Published:Updated:

கோடியில் ஒருவன் - சினிமா விமர்சனம்

விஜய் ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் ஆண்டனி

`இதை எப்படி இவரால் செய்யமுடிகிறது?' என்கிற கேள்வியும் கூடவே தொற்றிக்கொண்டு வருவதால்...

கோடியில் ஒருவன் - சினிமா விமர்சனம்

`இதை எப்படி இவரால் செய்யமுடிகிறது?' என்கிற கேள்வியும் கூடவே தொற்றிக்கொண்டு வருவதால்...

Published:Updated:
விஜய் ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் ஆண்டனி

கோடியில் ஒருவருக்குக்கூட கிடைக்காத வாய்ப்பு தற்செயலாக ஒரு சாமானியனுக்குக் கிடைக்க, அவர் அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதுதான் இந்தப்படம்.

கோம்பையிலிருந்து ஐ.ஏ.எஸ் கனவுகளோடு சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. அரசியலால் சீர்குலைந்த குடும்பம் அவருடையது. அதனால் முடிந்தவரை அரசியல் பரபரப்புகளிலிருந்து தள்ளி நின்று படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பிறருக்கும் சொல்லித் தருகிறார். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் உள்ளூர் அரசியல்வாதிகளோடு மோதும் சூழல் நேர்கிறது. ஒருகட்டத்தில் தன் கனவை இனி தொடரமுடியாது எனத் தெரிந்ததும் முழுநேர அரசியல்வாதியாகிறார். அதனால் அவருக்கு ஏற்படும் நெருக்கடிகளே கதை.

தனக்குப் பொருந்தும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதில் செலுத்தும் கவனத்தை விஜய் ஆண்டனி கொஞ்சம் எமோஷன்களை வெளிக்காட்டுவதிலும் செலுத்தினால் நன்று. சாதாரணக் காட்சிகளில் ஓரளவு தேறிவிடும் அவர் அழுகை, கோபம் போன்றவற்றில் தவறவிடுகிறார்.

கோடியில் ஒருவன் - சினிமா விமர்சனம்

ஆத்மிகாவுக்கு ஹீரோவைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் வழக்கமான ஹீரோயின் வேடம். அம்மாவாக வரும் திவ்யபிரபா மட்டுமே ஒரே ஆறுதல். வில்லனாக நடித்திருக்கும் பூ ராமு தொடங்கி காமெடி வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன் வரை எல்லாருடைய நடிப்பிலும் தடுமாற்றம் தெரிகிறது.

நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை ஓகே. ஆனால் பாடல்கள் ஏமாற்றமே. படத்தின் பெரிய ப்ளஸ், கலை இயக்கம். வட சென்னையின் ஹவுசிங்போர்டு, கதைக்கான யதார்த்தத்தை அள்ளிக் கொடுக்கிறது. நிலப்பரப்பை மையமாகக் கொண்டு நகரும் கதை. அதற்கு முக்கியப் பங்கு வகிக்கவேண்டிய ஒளிப்பதிவோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவர் சுயேச்சை வேட்பாளராக மாறுவதும், வெற்றி பெறுவதும் வரையிலான ஆனந்த கிருஷ்ணனின் திரைக்கதை நம்பகத்தன்மையோடு இருக்கிறது. அதன்பின் நடப்பதெல்லாம் கமர்ஷியல் சினிமாவுக்கேயுண்டான மாயாஜாலங்கள். அதிலும் வார்டு கவுன்சிலர் முதல்வருக்கு நிகரான செல்வாக்கோடு இருப்பது, கவர்னரே அவரைச் சந்தித்து ஆதரவு கேட்பதெல்லாம் லாஜிக் மீறல்களின் உச்சம்.

நிஜத்தில் நேர்மையாக அரசு ஊதியப்படியாகத் தரும் சொற்பக் காசில் வாழும் ஒரு வார்டு கவுன்சிலரின் வாழ்க்கைக்கும் படத்தில் விஜய் ஆண்டனி வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. அதனாலேயே அவர் எதைச் செய்தாலும், `இதை எப்படி இவரால் செய்யமுடிகிறது?' என்கிற கேள்வியும் கூடவே தொற்றிக்கொண்டு வருவதால் இரண்டாம் பாதி முழுக்க கதையோடு ஒன்றமுடியாமல்போகிறது.

கோடியில் ஒருவன் - சினிமா விமர்சனம்

கொஞ்சம் நம்பும்வகையில் கதை சொல்லியிருந்தால் இந்த கவுன்சிலர் இன்னும் அதிக வாக்குகளை வாங்கியிருப்பார்.