Published:Updated:

`மாஸ்டர்', `அண்ணாத்த', `வலிமை'... கோலிவுட்டின் சூப்பர் வில்லன் கொரோனா!

மாஸ்டர்
மாஸ்டர்

கோலிவுட்டை அச்சுறுத்தும் கொரோனா என்னும் சூப்பர் வில்லன்!

கஜா, ஓகி என ஒவ்வொரு வருடமும் மக்களை அச்சுறுத்தும் ஏதாவதொரு நிகழ்வு நடந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டின் சார்பாக 'கொரோனா' என்ற வைரஸ், மக்களை மிகுந்த அச்சத்தில் தள்ளியிருக்கிறது. உலகம் முழுக்க ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. சீனாவில் உருவாகிய இந்த வைரஸின் தாக்கம், ஒவ்வொரு நாடாகச்ச் சுற்றிப்பார்த்து தற்போது இந்தியாவையும் எட்டியுள்ளது. அந்த வகையில், கொரோனாவால் கோலிவுட்டில் என்னென்ன மாற்றங்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கோலிவுட்டை அச்சுறுத்தும் கொரோனா...
கோலிவுட்டை அச்சுறுத்தும் கொரோனா...
`` `மாஸ்டர்' விழால விஜய் சேதுபதி ஏன் எல்லோரையும் கலாய்ச்சார்னா..?'' - ஆர்ஜே விஜய்

தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப் படங்களின் படப்பிடிப்பும் கொரோனா காரணமாக சில நாள்களுக்கு முன்னதாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் மட்டும்தான் வரும் 19-ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்தலாம், மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. அதற்கு முன்பே தமிழ்ப் படங்களின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லவிருந்த பல படக்குழு கொரோனாவின் தாக்கம் இருப்பதால் அந்த நாட்டிற்குச் செல்லாமல் தங்களது பிளானை மாற்றியமைத்துள்ளனர்.

இந்தியன் 2

முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில் இந்தியன் தாத்தா சீனாவில் இருப்பதோடு முடியும். அதனால் 'இந்தியன் 2' படத்தின் சில முக்கியமான காட்சிகளை சீனாவில் எடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனாவின் பிறப்பிடமே சீனா என்பதால் அந்தக் காட்சிகளை இத்தாலியில் எடுக்க நினைத்து அதற்கான பணிகளில் தீவிரமாக இருந்தனர். ஆனால், சீனாவுக்குப் பிறகு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி என்பதால் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது படக்குழு. இதற்கிடையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக சில காலம் வேறு படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது.

இந்தியன் 2
இந்தியன் 2

படத்தின் ஷூட்டிங், வரும் 23-ம் தேதி தொடங்கும் என்றும், அதில் இயக்குநர் ஷங்கரும் நடிகர் கமல்ஹாசனும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக படப்பிடிப்பு மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கமல்ஹாசன் உடல்நிலை, அவரின் அரசியல் பிரவேசம் போன்ற காரணங்களால் சொன்ன தேதியைவிட தாமதமாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது 'இந்தியன் 2'.

படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத், பிரியா பவானிஷங்கர் எனப் பல முன்னணி நடிகர்கள் இருப்பதால் அவர்களின் கால்ஷீட் கிடைப்பதிலும் சிக்கல்கள் இருந்தன. ஆனால், அதை எல்லாம் சமாளித்து படம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டால் புதிய சிக்கல்கள் உருவாக அதிக வாய்ப்பிருக்கிறது. படத்தை விரைவாக முடித்து அடுத்த வருடத் தொடக்கத்தில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் இருந்தாலும் இது போன்ற சில விஷயங்கள் அதற்கு வேகத்தடையாக அமைகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்ணாத்த

சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி எனப் பல முக்கிய நடிகர்கள் நடித்துவரும் இந்தப் படத்தின் இரண்டு ஷெட்யூல் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நிறைவுபெற்றது. அதைத் தொடர்ந்து, பியர் க்ரில்ஸுடன் ட்ரெக்கிங், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அரசியல் அப்டேட்ஸ் என ரஜினிகாந்த் பிஸியாக இருந்து வந்த நிலையில், மூன்றாவது ஷெட்யூலை பூனேவில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா காரணமாக அந்த ஷெட்யூலை சென்னையிலேயே எடுக்கலாம் என்று நினைத்தனர். தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு, கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு பல வருடங்கள் கழித்து தன்னுடைய நண்பர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க தயாராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'அண்ணாத்த' எப்போது நிறைவுபெறும் என்பதே யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

மாபெரும் பிரமாண்ட படைப்பான 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த ஷெட்யூல் முடிந்தவுடன், பாண்டிச்சேரியிலும், ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியிலும் அடுத்த ஷெட்யூலில் பெரும்பலான காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவும் மல்டி ஸ்டார் படம் என்பதால் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த படத்திற்குப் போக கால்ஷீட் கொடுத்திருக்கும் நடிகர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

கோப்ரா

கோப்ரா
கோப்ரா
கொரோனா பேண்டமிக்.... அப்போதே கணித்த ஹாலிவுட்!

`கோப்ரா' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவுபெற்று இன்னும் சில பகுதிகள் மட்டுமே எடுக்கப்படாமல் உள்ளன. அதற்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து தலைமையில் ரஷ்யா, பாரிஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றியிருந்த படக்குழு, அங்கே கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தங்களுக்கான மெடிக்கல் செக் அப்பை முடித்த கையோடு சென்னை திரும்பிவிட்டனர். படப்பிடிப்பு ஒரு பக்கம் சென்றுகொண்டிருந்தாலும் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது மார்ச் 31 வரை படப்பிடிப்பு நடத்தப்படாது என்பதால் படம் மே மாதம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும். இந்தப் படத்தை முடித்துவிட்டுதான் விக்ரம், 'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைவார்.

சுல்தான்

'ரெமோ' பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் 'சுல்தான்' படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்திருக்க வேண்டியது. பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் மழை பெய்ததால் படப்பிடிப்பை முடிக்கமுடியாமல் போனது. அதற்குள் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குள் கார்த்தி சென்றுவிட்டதால் அவர் திரும்பி வருவதற்குள் எடுத்தவரை படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்துவிடலாம் என்று நினைத்து பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு மீதம் இருக்கிறதாம். 'பொன்னியின் செல்வன்' தாமதமாவதால் கார்த்தி 'சுல்தான்' படப்பிடிப்பில் கலந்துகொள்வதிலும் தாமதம் ஏற்படும். அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

சுல்தான்
சுல்தான்

இவை போக, ஏகப்பட்ட சிறு பட்ஜெட் படங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. ஹீரோக்களைவிட குணச்சித்திர நடிகர்கள், காமெடி நடிகர்கள் போன்றவர்களின் கால்ஷீட்டில் பெரிய சிக்கல் ஏற்படும். மார்ச் 31 வரை எந்தப் படமும் திரையிடப்படாது என்றும் திரையரங்குகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் ஏற்கெனவே இந்தத் தேதிகளில் தங்களது படத்தை வெளியிட அனுமதி வாங்கியிருந்த படங்களின் வெளியீட்டில் சலசலப்பு ஏற்படும்.

அதனால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் "நாங்கள் வாங்கிய ரிலீஸ் தேதியை அப்படியே தள்ளி வையுங்கள். அந்தத் தேதியில் ஒரு பெரிய படம் வருகிறது என்று அதற்கு முன்னுரிமை கொடுக்காதீர்கள். உதாரணத்திற்கு, படங்கள் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வெளியாகும் என்றால், மார்ச் 21-ம் தேதி வெளியாவதாக இருந்த படத்திற்கு முன்னுரிமை கொடுத்து அந்தப் படங்களை வெளியிட வழிவகை செய்து தர வேண்டும்" என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாஸ்டர்
மாஸ்டர்

இந்தக் காரணத்தால் 'மாஸ்டர்', 'சூரரைப் போற்று' போன்ற படங்களின் வெளியீடும் தள்ளிப்போக அதிக வாய்ப்பிருக்கிறது. 2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் 48 நாள்கள் தமிழ் சினிமா வேலை நிறுத்தம் காரணமாக செயல்படாமல் இருந்தது. அந்த நாள்களில் வெளியிட திட்டமிட்டிருந்த பல படங்கள் நல்ல ரிலீஸ் தேதி கிடைக்காமல் தடுமாறியது. அப்போதாவது இதை ஒருங்கிணைக்க தயாரிப்பாளர் சங்கம் என்று ஒரு அமைப்பு இருந்தது. ஆனால், இப்போது சங்கமே செயல்பாட்டில் இல்லை. அதனால் இந்த ஒழுங்குமுறைகள் யார் மேற்பார்வையில் கீழ் நடக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

படப்பிடிப்பிற்காக வெளிநாடுகள் செல்ல விமான டிக்கெட் பதிவு செய்திருந்தால் அதைச் சில தனியார் விமானச் சேவை நிறுவனங்கள் திருப்பித்தர முடிவு செய்துள்ளது. அந்த நாடுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த மீண்டும் அனுமதி வாங்குவதில் சிரமம் ஏற்படும். தற்போது பெரும்பாலான படங்கள் 50% பைனான்ஸியர்களிடம் பணம் பெற்று தயாரிக்கப்படுபவைதான். படப்பிடிப்பு தாமதமாகி வெளியிட தாமதமாவதால் வட்டி விகிதம் கூடி அதிக பணத்தைத் திருப்பிக் கொடுக்க நேரிடும். இவ்வாறு சிறிதும், பெரிதும், மிகப்பெரிதுமாக பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது கோலிவுட்.

கே.ஜி.எஃப் 2
கே.ஜி.எஃப் 2

கோலிவுட் தவிர மற்ற மொழிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களும் கொரோனா காரணமாக ரிலீஸைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, 'கே.ஜி.எஃப் 2'. மே மாதம் வெளியாவதாக இருந்த இப்படத்தை அக்டோபர் 23-ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். பொதுவாக கோடை விடுமுறையை மையப்படுத்தி நிறைய ஹாலிவுட் படங்கள் வெளியாகும். அப்படி இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாவிருந்த 'Fast and Furious 9' திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் முதல் வாரம் வெளியாக இருந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'No time to Die' படத்தை அக்டோபர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஆக, சினிமா மட்டுமல்ல, உலகில் இருக்கும் அனைத்துத் தொழில்களுக்கும் கொரோனா ஒரு பேரிடி என்பதில் சந்தேகமில்லை.

கொரோனா வேரறுக்கப்பட்டு உலகம் தன் இயல்பு நிலைக்கு எப்போது மாறும் என்பதற்கான பதில் காலத்திடம்தான் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு