Published:Updated:

`வடிவேலுவுடன் நடிச்ச படத்துக்கு பாராட்டு, டிரெட் மில் பரிசு!' - விவேக் நினைவுகள் பகிரும் கோவை சரளா

விவேக் உடன் கோவை சரளா ( Photo: Vikatan / Karthikeyan.K )

ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்து, அவருடன் நகைச்சுவை நடிகையாக அதிக படங்களில் நடித்தவர் கோவை சரளா. விவேக்கின் மறைவுச் செய்தியால் வேதனையில் இருப்பவர், அவருடனான நட்பு குறித்துப் பகிர்ந்தார்.

`வடிவேலுவுடன் நடிச்ச படத்துக்கு பாராட்டு, டிரெட் மில் பரிசு!' - விவேக் நினைவுகள் பகிரும் கோவை சரளா

ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்து, அவருடன் நகைச்சுவை நடிகையாக அதிக படங்களில் நடித்தவர் கோவை சரளா. விவேக்கின் மறைவுச் செய்தியால் வேதனையில் இருப்பவர், அவருடனான நட்பு குறித்துப் பகிர்ந்தார்.

Published:Updated:
விவேக் உடன் கோவை சரளா ( Photo: Vikatan / Karthikeyan.K )

நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு என்ற அதிர்ச்சி செய்தியும், இன்று அதிகாலை அவர் மறைந்தார் என்ற பேரதிர்ச்சி செய்தியும்தான் தமிழகத்தில் தலைப்புச் செய்தியாக உலவுகிறது. மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை கலைஞராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் உழைத்தவர். பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோரின் இறப்பிலிருந்து மீளாத தமிழ் சினிமாவுக்கு, விவேக்கின் மறைவு பெரும் துயரம். ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்து, அவருடன் நகைச்சுவை நடிகையாக அதிக படங்களில் நடித்தவர் கோவை சரளா. விவேக்கின் மறைவுச் செய்தியால் வேதனையில் இருப்பவர், அவருடனான நட்பு குறித்துப் பகிர்ந்தார்.

விவேக்
விவேக்

``தமிழ் சினிமாவுல நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், ஒவ்வொருத்தருக்கும் தனிச்சிறப்பு உண்டு. அதன்படி, `சின்ன கலைவாணர்'னு சொல்றதுக்கு ஏற்ப, விழிப்புணர்வு கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால தனி முத்திரை பதிச்சார். விழிப்புணர்வா அமையும்னு நல்ல எண்ணத்துடன்தான் தடுப்பூசி போட்டுகிட்டார். சாப்பாடு, உடற்பயிற்சி, யோகானு உடல்நலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நபர்தான். உடல் ஆரோக்கியம் பத்தி என்கிட்ட நிறைய பேசியிருக்கார். உடல்நலப் பராமரிப்பு பத்தி அவருக்கே நிறைய விஷயங்கள் தெரியும். நிறைய மருத்துவ நண்பர்களையும் கொண்டிருந்தார். ஆனா, நம்ப முடியாத வகையில அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருக்கு.

எந்த இடத்துல மிஸ் ஆச்சுன்னு தெரியல. அவருக்கு நேத்து மாரடைப்பு ஏற்பட்ட தகவலைக் கேட்டதுமே அதிர்ச்சியாவும் கஷ்டமாவும் இருந்துச்சு. உடனே அவரோட குடும்பத்தினருக்கு போன் செஞ்சேன். அவங்க ஆஸ்பத்திரியில இருந்ததால, விவேக் குடும்பத்தினர்கிட்ட பேச முடியல. அவர்கூட வேலை செஞ்ச நினைவுகள்தான் நேத்துல இருந்து எனக்கு ஞாபகத்துக்கு வருது. நிச்சயம் குணமாகி வந்திடுவார்னுதான் இன்னைக்குக் காலையில வரைக்கும் நம்பிக்கையுடன் இருந்தேன். காலையில எழுந்ததுமே அவர் இறந்துட்ட செய்தியைத்தான் முதல்ல கேள்விப்பட்டேன். அப்போ ஏற்பட்ட அதிர்ச்சியில இருந்து இன்னும் மீள முடியல. அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியல" என்று அமைதியான சரளா, நிதானத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

