Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: கமல், உதயநிதியின் அரசியல் இன்னிங்ஸ் பிளான்; நடிகராகிறாரா ரகுவரனின் மகன்?!

கோலிவுட் ஸ்பைடர்

இந்த வாரம் உதயநிதி மற்றும் கமல்ஹாசனின் அரசியல் இன்னிங்ஸ் பிளான், ராஷ்மிகா மந்தனாவின் கோரிக்கை, ரகுவரனின் மகன் சினிமா என்ட்ரி, சத்யராஜ் மகளின் அரசியல் என்ட்ரி எனப் பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் இங்கே...

கோலிவுட் ஸ்பைடர்: கமல், உதயநிதியின் அரசியல் இன்னிங்ஸ் பிளான்; நடிகராகிறாரா ரகுவரனின் மகன்?!

இந்த வாரம் உதயநிதி மற்றும் கமல்ஹாசனின் அரசியல் இன்னிங்ஸ் பிளான், ராஷ்மிகா மந்தனாவின் கோரிக்கை, ரகுவரனின் மகன் சினிமா என்ட்ரி, சத்யராஜ் மகளின் அரசியல் என்ட்ரி எனப் பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் இங்கே...

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்

* 'சூது கவ்வும்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் நலன் குமாரசாமி. அவரது 'காதலும் கடந்துபோகும்' படத்திற்கு பின் ஒரு ஆந்தாலஜி படம் தவிர, மீண்டும் டைரக்‌ஷன் பக்கமே கவனம் செலுத்தாமல் இருந்தார். அதன் பின் மீண்டும் விஜய் சேதுபதியையே இயக்குவார் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போது அடுத்த கதையை ரெடி செய்துவிட்டு, ஆர்யாவிடம் அதைச் சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட ஆர்யா, தேதி இல்லையென ஒதுங்கிவிட்டார். இப்போது அந்த கதையை 'தரமணி' வசந்த் ரவியிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. மனதைக் கவ்வட்டும்!

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

* 'புஷ்பா'வுக்கு அடுத்து தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா நடித்த 'ஆடவல்லு மீகு ஹோகர்லு' ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஹைதாபாத்தில் நடந்த அதன் புரொமோஷன்களில் மீடியாக்களிடம், 'விஜய் தேவரகொண்டாவுடன் காதல்' செய்தியைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார். ''அவருடன் சேர்ந்து நடித்ததில் இருந்து இப்படி வதந்தி கிளம்பிவிட்டது. நானும் அதை மறுத்து சொல்லிச் சொல்லி எனக்கே அலுத்துவிட்டது. திருமணம் பத்தி யோசிக்க இப்ப நேரமில்லை. பெரிய புராஜெக்ட்ஸ் கைவசம் நிறைய இருப்பதால் முழுக்க அதில்தான் என் கவனம் இருக்கு. எனவே வேறு டாபிக்கைக் கேளுங்க'' எனப் பேட்டி ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிடுகிறாராம். நேஷனல் கிரஷ் சொன்னா கேளுங்கப்பா!

* சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தை இயக்கிய பிரசாத் ராமர், சில வருட இடைவெளிக்கு பின் தற்போதும் மீண்டும் ஒரு படம் இயக்கியுள்ளார். அதை பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப் குமார் தயாரித்திருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை. இதனை அடுத்து 'கடைசி விவசாயி' மணிகண்டன் தயாரிப்பிலும் ஒரு படம் இயக்குகிறார் பிரசாத். மகிழ்ச்சி!

* நடிகரும் இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் வழியில் செல்கிறார் சிங்கம்புலி. டி.பி.கே., வடபழனியில் லாட்ஜ் ஒன்று நடத்தி வருவது அறிந்த செய்திதான். அதை போலவே சிங்கம்புலியும் அவரது ஏரியாவான தேனி பகுதியில் ரெஸ்டாரன்ட்டுடன் கூடிய லாட்ஜ் ஒன்றையும் நடத்திவருகிறார். படப்பிடிப்பு இல்லாத நாள்களில் ஹோட்டலுக்கு விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சி.பு. திஸ் இஸ் பிசினஸ்!

