னீர் புஷ்பங்கள்’ அவ்வாறு ஓடிப்போவதில் உள்ள ஆபத்தை முன்கூட்டியே முதிர்ச்சியுடன் எச்சரிக்கிறது.
தமிழ் சினிமாவின் coming of age ஜானரில் ஒரு முக்கியமான, சிறந்த திரைப்படம் `பன்னீர் புஷ்பங்கள்’. இன்று கூட கண்டு களிக்கும் வகையில் சுவாரஸ்யமும் அழகியலும் கொண்டது.
இந்தப் படத்தை முதலில் பார்த்த அனுபவத்தையும் இது குறித்த உங்களின் விமர்சனத்தையும் கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.