விவேக்
விவேக்

``அவரும் நானும் 1980-கள்லதான் சினிமாவுல அறிமுகமானோம். சின்னச் சின்ன ரோல்கள்ல நிறைய படங்கள்ல நடிச்சோம். இந்த நிலையில, 1990-கள்ல `தொட்டில் குழந்தை' படத்துலதான் நாங்க முதன்முதல்ல இணைஞ்சு நடிச்சோம். தலக்கோணத்துல ஷூட்டிங். நடிகரா பெயர் எடுக்க அவர் முயற்சி செய்துகிட்டு இருந்த காலகட்டம். அப்போ நிறைய படங்கள்ல நான் நடிச்சிருந்தேன். `நடிகரா அடையாளத்துக்காக முயற்சி பண்ணிட்டிருக்கேன். உங்ககூட சேர்ந்து நடிக்கவும் ஆசைப்படுறேன்'னு சொன்னார். `நிச்சயமா நடிக்கலாம்'னு சொல்லி அவருக்கு வாழ்த்து சொன்னேன். அதுதான் எங்க முதல் சந்திப்பு. அந்தப் படத்துல எங்களுக்குப் பெரிசா காம்பினேஷன் இல்ல. அப்புறம்தான் பல படங்கள்ல சேர்ந்து நடிச்சோம்.

கார் வெச்சிருந்தால்தான் அப்போல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்குக் கூடுதல் மதிப்பும், மார்க்கெட் நிலவரம் நல்லா இருக்குன்னும் சொல்வாங்க. ஆனா, எங்களுக்குச் சொந்த கார் இல்லாம சிரமப்பட்டிருக்கோம். எனக்கு எங்கிருந்தாவது வண்டி கிடைக்கும். அவர் காருக்காகக் காத்திருப்பார். அவரையும் அதே கார்ல ஏத்திகிட்டு, பல கலைஞர்களும் ஒண்ணா பயணிப்போம். ஒண்ணா நடிக்கும்போது, பர்சனல் விஷயங்களையெல்லாம் மனம்விட்டுப் பேசுவோம். நம்மகூட நடிக்கும் புதுமுக கலைஞர்களை நாம எந்த வகையிலயும் காயப்படுத்தக் கூடாதுனு சொல்லிப்போம்.

விவேக்
விவேக்

`உங்களுக்குனு தனி அடையாளம் கிடைக்கிற மாதிரி, நடிப்பு ஸ்டைலை மாத்திக்கோங்க'ன்னு அவர்கிட்ட சொல்லியிருக்கேன். அதைக் கடைப்பிடிச்சு, சீக்கிரமே பெயர் எடுத்தார். அதையும் என்கிட்ட பலமுறை சொல்லியிருக்கார். `படிக்காதவன்' படத்துல தெலுங்கு பேசி வித்தியாசமா நடிச்சிருந்தார். அந்தக் காட்சிகளை ரொம்பவே ரசிச்சேன். அவரும் நானும் பல படங்கள்ல இணைஞ்சு நடிச்சிருக்கோம். அதுல, `ஷாஜகான்' படம் பெரிசா பிரபலமாச்சு. நல்லா நடிச்சிருந்தாலோ, டயலாக் பேசியிருந்தாலோ, மனம்விட்டுப் பாராட்டுவார். எல்லாக் கலைஞர்களுடனும் சுலபமா மிங்கிள் ஆகிடுவார். ரிகர்சல் பார்க்கும்போதே, காமெடி வசனத்தைக் கேட்டு நல்லா சிரிச்சு முடிச்சுடுவோம். அப்புறம் சிரிக்காம கன்ட்ரோல் பண்ணி ஆன் த ஸ்பாட்ல நடிச்சுடுவோம்.

உடன் நடிக்கும்போது நிறைய ஆலோசனைகள் கொடுப்பார். `ஷாஜகான்'ல `சிநேகிதனே'னு பாடிக் கூப்பிடுற போர்ஷஷன்ல வித்தியாசமான வாய்ஸ் மேனரிஸம் செஞ்சேன். நல்லா இருக்குனு அதையே ஃபைனல் பண்ணச் சொன்னார். எங்களோட ஜோடி காம்போ படங்கள் பலவும் ஹிட் ஆகியிருக்கு. அதைவிடவும், வடிவேலுவுடனான என் ஜோடி காம்போவுக்குப் பெரிய புகழ் கிடைச்சது. ஷூட்டிங்லயோ, வெளியிடத்துலயோ சந்திக்கும்போது, `வடிவேலுவும் நீங்களும் சேர்ந்து நடிச்ச காமெடி காட்சிகள் சூப்பரா இருந்துச்சு'ன்னு பொறாமை எண்ணம் துளியும் இல்லாம மனம்விட்டுப் பாராட்டுவார். அப்போ அவரோட பேச்சு ரசிகர் மாதிரிதான் இருக்கும்" என்பவர், `பூவெல்லாம் உன் வாசம்', `விஸ்வநாதன் ராமமூர்த்தி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் விவேக்குடன் இணைந்து நடித்திருக்கிறார்.

கோவை சரளா
கோவை சரளா

``ஒருமுறை விவேக் சாரோட குடும்பத்துடன் நானும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் போனேன். அப்போதும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆக்கபூர்வமா நிறைய விஷயங்கள் பத்தி பேசினோம். இன்னொருத்தரைப் பத்தி புரளி பேச மாட்டோம். லேட் நைட் ஷூட்டிங் முடிஞ்சு வருவேன். சரியான தூக்கம்கூட இருக்காது. காலையில எழுந்ததுமே ஷூட்டிங் கிளம்புவேன். `கொஞ்சநேரம் உடற்பயிற்சி செஞ்சுட்டு ஷூட்டிங் போங்க'ன்னு எனக்கு டிரெட் மில் ஒண்ணு பரிசா கொடுத்தார். நகைச்சுவை கலைஞர்களா எங்க தனிப்பட்ட கஷ்டங்களை வெளிக்காட்டிக்காம, மக்களைச் சிரிக்க வைக்கிறது கஷ்டமான வேலை. அதன்படி ஒரே காலகட்டத்துல அறிமுகமாகி இத்தனை வருஷங்களா சினிமாவுல நாங்க சேர்ந்தே பயணிச்சிருக்கோம்.

ஒவ்வொரு படத்துக்கும் நிறைய மெனக்கெடுவோம். சுத்தியும் பத்து பேரை உட்கார வெச்சு, டயலாக் சொல்லிக்காட்டுவோம். நகைச்சுவை வசனங்களுக்கு அவங்க எல்லோரும் சிரிக்கிறாங்களான்னு கவனிப்போம். சிரிப்பு குறைவா இருந்தா, உடனே டயலாக்கை மாத்திடுவோம். தன்னோட குழுவினருடன், ஒவ்வொரு படத்துக்கும் அவர் ரொம்பவே மெனக்கெடுவார். நிறைய போராட்டங்களையும் புறக்கணிப்புகளையும் கடந்துதான் சினிமாவுல பலரும் சாதிச்சிருக்காங்க. அந்தச் சூழலைக் கடக்க நிறைய பலம் தேவை. திறமையுடன் அதிரஷ்டமும் இருந்தால்தான் சினிமாவுல ஜொலிக்க முடியும். அந்த வகையில விவேக்கும் நிறையவே மனக்கஷ்டங்களைக் கடந்துதான் சினிமாவுல ஜெயிச்சார். அதெல்லாம் ஓரளவுக்கு எனக்கும் தெரியும். அந்த வெற்றியை நிதானமா உணர்றத்துக்குள்ள, அவர் இறந்துட்டார்.

விவேக்
விவேக்

சக ஆர்டிஸ்ட்டை பாராட்ட நல்ல மனசு இருக்கணும். அது அவருக்கு நிறையவே இருந்துச்சு. அவரோட தனித்துவமான நடிப்புக்கு நானும் ரசிகை. அவரோட வெற்றிடத்தை யாரும் நிரப்ப முடியாது. நல்ல கலைஞர், கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட் அவர். நடிப்புடன், விழிப்புணர்வு, சமூக சேவைனு நிறைய வேலைகள் செஞ்சார். இவர் இடத்துக்கு யாரும் வர முடியாது. அவர் புகழ் நீங்கா புகழாக இருக்கும். விவேக் நம்மகூட இல்லாதது, திரையுலகுக்கு மாபெரும் இழப்பு" என்று கண்ணீருடன் முடித்தார் சரளா.