Published:Updated:

`12 கோடி ரூபாய் படத்தை ரூ.10,000 கொடுத்து தடை செய்வதா?' - 'கொலையுதிர் காலம்' அப்டேட்ஸ்

எம்.குணா

"இது, அவர்களுடைய டைட்டில் என்றால், கவுன்சிலில் அந்தப் பெயரை ரிஜிஸ்டர் செய்துவைக்காமல், இப்போது திடீரென்று ரிலீஸுக்கு முன்னால் தடை என்று மிரட்டினால் என்ன அர்த்தம்?"

கொலையுதிர் காலம்
கொலையுதிர் காலம்

நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள, 'கொலையுதிர் காலம்' படத்தை இந்த மாதம் ரிலீஸ் செய்வதாக அறிவித்து இருந்தனர். இதனிடையே, 'கொலையுதிர் காலம்' என்ற பெயர் 'தன்னுடைய நாவலின் தலைப்பு' என்று சொல்லி, எழுத்தாளர் சுஜாதாவின் சார்பாக படத்தின் ரிலீஸுக்கு தடைகேட்டு வழக்கு ஒன்று பதிவாகியிருக்கிறது.

நயன்தாரா
நயன்தாரா

இந்தச் சூழ்நிலையில், நயன்தாரா நடித்த படத்தின் தயாரிப்பாளரான மதியழகனிடம் கேட்டோம். ''இப்போது, மும்பைக்கு வந்திருக்கிறேன். 'கொலையுதிர் காலம்' படத்தை வாங்கிவிட்டு சென்னைக்குத் திரும்பி ரிலீஸ் வேலையைப் பார்ப்போம் என்று சந்தோஷமாக இருந்தேன். சென்னையில் இருந்து 'படத்துக்குத் தடை' என பகீர் தகவல் வந்திருக்கிறது. சுஜாதா எழுதிய நாவலின் பெயர், 'கொலையுதிர் காலம்' என்று சொல்லி தடை வாங்கியுள்ளனர்.

இது, அவர்களுடைய டைட்டில் என்றால், கவுன்சிலில் அந்தப் பெயரை ரிஜிஸ்டர் செய்துவைக்காமல், இப்போது திடீரென்று ரிலீஸுக்கு முன்னால் தடை என்று மிரட்டினால் என்ன அர்த்தம்? ஏற்கெனவே யுவன் ஷங்கர் ராஜா, முறைப்படி 'கொலையுதிர் காலம்' தலைப்பைப் பதிவுசெய்து வைத்திருந்தார். அதன்பின், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு இந்த இரண்டு அமைப்பின் மூலமாக முறைப்படி என் பெயருக்கு மாற்றிக்கொடுத்தார்.

கொலையுதிர் காலம்
கொலையுதிர் காலம்

சுஜாதா எழுதிய நாவலை நாங்கள் படமாக்கி இருந்தால், அவர் சார்ந்தவர்களிடம் அனுமதி பெறவேண்டும். நாங்கள் எடுத்திருக்கும் படத்தோட கதைக்கும் சுஜாதா கதைக்கும் துளிகூட சம்பந்தமில்லை. கடந்த இரண்டு வருடமாக இந்தப் பட டைட்டில் உலகத்துக்கே தெரியும். அதுமட்டுமில்லை, 'கொலையுதிர் காலம்' ஆடியோ விழா நடந்தது. அப்போது யாரும் வாய்திறக்கவில்லை.

அந்த நிகழ்ச்சியில் ராதாரவி சார் பேசியது பெரிய சர்ச்சையை உண்டாக்கி, டி.வி சேனல், சோஷியல் மீடியா எனப் பெரும் வைரலை உண்டாக்கியது. அப்போதும் யாரும் எதுவும் பேசவில்லை. இப்போது, ரிலீஸ் தேதி அறிவித்த பிறகு திடீரெனத் தடை வாங்குவது ஏன்? தயாரிப்பாளர் ரிலீஸ் பரபரப்பில் தவிக்கும்போது பணம் கேட்டால் கொடுத்துவிடுவார் என்று திட்டமிட்டுச் செய்கின்றனர். எனக்கு மட்டுமல்ல நிறையத் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற அநியாயச் செயலை அனுபவித்துவருகின்றனர்.

கொலையுதிர் காலம்
கொலையுதிர் காலம்

இதுவரை 12 -கோடி ரூபாய் செலவு செய்து ரிலீஸாக ரிஸ்க் எடுத்த கொண்டிருக்கும்போது, வெறும் 10,000 ரூபாய் செலவுசெய்து தடை வாங்குவதா? தயாரிப்பாளர் பயந்துகொண்டு சில லட்சங்கள் கேட்டால் கொடுத்துவிடுவார் என்று தவறாகத் திட்டமிட்டு, ஒரு கூட்டம் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்? நான் இயல்பாகவே போராட்ட குணம் கொண்டவன், சும்மா விடமாட்டேன். 'கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்தாவது, உண்மையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவேன்'' என்று கொந்தளித்தார் மதியழகன்.