கமல்
கமல்

* இப்போதைக்கு கமல் அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம் என்று பார்க்கிறார். கைவசம் இருக்கிற மூன்று படங்களையும் முடித்துவிட்டு, மீடியம் பட்ஜெட் படங்களைத் தயாரிக்க ஏற்பாடுகளை செய்துவிட்டு, அதன்பிறகுதான் அரசியலில் தீவிரமாக இயங்கப் போகிறார். அதற்காக நடுவில் இருக்கிற நேரம் பிரச்னை இல்லாமல் இருக்கவே முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்காக பிரத்யேகமாக வீடியோ போட்டாராம். பிக் பாஸின் பக்கா ப்ளான்!

* நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் கல்யாணம் வரைக்கும் போனார்கள். ஜெய்யின் அப்பா மட்டும் தடையைப் போட அஞ்சலி வீட்டில் அமோக ஆதரவு. இதனிடையே காதல் கசந்து போக, அஞ்சலி வெறுத்துப்போய் ஆந்திராவுக்கே போய் விட்டார். அதன்பிறகு நிறைய படங்களில் கிடைக்கிற வேடங்களில் நடித்துக் கொண்டு நார்மல் ஆகிவிட்டார் அஞ்சலி. இந்தப் பக்கம் இயக்க்நர் சுந்தர்.சி ஜெய்க்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்து அவரை சினிமாவுக்கு மறுபடி இழுத்து வந்திருக்கிறார். அதனால் கால்ஷீட் குளறுபடிகளைத் தவிர்த்து தயாரிப்பாளர்களிடம் நல்ல பெயர் வாங்கி வருகிறார் ஜெய். எல்லாம் நன்மைக்கே!

ஜெய் - அஞ்சலி
ஜெய் - அஞ்சலி

* மறுபடியும் 'இந்தியன் 2' படத்திற்கு விடியல் கிடைத்திருக்கிறது. ஷங்கரும் கமலும் சமீபத்தில் உட்கார்ந்து பேசி முடித்திருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் யூனிட்டிலுள்ள அனைத்து முக்கிய டெக்னீசியன்களும் உட்கார்ந்து பேசப் போகிறார்கள். அதற்கான முன் ஏற்பாடுகளும் நடப்பதால் 'இந்தியன் 2' வந்து விடும் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு முன்னால் யூனிட்டின் முக்கியஸ்தர்களைக் கூட்டிக்கொண்டு ஒரு லண்டன் பயணமும் சாத்தியம் என்கிறார்கள். இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்!

* உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் 'மாமன்னன்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதனிடையே உதயநிதி இன்னும் நான்கைந்து படங்கள் மட்டும் தேர்ந்தெடுத்து செய்துவிட்டு அரசியலின் பக்கம் முழு அளவில் திரும்ப தயாராகிறார். அவருக்கு அதற்கு தோதாக தினமும் கலைஞர், ஆ.ராசா மாதிரியானவர்களின் பேச்சுகள் அரை மணி நேரம் போட்டுக் காட்டப்படுகின்றன. முக்கியமான தலைவர்களை ஸ்டாலின் சந்திக்கும்போது உதயநிதி உடனிருக்க ஏற்பாடாகி அதுவும் தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறது. அடுத்த இன்னிங்ஸ்!

திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்

* சத்யராஜ் மகள் திவ்யா தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார். அந்தக் கட்சியின் ஐ.டி.விங்கில் அதி தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அநேகமாக அடுத்த தேர்தலுக்கு பொள்ளாச்சி கோயம்புத்தூர் தொகுதியில் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். மகளின் இந்த ஆசையை நிறைவேற்ற புரட்சித் தமிழனும் ரெடியாக இருக்கிறார். புரட்சித் தமிழச்சி வர்றார்!

ரிஷிவரன், ரஜினி, ரோகிணி
ரிஷிவரன், ரஜினி, ரோகிணி

* ரகுவரனின் மகன் ரிஷிவரன் வெளிநாட்டில் படித்து வந்தார். இப்போது படிப்பை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார். நடிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தவர் இப்போது அதில் இறங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அப்பா நடித்த படங்கள், உலக சினிமாக்களை எடுத்து வரிசையாக பார்க்கிறாராம். அப்பாவின் உயரத்தில் அருமையான லுக்கில் இருக்கிற அவருக்கு இப்போது நிறைய ஆஃபர்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ரோகிணிக்கோ மகன் சினிமாவில் நுழைவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. அவரது படிப்பு சம்பந்தமான வேலைகளே போதும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனிடையே ரிஷிவரன், மணிரத்னத்தின் கையில் அகப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அலெக்ஸா ப்ளே 'ஒரு நாயகன்... உதயமாகிறான்!'