Published:Updated:

``என் அழகே எனக்கு துரதிர்ஷ்டம் ஆகிடும்போலயே?!'' `வெண்ணிற ஆடை' மூர்த்தி காமெடியன் ஆன கதை! #HBDVenniradaiMoorthy

வெண்ணிற ஆடை மூர்த்தி
வெண்ணிற ஆடை மூர்த்தி

புகழ்பெற்ற படத்தின் பெயரைத் தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்ளும் விதமாக வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என இணைத்துக்கொண்டனர். வெண்ணிற ஆடை மூர்த்தி ஜோதிடர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.

90-களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி என்றால், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `மீண்டும் மீண்டும் சிரிப்பு' வாயிலாக எல்லோருடைய வீடுகளிலும் ஆஜராகிவிடுவார்கள், வெண்ணிற ஆடை மூர்த்தியும், அவரின் சகாக்களும்.

வெண்ணிற ஆடை மூர்த்தி
வெண்ணிற ஆடை மூர்த்தி

எல்லோருடைய வீடுகளும் டிபன் வாசனையுடன் இவர்களின் காமெடி சரவெடிகளில் அல்லோகல்லோலப்படும். வெண்ணிற ஆடை மூர்த்தி 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞர்.

தந்தை வழியில் இவரும் வழக்கறிஞருக்குப் படித்தார். ஆனால், ஜோதிடர் ஒருவர் நீங்கள் வக்கீலாக இருந்தாலும் அந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபடமாட்டீர்கள் என்று கூறவே அப்படியே நடந்தது. அதிலிருந்து மூர்த்திக்கு ஜோதிடத்தின் மீது அளவு கடந்த ஆர்வம் ஏற்பட்டு, இவரே மற்றவர்களுக்கு ஜோதிடம் சொல்லும் அளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி
வெண்ணிற ஆடை மூர்த்தி

இயக்குநர் ஸ்ரீதரை வெண்ணிற ஆடை மூர்த்தி சந்தித்ததே சுவாரஸ்யமான ஒன்று.

`சினிமாவில் என்ன ரோல் பண்ணுவ' என ஸ்ரீதர் கேட்டிருக்கிறார். அதற்கு மூர்த்தி, `காமெடி பண்ணுவேன்' எனக் கூறியிருக்கிறார்.

முர்த்தி, `பார்ப்பதற்கு ஹீரோபோல இருக்கியே, உனக்கெதுக்கு காமெடி' எனக் கேட்க,

"ஏன்னா, எனக்குக் காமெடிதான் நல்லா வரும்னு நம்பிக்கையிருக்கு. அழகா இருந்தா அதிர்ஷ்டம்னு சொல்வாங்க. என்னுடைய அழகே எனக்கு துரதிர்ஷ்டமாகி, கிடைக்கிற வாய்ப்பைக் கெடுத்துடும் போலிருக்கே!" என்று கூற, வாய்விட்டுச் சிரித்த ஸ்ரீதர் `வெண்ணிற ஆடை’ படத்தில் அவரை நடிக்க வைத்தார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி நாகேஷுடன்
வெண்ணிற ஆடை மூர்த்தி நாகேஷுடன்

ஶ்ரீதரின் `வெண்ணிற ஆடை' தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான படைப்பு. உளவியல் சார்ந்த இந்தக் கதையில் ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி எனப் பல புதுமுகங்கள் அறிமுகம். புகழ்பெற்ற படத்தின் பெயரைத் தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்ளும் விதமாக வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என இணைத்துக்கொண்டனர்.

இவர் ஜோதிடர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். பல படங்களுக்குத் திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக அறிமுகமான `மாலை சூடவா' படத்துக்கு இவர்தான் கதை, வசனம்.

வெண்ணிற ஆடை மூர்த்தி
வெண்ணிற ஆடை மூர்த்தி

மேடை நாடகங்களில் 600 முறைக்குமேல் நடித்திருக்கிறார். எல்லா முன்னணித் தொலைக்காட்சியிலும் பல சீரியல்களில் நடித்தவர். சில திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்.

இவரின் மனைவி மணிமாலாவும் திரைப்பட நடிகை. திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை நிர்வகித்து வந்தார். நீண்ட நாள்களுக்குப் பின் `அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் இடம்பெற்ற `கடவுள் உள்ளமே' பாடல் காட்சியில் சிஸ்டராகவும், `சிந்து பைரவி'யில் சுஹாசினியின் அம்மாவாகவும் நடித்தவர்தான், மணிமாலா. இவர்களின் மகன் மனோ திருமணமாகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் பணிபுரிகிறார். ஒரு பேரக்குழந்தையும் உண்டு.

சிரிக்க சிந்திக்க
சிரிக்க சிந்திக்க

`கலைமாமணி’, `கலைவாணர் விருது’ போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஃபிலிம் சர்ட்டிஃபிகேஷன் போர்டில் ஆலோசனை உறுப்பினராகவும், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு நிதி உதவி அளிக்கும் போர்டின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், ஃபிலிம் அவார்ட் கமிட்டியின் மாநிலக் குழுவின் ஆலோசனை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு வெண்ணிற ஆடை மூர்த்தி சதாபிஷேக விழாவை எளிமையாகத் தன் மனைவியுடன் கொண்டாடி மகிழ்ந்தார். அவரின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஸ்ரீதர் இயக்குநராக இருந்த காலகட்டத்தில் `சித்ராலயா' என்ற சினிமா பத்திரிகையையும் நடத்திவந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்துகொண்டார். இதனால், `சித்ராலயா' பத்திரிகையின் உதவி ஆசிரியராக மூர்த்தி பணியாற்றினார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி
வெண்ணிற ஆடை மூர்த்தி

அந்த அனுபவம் கைகொடுக்கவே, வெண்ணிற ஆடை மூர்த்தி `இந்து மதம் சில தேன் துளிகள்’ என்ற நூலை எழுதி சிங்கப்பூரில் வெளியிட்டார். இதற்குக் காஞ்சி மகாபெரியவர் அணிந்துரை வழங்கியிருந்தார். இவை தவிர, ஜோக்ஸ் டைரி, `சூப்பர் மார்க்கெட்’, `சிரிக்க சிந்திக்க சில வரிகள்', `பழமொழியும் புதுமொழியும்', `நமக்கு அல்வா கொடுத்தது யாரு', `சும்மாவா சொன்னாங்க' உட்பட 8 நூல்களையும் எழுதி இருக்கிறார்.

இப்போது `குட்லக்' என்ற நூலை எழுதிக்கொண்டிருக்கிறார். அதிர்ஷ்டம் நம்மைத் தேடிவர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலவிதமான கருத்துகளைத் தொகுத்து வழங்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு