Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: `வலிமை' ரிலீஸ் பிளான் இதுதான்; மணிரத்னத்தின் அடுத்த படம்; ஹீரோவாக ஷங்கரின் மகன்?

கோலிவுட் ஸ்பைடர்

இந்த வாரம் கோலிவுட்ல என்ன ஸ்பெஷல்? 'வலிமை' ரிலீஸ் பிளான், மணிரத்னத்தின் அடுத்த படத்திலிருந்து விஜய் vs எஸ்.ஏ.சி பிரச்னை வரை... பரபர அப்டேட்ஸ் இதோ...

கோலிவுட் ஸ்பைடர்: `வலிமை' ரிலீஸ் பிளான் இதுதான்; மணிரத்னத்தின் அடுத்த படம்; ஹீரோவாக ஷங்கரின் மகன்?

இந்த வாரம் கோலிவுட்ல என்ன ஸ்பெஷல்? 'வலிமை' ரிலீஸ் பிளான், மணிரத்னத்தின் அடுத்த படத்திலிருந்து விஜய் vs எஸ்.ஏ.சி பிரச்னை வரை... பரபர அப்டேட்ஸ் இதோ...

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்

* கொரோனாவினால் இரவு நேர ஊரடங்கு விலகிக் கொள்ளப்பட்டாலும், திரையரங்குகளில் இன்னமும் ஐம்பது சதவிகித இருக்கைகள் கட்டுப்பாடு தொடர்கிறது. பிப்ரவரி ஒன்று முதல் ஞாயிறும் ஊரடங்கு இல்லை என்பதால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய அஜித்தின் 'வலிமை', விஷாலின் 'வீரமே வாகை சூடும்' ஆகிய படங்களின் ரிலீஸ் தேதிகள் குறித்த பேச்சுக்கள் கிளம்பி இருக்கின்றன. இதற்கிடையே சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' வருகிற பிப்ரவரி 4ம்தேதி வெளியாகும் என்ற அறிவித்திருந்தார்கள். அது தள்ளிப்போவதால் அந்த தேதியில் விஷால் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருகின்றன. அஜித், சூர்யா படங்களின் வெளியீட்டு தேதியை இன்னும் சில நாள்களில் அறிவிக்க உள்ளனர். அநேகமாக 'வலிமை' பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ வெளியாகலாம் என்கிறார்கள். 'வலிமை' ரிலீஸ் போனிகபூர் கையிலும் இல்லை. அஜித்தின் கையிலும் இல்லை. அது அந்தப் படத்தை வாங்கியிருக்கும் சேனலின் கையில்தான் இருக்கிறது என்கிறார்கள்.

'வலிமை' அஜித்
'வலிமை' அஜித்

* மாலத்தீவுக்குச் சென்று போட்டோஷூட் செய்து வரும் நடிகைகளில் பட்டியலில் மாளவிகா மோகனும் இடம்பிடித்துவிட்டார். சமீபத்தில் மாலத்தீவிற்கு ரிலாக்ஸ் ட்ரிப் அடித்து திரும்பியிருக்கிறார். அங்குள்ள பெரிய பெரிய ரிசார்ட்டுகள் இந்திய நடிகைகளுக்கு இலவச டூர் ஆஃபரை வழங்கி வருகின்றன. தங்கும் இடம், சாப்பாடு போன்ற விஷயங்களை இலவசமாகவே வழங்கி வரும் அவர்களின் ஒரே நிபந்தனை "மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கும் நடிகைகள் தங்கள் ரிசார்ட்டிற்கு வந்து போட்டோஷூட் செய்து அதை இன்ஸ்டாவில் தெறிக்க விடுவதுடன், தங்கள் ரிசார்ட்டின் விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்" என்பதுதான். இதில் தென்னிந்திய நடிகைகள் அளவில்லாத ஆர்வம் காட்டி வருகின்றனர். மாலத்தீவில் இருந்து அழைப்பு வந்தாலே அடுத்த பிளைட்டில் அங்கே லேன்ட் ஆகிவிடுகிறார்கள். மாளவிகாவின் மாலத்தீவு பிகினி படங்களும் இப்போது வைரலாகிவிட்டன. ரஜினியின் 'பேட்ட', 'விஜய்யின் 'மாஸ்டர்' படங்களையடுத்து அவர் தமிழில் கைவசம் வைத்திருக்கும் ஒரே ஒரு படம் தனுஷின் 'மாறன்'. ''வித்தியாசமான ரோல்கள்ல நடிக்கணும், சரியான ரோல்கள் அமையறவரை காத்திருக்கணும்னு நினைக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல இயக்குநர்கள் படம்னா தயங்காம கால்ஷீட் கொடுத்திடுவேன்'' என்கிறார் அவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* சூர்யாவின் 'என்ஜி.கே.', அந்தாலஜி படமான 'பாவக்கதைகள்' எனத் தமிழில் நடித்த சாய் பல்லவி, அதன் பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் போனார். இப்போது நானியுடன் நடித்து வெளியான 'ஷ்யாம் சிங்க ராய்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பினால் மனம் மகிந்திருக்கிறார். அங்கே ராணாவுடன் நடித்த 'விரட்ட பர்வம்' பீரியட் ஃபிலிமையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இப்போது அவரை சிவகார்த்திகேயன் ஜோடியாக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். கமலின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள சிவாவின் படத்தில் சாய் பல்லவிதான் ஜோடி என ஒரு தகவல் பறக்கிறது. இதற்கிடையே தமிழில் அவர் நடித்த 'தியா'வை இந்தியில் ரீமேக் பண்ணும் முயற்சியில் இருந்து வரும் ஏ.எல்.விஜய், அதிலும் சாய் பல்லவியை நடிக்க வைக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். ஆக, அவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் பெருமை விஜய்க்குக் காத்திருக்கு!

பெஸ்ட் செல்லர் | Bestseller
பெஸ்ட் செல்லர் | Bestseller

* இன்று ஸ்ருதிஹாசனின் பிறந்த நாள். அவரது பர்த் டே ஸ்பெஷலாக அமேஸானில் வெளியாகவுள்ள அவரது வெப்சீரிஸான 'பெஸ்ட் செல்லர்' ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளார்கள். அதில் முக்கியமான ரோலில் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ளார். இந்தியில் பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' படத்திலும் சின்ன ரோலில் அவர் நடித்துள்ளாதால் 'சலார்' யூனிட் சார்பிலும் இன்று ஸ்ருதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். ஸ்ருதிக்கு தமிழில் படங்கள் பண்ணுவதைக் காட்டிலும் இந்தியில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. இன்னொரு விஷயம் அவரது முந்தைய தமிழ்ப் படங்கள் சரிவர போகாத நிலையிலும், தமிழில் நடிக்க அவர் ஒன்றரை கோடி சம்பளம் எதிர்பார்க்கிறார் என்றும், 'லாபம்' பட கிளைமேக்ஸ் ஷூட்டிற்கு முன்னரே அவர் படப்பிடிப்பில் இருந்து சொல்லிக்காமல் சென்றதால், ஸ்ருதியை இங்கே நடிக்க வைக்க இயக்குநர்கள் தயங்குகிறார்கள் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு இருக்கிறது.

* இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி 'விருமன்' படத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் என்ற பேச்சு எங்கும் இருக்கிறது. ஷங்கர் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் அனுபவங்களை மகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம். அவரது நடிப்பு பற்றி மட்டும் அங்கே இருக்கிற மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம். இயக்குநர் முதற்கொண்டு ஒரு முறை வந்து ஷூட்டிங் ஸ்பாட்டைப் பார்த்துவிட்டு போகலாமே என்று ஷங்கருக்கு வேண்டுகோள் போனதாம். 'இல்லை. அது உங்கள் தினசரி தயாரிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும்' என மறுத்துவிட்டாராம். இன்னொரு வாரிசும் ஷங்கர் குடும்பத்திலிருந்து வரப்போகிறார். அவர் ஷங்கரின் மகன் அர்ஜித்தான். அவருக்கு நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் விருப்பமாம். எந்த நேரமும் ஷங்கரின் அசிஸ்டெண்டுகள் கொத்திக்கொண்டுப் போக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கரின் குடும்பம்
இயக்குநர் ஷங்கரின் குடும்பம்

* துல்கர் சல்மான் இப்போது தமிழ்ப் படங்கள் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். காரணம், இங்கே கிடைக்கும் சம்பளத்தில் அவர் சந்தோஷமாகி விடுகிறாராம். எந்த இடைஞ்சலும் இல்லாமல், வேறு பந்தாக்கள் இல்லாமல், படப்பிடிப்புக்கு பத்து நிமிஷம் கூட தாமதமாக வராத நிலையில், பக்குவமாக நடந்து கொள்வதில் துல்கரை அவரது யூனிட்காரர்கள் கொண்டாடுகிறார்கள். அவரின் அப்பா ஆசைப்பட்டும் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இடம் பெற முடியவில்லை. ஆனால், தான் அந்த இடத்தைப் பெற முடியும் என நம்புகிறார் துல்கர். ஏஜிஎஸ், ஸ்டுடியோ கிரீன் படங்களில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பது சமீபத்திய செய்தி. அதுபோக, நெடுநாளாக தயாரிப்பை நிறுத்தியிருந்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனமும் தங்களின் அடுத்த புதிய படத்தில் துல்கரை புக் செய்திருக்கிறார்கள்.

* பொன்னியின் செல்வனில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டத்தைச் சேர்த்த மாதிரி மேலும் ஒரு படம் செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா, சிம்பு, அர்ஜுன் தாஸ் என இந்தப் பட்டியல் நீள்கிறதாம். குறுகிய கால தயாரிப்பாக இருக்கும் இந்தப் படத்தைத் தயாரிக்க இரண்டு ஓ.டி.டி தரப்பில் ரெடியாக இருக்கிறார்கள். பொன்னியின் செல்வனின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து போர்க் காட்சிகளுக்கான சிறப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆறு மணி நேரம் ஓடக்கூடிய பொன்னியின் செல்வனை படத்தை முக்கிய குழுவினர் பார்த்துவிட்டார்கள். அனைவர் முகத்திலும் சந்தோஷம் நிழலாடுகிறது. முதல் மூன்று மணி நேரத்தை வைத்து முதல் பாகத்தை ரெடி செய்துவிட்டு, மேற்கண்ட குறுகிய கால தயாரிப்புப் படத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

மணிரத்னம்
மணிரத்னம்

* இயக்குநர் பாலாஜி சக்திவேலின் இரண்டு படங்கள் ரெடியாகி இன்னும் திரையைத் தொடாமல் காத்திருக்கின்றன. இத்தனைக்கும் எல்லாமே அடக்கமான பட்ஜெட் படங்கள்தான். அதனால் இப்போது அவற்றை ஓ.டி.டி யில் வெளியிட முயற்சி செய்கிறார்கள். அதோடு கூட 'காதல் - 2'வை எடுத்துச் செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

* வில்லன், குணசித்திரம் என பல ரோல்களில் ஸ்கோர் செய்பவர் நடிகர் சம்பத். சமீபத்தில் சென்னை வந்த அவரிடம், ''வில்லன் நடிகர்கள்னாலே இயற்கை விவசாய காதலர்களா இருக்காங்க. பிரகாஷ்ராஜ், கிஷோர், பசுபதினு லிஸ்ட் நீளும்... உங்க மறுபக்கம் என்ன?'' எனக் கேட்டால், சிரிக்கிறார். ''நீங்க சொன்ன எல்லோரோட பண்ணைத் தோட்டங்களுக்கும் நேர்ல போய் பார்த்திருக்கேன். மத்தபடி எனக்கு அப்படி ஆர்வம் இல்ல. நான் ஒரு வீட்டுப் பறவை. படப்பிடிப்பு இல்லாத நாள்கள்ல என்னை நீங்க என் வீட்ல பிடிச்சிடலாம். கடந்த எட்டு வருஷமா கன்டன்ட் சேமிக்கற ஒரு நிறுவனம் ஒண்ணு நடத்திட்டு வர்றேன். ஒடிடி, வெப்சீரீஸ்னு இனி புதுப்புது வாய்ப்புகள், தளங்கள் பெருகிட்டு இருக்கு. எதிர்காலத்துல கன்டன்ட்களுக்கு பற்றாக்குறை வர வாய்ப்பிருக்கு. அதை போல, ரூரல் டூரிஸம் ரிசார்ட்டுகள் ஆரம்பிக்கணும்ங்கறது ஒரு கனவு. அந்த கனவு நனவாகுறதுக்கான பிராசஸும் ஒருபுறம் போய்ட்டு இருக்கு" என்கிறார் சம்பத்.

அம்மா ஷோபாவுடன் விஜய்
அம்மா ஷோபாவுடன் விஜய்

* முன்பெல்லாம் வீட்டில் இருந்தால் ஒவ்வொரு வாரமும் அடையாறு போய் அம்மாவைப் பார்த்துவிட்டு பத்து நிமிஷமாவது இருந்து விட்டு வருவார் விஜய். இப்போது அவருக்கும் அப்பா எஸ்.ஏ.சிக்கும் மனத்தாங்கல் ஆன பிறகு கொஞ்சகாலம் அங்கே போகாமல் இருந்தவர் இப்போது அம்மாவை வாராவாரம் வீட்டிற்கு வரவழைத்து பார்க்கிறார். எப்படியும் அப்பாவுக்கும் மகனுக்குமான இடைவெளியை குறைப்பதில் ஆர்வம் காட்டுகிறார் ஷோபா அம்மையார். இதில் இப்போது பேரனும் பேத்தியும் களமிறங்கி, தாத்தாவோடு அப்பா ராசியாகி விட முயற்சி செய்கிறார்கள். விரைவில் ஒரு ஃபேமிலி போட்டோ எதிர்பார்க்கலாம். வெல்கம்!