கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

சசிகுமார், அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகுமார், அஜித்

சீயான் விக்ரமை அவரின் மருத்துவர்கள் நன்றாக ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவரோ உடனே, பா.இரஞ்சித்தின் படத்திற்குச் சென்றுவிட்டார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஷெட்யூலை கேரளாவில் செட்கள் அமைத்து எடுக்க உள்ளனர். ஆனால் அங்கே இப்போது மழை பெய்து வருவதால், செட்கள் அமைக்க முடியாமல் படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ளனர். எனவே அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்கிறார்கள்.

சீயான் விக்ரமை அவரின் மருத்துவர்கள் நன்றாக ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவரோ உடனே, பா.இரஞ்சித்தின் படத்திற்குச் சென்றுவிட்டார். அவரை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்கிறாராம் டைரக்டர். கடுமையான சண்டை போட வேண்டிய காட்சிகளுக்கு அதிகமாக டூப் பயன்படுத்துகிறார்கள். க்ளோசப்பில் அவரை சுலபமாகக் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார்கள். இதற்கு விக்ரமை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளனர். அடுத்தடுத்த மாதங்களில் அவர் வழக்கமான பணியை மேற்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர் இரஞ்சித்தின் படத்தை முடித்ததும் சற்று ஓய்வு எடுத்துக்கொள்வார் என்கிறார்கள்.

‘தாரை தப்பட்டை’யில் பட்ட கடன் சுமையிலிருந்து சசிகுமார் கிட்டத்தட்ட மீண்டு விட்டாராம். சுமார் ஆறு வருட கஷ்டங்களுக்குப் பிறகு சசி கடனிலிருந்து வெளியே வந்துவிட்டார். இதற்கு நடுவில் சொந்தப்படம் தயாரிப்பதை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டார். சென்னையில் இருந்த ஆபீஸ் மதுரைக்குப் போய்விட்டது. பெரும்பாலும் அவர் சொந்த வீட்டிலேயே மதுரையில் இருக்கிறார். ஷூட்டிங் இருந்தால் மட்டுமே சென்னைக்கு வந்து ஹோட்டலில் தங்குகிறார். எது எப்படி இருந்தாலும் அவர் ஏழைக்குழந்தைகளுக்காகச் செய்யும் கல்வி உதவியை மட்டும் நிறுத்தவே இல்லை என்று நெகிழ்கிறார்கள் நண்பர்கள்.

அஜித் ‘துணிவு’ படத்தில் நடித்துக் கொடுத்தவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பைக் பயணம் போகிறார். வந்த பிறகுதான் அடுத்த படத்திற்கான கதை கேட்கிறார். இதற்கு முன்னால் கேட்ட சில கதைகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதச் சொல்லியிருக்கிறார். அது சரியாக வருகிறதா என்று பார்த்துவிட்டு, அதற்கான பதிலைச் சொல்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த வரிசையில் அவரை வைத்து முன்பு படம் இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை ஒன்று அவருக்கு மிகவும் பிடித்துப்போய் ஸ்கிரிப்டை இன்னும் செதுக்கச் சொல்லியிருக்கிறாராம். இந்த ரீ-யூனியனை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். தன் உதவியாளர்களை மீண்டும் அழைத்திருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.

கமல், முன்பு இரண்டு வருடம் நடத்திய ‘மய்யம்’ இலக்கிய இதழை மறுபடியும் கொண்டுவரத் திட்டம் போட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடந்துவருகிறதாம். முப்பதாயிரம் இதழ்கள் அச்சிடப்பட்டு தேர்ந்தெடுத்த வாசகர்களுக்கு மட்டும் அனுப்பப்படுமாம். தனியாகக் கடைகளில் கிடைக்க வாய்ப்பே இல்லையாம். சென்ற தடவை மய்யம் வெளியானபோது அனுப்பப்பட்ட இதழ்களின் கணக்கு, பணம் இதுவரை ஆபீஸ் பக்கம் வரவில்லையாம். அதனால் புத்தகத்தை இலவசமாகவே கொடுக்கத் தீர்மானித்து விட்டார்கள். பொங்கலில் மய்யம் புது வரவாக இருக்கும்.

இரண்டெழுத்து நடிகரோடு காதல்- பிரேக்கப்பிற்குப் பின் ஹைதராபாத்தில் செட்டில் ஆன அஞ்சலி, இப்போது மீண்டும் சென்னையில் குடியேறியிருக்கிறார். இந்நிலையில் பழைய காதலை மீண்டும் புதுப்பித்துவிட வேண்டும் என விரும்பிய நடிகரின் மேனேஜர், நடிகையின் பிரேக்கப் பிரிவைச் சரிசெய்துவிட முயன்றிருக்கிறார். ஆனால் இரண்டெழுத்து நடிகரோடு நட்பை முறித்துக்கொண்டது முறித்துக்கொண்டதுதான் என உறுதியாக நிற்கிறார் அஞ்சலி.